புதன், 29 பிப்ரவரி, 2012

சுபிக்ஷ தின வாழ்த்துக்கள்


ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் தேதியை, ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலே , "சுபிக்ஷ தினமாக " கொண்டாடுவார்கள். " Prosperity Day  ". அன்றைய தினத்திலே , ஸ்ரீ அன்னை தனது ஆசிரம சாதகர்களுக்கு , அந்த மாதத்திற்கான சோப்பு , உடை போன்ற பொருட்களை வழங்குவார்கள்.




ஸ்ரீ அன்னை மலர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் , நாம் அறிந்ததே. ஸ்ரீ அன்னை சுபிக்ஷத்திற்க்கான மலர்களாக
இளம் சிவப்பு நிறமுடைய நாகலிங்க மலரையும் , 
வெள்ளை அல்லி மலரையும் மற்றும்
அடர் சிவப்பு அல்லி மலரையும்  குறிப்பிட்டுள்ளார்கள். 


நமது பக்தி யுகமும் சுபிக்ஷதினத்தை கொண்டாடுகிறது.
அனைவருக்கும் சுபிக்ஷ தின வாழ்த்துக்கள் .

ஓம் ஆனந்த மயி 
சைதன்ய மயி
சத்ய மயி 
பரமே
 

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளிய கனக தார ஸ்தோத்திரம்

x
அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:


முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:


ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:


பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:


காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:


ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:


விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:


இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:


கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை


ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை


நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை


நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே


யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே


ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்


திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்


கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:


ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா: 

கனக மழை


ஆதி சங்கரர்
பிறப்பிலேயே 
ஒரு பரம ஞானி .

தினம்
பிக்ஷை கேட்டு செல்கிறார்
தம் தர்மத்தை பேணி .

அன்று
அவர் பிக்ஷை கேட்டுச் சென்ற வீடு ,
நல்லவர்களின் கூடு .

அங்கு
 நாதமும்
வேதமும்
 நாளும் ஒலித்தன.   

 "பவதி பிக்ஷாம் தேஹி ! "
என அகம் நோக்கி
குரல் கொடுத்தார் சங்கரர்.

பிக்ஷை குரல் கேட்டு
அந்த இல்லாளின்
உள்ளம் குளிர்ந்து
"இன்றைய அதிதி வந்தார்"  என்று.

அதுவரை இறை உணர்வினில்
உறைந்துக் கிடந்தவள்
விரைந்து எழுந்தாள்.

அவள் கைகள் பரபரத்தது.
அவள் கை பட்டு
தானிய பானை சரசரத்தது .

வந்த அதிதிக்கு 
ஒட்டிய வயிறு நிறைய
சட்டியில் இருப்பதை
அளித்திட
ஒவ்வொரு சட்டியிலும்
கையினை விட்டு  அளைந்தாள்.
திடுக்கிட்டு மனம் உளைந்தாள்.

ஆம் .
அக்கினியை போற்றும்
அந்த இல்லத்தின்  பானைகளில்
நிறைந்து இருந்தது
வாயு மட்டுமே.

அந்த மாது
திகைத்தாள் .
உள்ளுக்குள் அழுதாள் ,
அதிதிக்கு  ஈய இயலா பாவி ஆனேனே என்று !

திக்கற்றவருக்கு தெய்வமே துணை
என
விண் நோக்கி தொழுதாள்.

அப்போது
அங்கொரு பானையிலே
ஒரு நெல்லிக் கனியினைக் கண்டாள்.
தன் 'கலி தீர்ந்ததென'` பேருவகைக் கொண்டாள்.

ஆயின் இதை எப்படி ஈவது
என மயங்கினாள்
பிக்ஷை இட தயங்கினாள்

ஆயின்
வேறு வழியின்றி
வாசல் விரைந்தாள் .
அதிதியைத் தொழுதாள்.

கனியினை ஈயும்போது நாணினாள்,
தன் இல்லாமை நிலை எண்ணி.

தலை தாழ்த்தி ,
உடல் கோணினாள்
தன் விதியினை  எண்ணி .

சங்கரர்
அம்மாதினைப் பார்த்தார்.
அவள் ஈகை குணத்தால் 
உள்ளம் பூத்தார்.

அவள் நிலைக் கண்டு
உள்ளம் கனிந்தார்.
செல்வ திருமகளை
மனதினால் பணிந்தார்.

தன் திருவாயினால்
ஸ்ரீ தேவியியை
கவியினால் புகழ்ந்தார். 

அன்னை ஸ்ரீ தேவி
சங்கரரின் பாட்டினால்
உள்ளம் குளிர்ந்தாள்.

மெல்ல முறுவலித்தாள்.
விண்ணின்று ஒரு கனக மணி
துளியாய் விழுந்தது.

அடுத்த அடுத்த துதிகளால்
தேவி   கனிந்தாள்.
அகம் குளிர்ந்தாள் .

கனக மணி சாரலாய் விரிந்தது.

தொடர்ந்த போற்றுதலால்
அன்னை முகம் மலர சிரித்தாள்.
 அவள் சிரிப்பினால்
விண்ணின்று
கனக மழை பொழிந்தது.

அந்த வீடெங்கும்
பொன்னொளி படர்ந்தது.
அங்கே இல்லாமை தொலைந்தது.
நாளும் தருமம் புரிந்திட
நல்ல செல்வம் நிறைந்தது.  

மங்களம் !
மங்களம் !
மங்களம் !

இந்த சரிதம்
நாளும் 
படிக்க, படிக்க
நம் 
வாழ்விலே வளம் சேரும்.
நல்ல நலம் சேரும்.
தெய்வ திரு சேரும். 

வாருங்கள்,  நாமும்
அந்த நாரணனின் தேவியினைப்
போற்றுவோம் !

"தருணம் வந்தது"


1956 , பெப்ரவரி 29 ...  
இனிய மாலையில் ...

உடலை உருமாற்றும்
விளையாட்டுக் கூடத்திலே,
உலகையே உருமாற்றும்
உன்னத நிகழ்விற்க்காய்....

தன் சாதகர் குழுவோடு
சத்சங்கமமாய் அமர்ந்திருந்தார்  ஸ்ரீ  அன்னை.


" இன்னது நிகழும் " என
ஆங்கே யாரும் அறிந்திலர்
அவளைத்தவிர  ..

அன்னை
அனைவருக்கும்  மையமாக அமர்ந்தார் .
அனைவரும் இப்போது
'சூரிய காந்தியாய்' 
அவரை  நோக்கி .

ஸ்ரீ அன்னை ,
உயர் உண்மையின் வரவிற்காய்
எல்லோரையும்
ஒருமுறை உற்று நோக்கினார்.
 திறவாய் இருக்கச்  சொன்னார்.
 அனைவரின் அகத்திலும்  புகுந்தார்.

இப்போது
ஒவ்வொரு  சாதகரின் உள்ளேயும்
அவளே  "சாதனை" நாயகி !

அவர்
விழி மலர் மூடினார்.
மெய்யுணர்வை நாடினார்.
சிருஷ்டியின் வளர்ச்சிக்காய்
சிந்தையை கூராக்கினர்.

அவரின் அக   கண்கள்
மெல்லத் திறந்தன.
விழிகள் இரண்டும்
சூரிய-சந்திரராய்
விண்ணோக்கி உயர்ந்தன.
பின் 
மகிழ்விலே மலர்ந்தன.

அங்கே
பர  வெளியிலே
புதிய உலகிற்காய்   
பொற் கதவு ஒன்றைக்  கண்டார்.
அதை தகர்த்திட ..
உலகினை உயர்த்திட...
பொற் சுத்தியல் ஒன்றும் கண்டார்

"தருணம் வந்தது"
 என அன்னை

உவகை  கொண்டார்.

அக்கணத்திலே
ஸ்ரீ அரவிந்தரின் தியாகம்
மனதிலே ஒளிர்ந்தது.


அன்னை ,
வெற்றி திருமகளாய்
வீறு கொண்டு எழுந்தார்..
தங்க தாரகையாய்
சுத்தியலை  தாங்கினார்
பொற்கதவு தூள் தூளாக  அதை ஓங்கினார்


பட படவென
கதவினை உடைத்தார் .

கதவு  உடைந்தது,
பல நூறாய் சிதைந்தது.
சத்திய வாசல் திறந்தது.

அதிமன  சக்தி 
சட சடவென இப்பாரிடை
பொன்னொளி  வெள்ளமென பொழிந்தது.



அற்புதம்! அற்புதம் !!
இங்கே ..
சத்திய ஜீவியம் பிறந்தது. 
புதிய பரிணாம விதை முளைத்தது.
மரணத்தை வெல்லும் யோகம் துளிர்த்தது.

ஸ்ரீ அன்னையின்  முகத்திலோ
வெற்றி புன்னகை பொலிந்தது.

இது
                 " இறைவனின் நாள் "
எனும் பிரகடனம்
அன்னையிடம் இருந்து பிறந்தது !

இனி ,
பாரெங்கும்
நாளும் ....
தவம் உயரும்  .
அறிவு வளரும் .
தீமை நலியும்,
வலிமை கூடும்.
சத்தியம் ஜெயிக்கும். 
 இதன் வீரியம் அறியா உலகம்
புதிய வீச்சினைக் கண்டு வியக்கும்.

சின்னஞ் சிறு கிளியே


 ( ஸ்ரீ அரவிந்த அன்னை குழந்தை வடிவினில் )
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! 

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே! 

ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! 

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ! 

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.
 
இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?
 
மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
செல்வம் பிறிது முண்டோ? 
- பாரதி 

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பொன் மாலை பொழுது




 இன்று பிப் 29 . நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் தினம் என்று தான் உலகியல் நோக்கிலே நாம் கருதுகிறோம். ஆயின் இந்த தினத்திலேதான் பிரபஞ்சத்தில்  ஆன்மிக அத்தியாயத்தில் முக்கியமான ஒரு பக்கம் எழுதப்பட்டது. 

ஸ்ரீ அரவிந்தர் கல்கொத்தாவில்  , சுதந்திரப்  போராட்டக் காலத்தில் , பொய்யான  ஒரு வழக்கிலே கைது செய்யப்பட்டு , அலிபூர் சிறையிலே அடைக்கப் பட்டார். அந்த சிறை  வாசம் , அவருக்கு ஆன்மிக கர்ப்ப வாசமாக அமைந்தது. 

அங்கே தினம் தினம் புதிய ஆன்மிக அனுபவங்கள் அவருள்  மலரத் துவங்கின. ஸ்ரீ கிருஷ்ணரின் நிதரிசனமான தரிசனம் அங்கே அவருக்கு ஏற்ப்பட்டது. ஸ்ரீ அரவிந்தரின் யோக சாதனை தீவிரமடையத் தொடங்கியது. அச்சமயம் சுவாமி விவேகானந்தர்   , ஸ்ரீ அரவிந்தருக்கு சூட்சுமமாய் வழி காட்டினார். ஆன்மிக இலக்கில் ஸ்ரீ அரவிந்தர் அடையவேண்டிய இலக்கினை சுட்டிக் காட்டினார். 

உலக வரலாற்றிலே , உலக நன்மையின் பொருட்டு தனது சுய மோட்சத்தை துறந்தவர்களில் சுவாமி விவேகானந்தர் முக்கியமானவர். தனது  சாதனையின் ஆரம்ப காலங்களில் சுவாமி விவேகானந்தர், தனுக்கு உயர்ந்த சமாதி நிலையினை  அருளுமாறு , தனது  குருவான ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அடிக்கடி கேட்பது உண்டு. 

ஆயின் ஸ்ரீ இராமகிருஷ்ணரோ " உனது அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் , உனது உயர் அனுபவம் பெறுவதற்கான கதவு பூட்டப் பட்டு, அதன் சாவி என்னிடமே இருக்கும் " என ஒவ்வொரு முறையும் மறுத்தே வந்துள்ளார். 

பிற்காலத்தில்  சுவாமி விவேகானந்தரே   "இவ்வுலகின் ஒவ்வொரு ஜீவனும் மோக்ஷம் அடையும் வரை தனக்கும் மோக்ஷம் தேவை இல்லை" என தன்னுடைய  சுய மோக்ஷத்தையே மறுத்துவிட்டு, அனைவருக்குமான மோக்ஷத்திற்கு வழி என்ன  என அறிய தனது சாதனையைத் தொடர்ந்தார்.  

தனது சரீரத்தை துறந்த பின்னரும், தனது சாதனயை தொடர்ந்த சுவாமி விவேகானந்தர், அனைத்து ஜீவர்களும் உய்வு பெரும் , உயர்ந்த சாதனை மார்கத்தை  மேற்கொள்ளும்படியாக ஸ்ரீ அரவிந்தரை சூட்சுமமாக வழிநடத்தினார். ஸ்ரீ அரவிந்தருக்கு, இந்த வையகமே வாசுதேவ ஸ்வரூபமாக இருக்கும் அனுபவம் கிட்டியது. ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பப்படி ஸ்ரீ அரவிந்தர் மீது சுமத்தப்பட்ட வழக்கு , பொய் வழக்கு என தீர்ப்பானது. ஸ்ரீ அரவிந்தர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உத்தரவின்படி பாண்டிச்சேரி வந்த ஸ்ரீ அரவிந்தர் தனது சாதனையை மேலும் தொடர்ந்தார். ஸ்ரீ அன்னை, பாண்டிக்கு  வந்து ஸ்ரீ அரவிந்தரை சந்தித்த பின்பு, இருவரது யோக சாதனையும் மானுடம் முழுவதற்குமாய் மலரத் துவங்கியது. 

தனது சாதனையின் முக்கிய இலக்கான அதி மானச சக்தியை புவிக்கு கொண்டுவந்து நிலை நிறுத்திட விரும்பினார் ஸ்ரீ அரவிந்தர். தம்மால் அதிமான உலகில் இருந்து உயர் சக்தியினை உலகிற்கு அனுப்பிட இயலும் என உணர்ந்த ஸ்ரீ அரவிந்தர் , அதற்காக தனது சரீரத்தை தியாகம் செய்யவும் துணிந்தார். 

ஸ்ரீ அன்னை ஒருவரால் மட்டுமே அந்த சக்தியினை உலகிலே நிலை பெற செய்ய இயலும் என உணர்ந்த ஸ்ரீ அரவிந்தர் , ஸ்ரீ அன்னையிடம் அந்த பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு, 1950 டிசெம்பர்  5 ஆம் தேதி  அன்று தனது சரீரத்தினைத் துறந்தார்.

 டிசெம்பர்  9 ஆம் தேதி வரையிலும் ஸ்ரீ  அரவிந்தரின் உடல் பொன் ஒளியால் சூழப்பட்டு விளங்கியது. டிசம்பர்  9  அன்று ஸ்ரீ அரவிந்தரின் உடலை சமாதியில் வைத்தனர். அதன்பின்  ஆசிரமத்தில் அதிமன இறக்கம் எப்போது நிகழும் என சாதகர்களால் எதிர்பார்க்கப் பட்டு வந்தது.

(  ஆசிரமத்தின் விளையாட்டு திடல் )

1956 பிப் மாதம் 29  தேதி அன்று மாலை ஆசிரமத்தின் விளையாட்டு  மைதானத்தில் ஸ்ரீ அன்னை சாதகர்களுடன்  தியானத்தில் ஈடுபட்டு இருந்தார். அந்த இனிய மாலை பொழுதினிலே , அமைதியான தியான சூழலிலே , ஸ்ரீ அன்னை ஒரு காட்சியினைக் கண்டார். 

அக்காட்சியிலே,  தம் முன்னால் மிகப் பெரிய பொன்னாலான கதவும் , பொன்னாலான சுத்தியலும்  இருப்பதைக் கண்டார். அந்த கதவு அதிமன  இறக்கதிற்கான கதவு என்பதனை உள்ளுணர்வால் உணர்ந்த ஸ்ரீ அன்னை , அந்த சுத்தியலைக் கொண்டு அந்த  பொற்கதவினை சுக்கல் சுக்கலாக உடைத்தார். 

அடுத்தக் கணத்திலே அதிமன சக்தியான பொன் ஒளி வெள்ளமென இப்புவி மீது பாயக் கண்டார். உலக ஆன்மிக வராற்றிலே முக்கியமான மைல் கல்லாக இந்த நிகழ்வு அமைந்தது. இந்த நிகழ்விற்குப் பிறகு , உலகெங்கும் உள்ள எல்லாவித சாதகர்களின் சாதனையிலும் விரைவான முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.

அன்னை அந்த நாளினை இறைவனுக்கான நாளாக அறிவித்து , பிப் 29  என்பதனை "கோல்டன் டே " என பெயரிட்டார்கள். 

அன்று முதல் ஒவ்வொரு  பிப் 29 ம் , ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் முக்கியமான தரிசன நாளாக கருதப் படுகிறது. 

ஸ்ரீ அரவிந்த அன்னையே சரணம் !   

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

ஸ்ரீ ரா.கணபதி


ஸ்ரீ ரா.கணபதி அவர்களைக் குறித்த மேலும் தகவல்கள் பெற இங்கே கிளிக் செய்யவும்

http://anmikam4dumbme.blogspot.in/2012/02/blog-post_22.html
http://anmikam4dumbme.blogspot.in/2012/02/2_24.html

இதய அஞ்சலி

ஆன்மிக எழுத்தாளர் ஸ்ரீ . ரா.கணபதி அவர்கள் கடந்த திங்கள் அன்று சென்னையில் காலமானார்கள். 
 


"நடமாடும் தெய்வம்" என போற்றப்பட்ட மறைந்த காஞ்சி பெரியவரின் உபதேச தொகுப்பான தெய்வத்தின் குரல் எனும் நூலினை எட்டு பாகங்களாக தொகுத்து உலகிற்கு அளித்த பெருமை இவரையே சாரும். 

அவரது எழுத்து நடை நம் உணர்வுகளை மேல் நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் உடையவை. எளிய நடையிலே உயர்ந்த ஆன்மிக கருத்துக்களை கூறுவதில் வல்லவர். 

மகான்களின் வரலாறுகளை எழுதும்போது , அந்த மகான்களின் காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று , அவர்களுக்கு அருகிலேயே நம்மை அமரவைதுவிடும் ஆற்றல் அவரது எழுத்துக்கு உண்டு. 

பத்திரிக்கைகளில் அவரது எழுத்து தொடராகவும் வெளி வந்துள்ளது.  தன் தனிப்பட்ட வாழ்வினிலும் சிறந்த ஆன்மிகவாதியாக திகழ்ந்த அவர் , ப்ரம்ஹசாரியாகவே   வாழ்ந்துள்ளார். அவர்களின்  நெகிழ்ந்த இறை பணிக்கு சாட்சியாகவே,  அவர்கள்   சிவ ராத்திரி அன்று இறைவனடி சேர்ந்துள்ளர்கள்.
ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டிய அவரது ஒப்புயர்வற்ற படைப்புகளில் சில :

1 . தெய்வத்தின் குரல்   - வானதி பதிப்பகம்
    இது காஞ்சி மஹா பெரியவரின் உபதேச தொகுப்பு ஆகும்.

2 . அம்மா ( ஸ்ரீ சாரதா தேவியின் வாழ்க்கை சரிதம் ) - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்  வெளியீடு 
ஸ்ரீ  இராமக்ருஷ்ணரின் துணைவியாரும், தூய அன்னையும் , பராசக்தியின் அவதாரமுமாகிய ஸ்ரீ சாரதா தேவியின் வாழ்க்கை சரிதம். ஒவ்வொரு இந்திய பெண்மணியும் அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புத சரித்திரம். அவரது சரிதம் படிக்கும்போதே நம்முள் பவித்திரமான உணர்வு கமழ்வதை உணர முடியும். 

 3. அறிவுக்கனலே , அருட்புனலே -  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு
ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானதர் ஆகியோரின் இணைந்த வாழ்க்கை சரிதம்.

4.  விவேகானந்தம்  - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்  வெளியீடு 
சுவாமி விவேகானதரின் வாழ்க்கை சரிதம்
 5. சுவாமி - ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் வாழ்க்கை சரிதம்

6. அன்பு வேணுமா அன்பு - வானதி பதிப்பகம் 

7. காமாக்ஷி கடாக்ஷி -  வானதி பதிப்பகம்

8. காமகோடி  ராமகோடி - வானதி பதிப்பகம்

9. ஸ்ரீ ரமண மணம் (பாகம் I & II )

10.  ஜய ஜய சங்கர  - வானதி பதிப்பகம்

11. ஒரு புதிய சிவாநந்த லஹரி - வானதி பதிப்பகம்

இறைவனடி சேர்ந்த ஸ்ரீ.ரா.கணபதி அவர்களின் ஆன்ம சாந்திக்காக பக்தி யுகம் பிரார்த்திக்கின்றது. 

வியாழன், 23 பிப்ரவரி, 2012

பாபநாசம் அருள்மிகு கோடி லிங்க ஆலயம்


பாபநாசம்  சிவன்  கோவில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 52 k.m   தொலைவில் அமைந்துள்ளள்ளது. இது  நவ கயிலாயத்தில் முதல் ஸ்தலமான சூரிய ஸ்தலமாகும். அகத்தியர் பெருமானுக்கு சிவனார் திருமணக் காட்சி அருளிய அற்புத ஸ்தலம். பொதிகை மலையின் அடிவாரத்திலே அமைந்திருக்கும் ஆலயம். கோவிலை சுற்றிலும் நிறைய ஆன்மிக கேந்திரங்கள் உள்ளன. 


இந்த ஆலயத்தினைக்    கடந்து பொதிகை மலையின் மேலே போகும் பாதையில் பயணப் பட்டால், அகத்தியர் தீர்த்தம் என்னும் அருவியினை அடையலாம். அதிகாலை முதல் பின்மாலை 6 p.m  வரையிலும் சுற்றுலா பயணிகள் இந்த அருவியிலே குளித்து மகிழ்கின்றனர்.
இங்கு செல்ல பொதிகையடியில் இருந்து , வேன் செல்கிறது. மலை பாதை வழியாக நடந்தும் செல்லலாம்.                  ( மலை பாதை )


 
இந்த அருவியின் அருகிலேயே  கோடி லிங்க ஆலயத்திற்குச் செல்லும் படிகள் துவங்குகின்றன.படிகளின் எண்ணிக்கை குறைவு தான். கொஞ்சம் ஏறியவுடன் ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாவின் ஆசிரமம் வருகிறது. 
(தாமிரபரணி ஆறு)









இவர் பல ஆண்டுகாலமாக தனிமையில் இந்த வனத்திலே இருந்து தவம் புரிந்த , தற்கால பெண் துறவி ஆவார்.








சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்தான் அவர்  சமாதி அடைந்தார். தாமிரபரணி நதியிலே பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் கூட அந்த அம்மையார்  தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டது இல்லை . 




 (யோகினி  கிருஷ்ணவேணி அம்மா )


அந்த ஆசிரமத்தைக் வணங்கி மேலே சென்றால், அற்புதமான ஒரு சூழலிலே ஸ்ரீ கோடிலிங்க ஈஸ்வரரின் ஆலயத்தினை அடையலாம். 






ஆலயம் என்றால், உள்சுற்று , வெளிசுற்று எல்லாம் கிடையாது. ஒரு புறம் மலை, மறுபுறம் நதியின் மடு என இயற்க்கை சூழலில் அமைந்த ஆலயம். தொண்ணூறுகளில் நாங்கள் சென்றபோது ஆலயம் என்ற அமைப்புக் கூடக் கிடையாது.  ஆனால் தற்போது சிறு மண்டப அமைப்பிலே ஆலயமாக கட்டியுள்ளனர். 

ஸ்ரீ கோடிலிங்கம், ஸ்ரீ  லோகநாயகி அம்பாள், ஸ்ரீ அகஸ்தியர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. இவை தவிர , மலையிலே பாறைகளில் காணும் இடங்களில் எல்லாம் சிற்பங்கள் ,சிற்பங்கள்,சிற்பங்கள்...









 
                                                     ஸ்ரீ கோடி லிங்க ஈசர் ஆலயம்


 ஸ்ரீ அகஸ்திய மகரிஷி சிலை .முன்பு வெட்ட வெளியில் இருந்தது. தற்போது ஆலயத்தினுள் வைத்துள்ளனர்.









   சிவ பூஜை செய்யும் அகஸ்தியர் உருவம் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு கையில் கமண்டலமும் , மறு கையில் சிவலிங்கமும் கொண்டு அகத்தியர் காணப்படுகிறார்.











ஸ்ரீ முருகபெருமான் சிலை பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது.







 
   



 மலை பாறையில் சீதா ராமர் தம்பி லட்சுமணனுடன் , அருகில் அஞ்சலி ஹஸ்த ஆஞ்சநேயர் .






"ஹோ "என விழும் நீரின் சத்தம் , குரங்குகளின் க்றீச்சிடல்கள், மலை பொந்துகளில் வசிக்கும் பறவைகளின் கொஞ்சல்கள், மலை கோழி என ஒரு தனி உலகமாகவும்,    அதே சமயம் தெய்வீக அமைதியின் கம்பீரியத்துடனும்    அந்த இடம் அமைந்துள்ளது. 

நாம் போன சமயம் ஆலயம் பூட்டி இருந்தாலும், இரும்பு கிராதி வழியாக வழிபட முடிந்தது, த்யானம் என்பது என்ன என்று தெரியாதவர் கூட , இந்த அமைதியான இடத்திலே மிக சுலபமாக மன ஒருமைப்பாட்டினை அடையமுடியும்.

பௌர்ணமி அன்று இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு முழுவதும் இந்த வனத்திலே மக்கள் அச்சமின்றி கூடி வழிபடுகின்றனர். அன்னதானமும் நடைபெறுகின்றது. 

முடிந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்களேன்.  

புதன், 22 பிப்ரவரி, 2012

இந்தியர்களின் ஆடம்பரம்


இந்தியர்களின் ஆடம்பரம் குறித்தான பதிவு ஒன்றினைக் கண்டேன். எளிய, தூய, ஆன்மிக வாழ்க்கை வாழும் மகான்கள் வாழும் நம் நாட்டில், இளம் தலைமுறையினரின் இந்த ஆடம்பர மோகம் , நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. 
நீங்களும் படியுங்கள் .
http://senthilvayal.wordpress.com/2012/02/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/



 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஸ்ரீ அன்னையின் வாழ்க்கை சுருக்கம்

ஸ்ரீ அன்னை என உலக மக்களால் அழைக்கப்படும் இந்த தெய்வ தாய் ,பிறந்தது பிரான்ஸ் நாட்டில். உயர்ந்த குடி ஒன்றில். 21 பிப் 1878 அன்று பிறந்த அந்த குழந்தைக்கு "மிரா" என பெயர் சூட்டப்பட்டு மிகவும் சிறப்போடு வளர்க்கப் பட்டார்.

தனது குழந்தை பருவத்திலேயே உயர் ஆன்மிக உணர்வோடுதான் அந்த குழந்தை திகழ்ந்தது. உலக மாந்தர் துயர் துடைக்கும் பணிக்காகவே தான்  இப்புவியிலே  அவதரித்துள்ளதாக அக்குழந்தை  தெளிவாக உணர்ந்திருந்தது. மேலான ஆன்மிக அனுபவங்கள் எல்லாம் அவருக்கு எளிதாகவும் இயல்பாகவும் நிகழ்ந்தன.

மிரா இளம் வயது முதலே ஒழுக்கமும் ,கட்டுப்படும் உள்ள சூழலிலே வளர்ந்தார். கல்வியும் கலையும் தெளிவாக கற்றுணர்ந்தார். நல்ல உடல் வலிவுடன் திகழ்ந்த அவர் , எப்போதும் தனது தோழர்களால் மதிக்கப்பட்டார்.

 வயதின் வளர்ச்சியோடு அவருக்கு ஆன்மிக உணர்வும் வளர்ந்தது. நடைமுறை சமய ஆசாரங்களைக் கடந்த உயர் ஆன்மிக பேருண்மை ஒன்றினையே  அடைய அவர் விழைந்தார். அதற்க்கான வழிகாட்டியாக ஒருவரை தனது உள்ளுணர்விலே உணர்ந்தார்.

ஆயின் அவர் யார் எனத் தெரியாததால் அவருக்காக காத்திருக்கத் துவங்கினார். அவருக்கு "கிருஷ்ணா" என பெயரிட்டார். தொடர்ந்து அந்த "கிருஷ்ணா" வின் வழிநடத்துதல் அவருக்குக் கிடைத்தபடியே இருந்தது.

அல்ஜீரியாவில் திரு.தியோன் என்பவர் மறையியல் துறையில் ஆழ்ந்த அனுபவம் உடையவராய் திகழ்ந்தார். அவரிடம் சென்று அபூர்வமான பயிற்சிகளை  கற்றுகொண்டார் மிரா. ஆயினும் தான் தேடும் "கிருஷ்ணா" இவர் அல்லர் என்பதனை உணர்ந்துக் கொண்டார். அவரது தேடல் தொடர்ந்தது.

1914  ஆம் ஆண்டு , புதுவையில் ஸ்ரீ அரவிந்தரைக் கண்ட மிரா , அந்த முதல் சந்திப்பிலேயே "இவரே தான் தேடிக்கொண்டிருக்கும் "கிருஷ்ணா " என்பதனயும் இவரோடுதான் தனது பணி பிணைக்கப்பட்டு இருக்கிறது என்பதனையும் உணர்ந்தார்.

இந்த காலங்களில் மிரா எழுதிய ஆன்மிக நாட்குறிப்புகள் , அவரது உள்ளார்ந்த நிலையினை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்து இருந்தன. இதன் தொகுப்புகள் இன்று ஆசிரமத்தில் "ஸ்ரீ அன்னையின் தியானமும் பிரார்த்தனையும் " என்ற புத்தகமாக் கிடைக்கிறது. இன்றும்  சாதகர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது.

சில காலங்கள் ஸ்ரீ அரவிந்தரோடு இருந்து ஆன்மிக முன்னேற்றம் கண்ட அவர் , அங்கிருந்து ஜப்பான் சென்றார். சுறுசுறுப்பும் , அழகுணர்வும் நிறைந்த ஜப்பானியர்கள் அவரைக் கவர்ந்தது இயல்பே. மலர்களைப் பற்றிய பல்வேறு நுணுக்கங்களையும் , அதன் ஆன்மிக ரகசியங்களையும் இந்த வேளையிலே அவர் அறிந்துக் கொண்டார்.

அதன்பின் 1920 ஏப்ரல் 24 அன்று நிலையாக பாண்டியில் வந்து தங்கினார். அவரது வரவால் ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக முன்னேற்றம் விரைவானது. மிராவிற்கு  ஸ்ரீ அரவிந்தர் அளிக்கும் முக்கியத்துவம் ஸ்ரீ அரவிந்தரின் பிற சீடர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியது. மிராவையும் தங்களைப் போன்ற ஒரு சாதாரண சீடராகவே மற்றவர்கள் முதலில் கருதினார்கள்.

இந்நிலையில் தான் ஸ்ரீ அரவிந்தர் "மிரா" வை "ஸ்ரீ அன்னை " ( "தி மதர் ") என விழித்து , தனது சத்சங்க கூட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்து  , மற்றவர்களையும் மிராவை   "ஸ்ரீ அன்னை " என்றே அழைக்கச் சொன்னார்.

ஸ்ரீ அன்னை என்பார் யார் ? என்ற சந்தேகத்திற்கு  விடையாய் "ஸ்ரீ அன்னை பிரபஞ்ச அன்னையின் வெளிபாடு " என்பதனை விளக்கும் விதமாய் "தி மதர் " எனும் புத்தகத்தினை ஆங்கிலத்தில்  எழுதினார்  ஸ்ரீ அரவிந்தர் . இன்றளவும் ஸ்ரீ அன்னையினை வழிபடுவோருக்கு அது ஒரு பாராயண புத்தகமாகத் திகழ்கிறது.

 " மஹேஷ்வரியாக , மஹாகாளியாக  , மஹாலட்சுமியாக  , மஹாசரஸ்வதியாக   "  இப்பிரபஞ்சத்தில்  ஸ்ரீ அன்னை எப்படியெல்லாம் வெளிப்பட்டு செயல்படுகிறார் என்பதனை "தி மதர்" புத்தகத்தில் விளக்குகிறார் ஸ்ரீ அரவிந்தர். இன்று ஆசிரமத்தில் அப்புத்தகம் ஆங்கிலத்தில் மட்டும் அல்லாது அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.

அன்று முதல் ஸ்ரீ அரவிந்தரோடு இருந்த  சத்சங்கக் கூட்டம் "ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்" என உருக் கொண்டது. ஸ்ரீ அன்னை அதன் முழு பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டு  சிறப்பாக ஆசிரமத்தினை  நிர்வகிக்கத் துவங்கினார்.

இந்நாட்களில் ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக அனுபவங்கள் ஒரே மாதிரியாகவும் , ஒன்றிற்கு ஒன்று உயர்வு அளிப்பதாகவும் அமைந்து இருந்தன. 

ஸ்ரீ அரவிந்தரின் காவியங்களில் முதன்மையானதான "சாவித்ரி" இல் ஸ்ரீ அன்னையின் அனுபவங்களே  வெளிப்பட்டு இருப்பதாக ஸ்ரீ அன்னையும் , ஸ்ரீ அரவிந்தருமே கூறி உள்ளார்கள். 

ஆசிரமத்தில் நிகழும் சிறு விஷயங்களில் இருந்து , சாதகர்களின் உயர் ஆன்மிக முன்னேற்றம் வரையிலும் எல்லோரும் ஸ்ரீ அன்னையையே சார்ந்து இருக்கத் துவங்கினர். 

 

 பிரபஞ்ச வளர்ச்சியில் "மனிதன்" என்பவன் முடிவு அல்ல , அடுத்த பரிணாமம் ஒன்று உண்டு எனக் கண்ட ஸ்ரீ அரவிந்தர் , அதனை அடைய முயலும் தனது யோக முறைக்கு "பூரண யோகம்" என பெயரிட்டார்.1950 ஆம் ஆண்டு Dec 5  அன்று தனது "பூரண யோகத்திற்கு " ஆகுதியாக தனது தேகத்தினையே துறந்து மஹா சமாதி அடைந்தார்.  டிசம்பர் 9 அன்று   ஆசிரம வளாகத்திலேயே ஸ்ரீ அரவிந்தரின் உடல் சமாதியில் வைக்கப்பட்டது.

அதன் பின் ஆசிரமத்தின் நிர்வாகம் மற்றும் ஆசிரமவாசிகளின் ஆன்மிக முன்னேற்றம் ஆகியவற்றின்   முழு பொறுப்பினையும் ஏற்று வழிநடத்தினார் ஸ்ரீ அன்னை. ஆசிரம வாசிகள் மட்டும் அல்லாது உலகின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாகிட ஸ்ரீ அன்னையினை நேரிடையாகவும் , கடிதம் மூலமும் தொடர்ந்து தொடர்புக் கொண்டபடியே இருந்தார்கள். 

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகக் கனவின் செயல்வடிவமாக ,   "ஆரோவில்" எனும் நகரினை புதுவையில் நிர்மாணித்திட எண்ணிய ஸ்ரீ அன்னை, 1968 ஆம் ஆண்டு அதற்கு அடிக்கல் நாட்டினார்.சமய , சமுதாய , கலாசார, தேச பிரிவுகளைக் கடந்த ஒரு புதிய மானுட சமுதாயத்திற்கான திறவுகோலாக இன்றும் ஆரோவில் திகழ்கிறது.

தனது மானுட வாழ்வின் பணியினை முடித்துக் கொண்ட ஸ்ரீ அன்னை 1973   ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று தன் உடலை நீத்தார்கள்.அவரது சமாதி ஸ்ரீ அரவிந்தரின் சமாதியோடு இணைத்து அமைக்கப்பட்டது. 

ஸ்ரீ அன்னையின் பக்தர்களுக்கு அன்பின் புகலிடமாக ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் சமாதிகள் இன்றும் திகழ்கின்றன. எண்ணிய கணத்திலே வந்து தனது அடியவரின் துயரினை தீர்க்கும் அற்புத அருள் வெள்ளம் ஸ்ரீ அன்னை அவர்கள். 




தெய்வ அன்னையின் ஆனந்த பிறந்த நாள்



 ஓம் சைதன்ய மயி 
ஆனந்த மயி 
சத்ய மயி பரமே  !
ஸ்ரீ அன்னை " தி மதர் " என ஸ்ரீ அரவிந்தரால் அடையாளம் காட்டப்பட்ட தெய்வ அன்னையின் பிறந்த நாள் இன்று .
                                                            



 ஸ்ரீ அன்னை குழந்தை வடிவினில்


".. 
 One shall descend and 
        break the iron law ...."
                    Savitri - Sri Aurobindo  
 

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

யோகி ராம் சுரத் குமார் குரு மகராஜ்



யோகி ராம் சுரத் குமாரே 
யோகி ராம் சுரத் குமாரே 
யோகி ராம் சூரத் குமாரே 
ஜெய குரு ராயா!

தாம் கட்டும் தலைப்பாகையால்
எங்கள் கட்டுக்களைக் களைந்தீர்!
நாளும் வெடி சிரிப்பினிலே
எங்கள் வினையாவையும் விரட்டினீர்!
ஓலை விசிறிக் காற்றால்
ஊழ் வினையாவும் போக்கினீர்!

விந்தை விந்தை ஐயா  
விண்டுரைக்க இயலா தம் செயல்கள் !
அருணாசலம் வந்து சேர்ந்த
எங்கள் சரணாகதமே!

தம் தேகத்தினை அருணாசலத்தில்
புதைத்து விதைத்து
புவி முழுதுக்குமாய் பரந்து விரிந்த
 பரந்தாமனே !

தாரக நாமத்தால் எங்கள்
தாபம் எல்லாம் தீர்த்தவரே!
நாம ஜபம் ஒன்றே எங்கள்
தவம் என பணித்தவரே !

தம் முக்தி தினத்திலே
தம் கழல் இணைகள்
 பணிகின்றோம் பகவனே  !


யோகி ராம் சுரத் குமாரே 
யோகி ராம் சுரத் குமாரே 
யோகி ராம் சூரத் குமாரே 
ஜெய குரு ராயா!



ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச பகவான்





முன்னம் ஒரு நாளில் நான்
முற்றாய் தனித்து விழித்திருந்தேன் .
என்  பிறவி பயன் தீர்க்கும் நல்ல
குருவிற்காய் பசித்து தவித்திருந்தேன்.
இவரோ அவரோ என பலரையும்
எண்ணி எண்ணி தவித்திருந்தேன்

என் நிலைக்கிறங்கி பெருங் கருணையால்
எனையும் ஏற்றருள் புரிந்தேரே !
புண்பட்டு நின்ற மனம் தன்னில்
தண் புனலாய் பாய்ந்து வந்தீரே !
புனிதம் புனிதம் என்றே தம்
தாமரை மலரடி போற்றி பணிகின்றேன் .

முன்னம் எத்தனை, பின்னம் எத்தனை
பிறவிகள் என அறிந்திலேன்
"அத்தனைக்கும் நான் பொறுப்பு" என
ஆறுதல் அளித்த குருநாதா!
புண்ணிய மூர்த்தியே ! சகல மத சாரமே!
சரணம் குருநாதா ! சரணம் குருநாதா !

 

   
 

இன்றைய தினத்தின் சிறப்பு

இன்று மகா சிவா ராத்திரி . எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறும் .இன்றைய விரத பலன் மிகவும் விசேஷம்.

 மேலும் "உலகிற்கு  இந்தியாவின்  நன்கொடை " என போற்றப்படும் , ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச பகவானின் பிறந்த நாள் ஆகும். வீரத் துறவியாம் விவேகானந்தரை உருவாக்கி  அருளிய மஹா குரு.

"விசிறி சாமியார் " என மக்களால் போற்றப்படும் திருவண்ணாமலை மகான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் மகராஜ் அவர்கள் முக்தி அடைந்ததும் இதே feb'20 அன்று தான்.

சிவனின் திருவடிகளுக்கு வணக்கம் !
சிவ குருநாதர்களின்  திருவடிகளுக்கு வணக்கம்  !!

 
 

பாலையம்பட்டி ஸ்ரீ சுப்பு ஞானியார் ஜீவ சமாதி


 ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் 


 அருப்புகோட்டை to மதுரை செல்லும் வழியிலே பாலையம்பட்டி எனும் ஊர் இருக்கிறது. இங்கே பிரதான சாலையிலேயே ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. தற்போது அதிகம் முக்கியத்துவம் இல்லாமல் இந்த ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்திற்கு எதிர்புறம் ஒரு தெப்பகுளம் அமைந்துள்ளது. நீராவி குளம் என அதை அழைக்கின்றனர். தற்போதும் ஊர் மக்கள் இந்த குளத்தினை நீராட பயன்படுத்தி வருகின்றனர். 


 இந்தகுளத்தின் கரையிலே அமைந்துள்ளது ஸ்ரீ சுப்பு ஞானியார் ஜீவ சமாதி. சிறிய ஆலய அமைப்பிலே இந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. முன் மண்டபம் ,கருவறை , மதில் சுற்று என ஆலயம் அமைந்துள்ளது. மதில் சுற்றிலே வில்வம் , திருநீற்று பச்சிலை , வெள்ளை எருக்கு மற்றும் சில பூஞ்செடிகள் வைத்து நந்த வனம் அமைத்துள்ளனர். 

வரலாறு :
இந்த சித்தர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறுகிறார்கள். பாலையம்பட்டி எனும் இந்த  ஊரிலேயே காசு கடை செட்டியார் குலத்திலே பிறந்து வளர்ந்த சுவாமிக்கு அந்நாளைய வழக்கத்தின்படி இளம் வயதிலேயே திருமணம் நடந்துள்ளது. 

உரிய வயது வந்ததும் சாந்தி முகூர்த்தம் வேளைக் குறித்து உள்ளார்கள் அவரது இல்ல பெரியவர்கள். அந்நாளிலே வீட்டைவிட்டு வெளியேறி  சன்யாச வாழ்வை வாழத் துவங்கியுள்ளார்கள். 

இந்த சித்தரைக் குறித்து மேலும் தகவல்கள் தெரியவில்லை . மாசி மகம் அன்று குறிப்பிட்ட இடத்தை தேர்வுசெய்து அங்கே ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறுகிறார்கள். இவர் வாழ்ந்தக் காலத்திலே புரிந்த லீலைகள் ஒன்றும் தெரிய வரவில்லை. தலைமுறை இடைவெளியால் சரியான தகவல்கள் இல்லை . 

 


வழிபாடு 

மத்தியில் சில காலங்கள் இந்த ஆலயம் சரியான பராமரிப்பின்றி இருந்துள்ளது. தற்போது இவரது குடும்பத்தின் வம்சாவழியினர் பிரதோஷம் அன்று தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். தற்போது விருதுநகரில் வசிக்கும் அவர்கள்தாம் இந்த ஆலயத்தினை புதுபித்து நித்ய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 

அருகில் உள்ள கிராம மக்களும் தினசரி வழிபாட்டிலே கலந்துக் கொள்கின்றனர். இன்னமும் கூட சில உள்ளூர் மக்களிடம் , இந்த ஆலயம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணத்தினைக் காண முடிகின்றது. 

கருவறையிலே சித்தரின் ஜீவ சமாதி மிகவும் சாநித்தியதோடு காணபடுகிறது. முதல் முறை பார்க்கும் போதே நம்மை மிகவும் ஈர்க்கும் விதத்திலே சிவலிங்க திருமேனி அமைந்துள்ளது. முன்மண்டபத்திலே நந்தியினை பிரதிஷ்டை செய்துள்ளனர். வலப்புறம் விநாயகரும் , இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர். 

வரும் மாசி மகம் அன்று சித்தருக்கு குரு பூஜை அன்னதானதுடன் நடைபெற உள்ளது. அன்றைய தினத்திலே இங்கே சுமார் 12 சாதுக்கள் வரை பூஜையிலே கலந்துக் கொண்டு அன்னதானம் பெறுவார்கள். அவர்களிடம் மடி பிச்சை கேட்டு அந்த அன்னத்தினை உண்டால் , ஒரு வருட காலத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அனுபவம் .  
 
 

சனி, 18 பிப்ரவரி, 2012

தேன் துளி

"இறைவனின் பெயரை உச்சரிப்பவனின் அருகில் பாவங்கள் எட்டிப் பார்க்காது.."
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் 

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் சமாதி





அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து "மலையரசன் கோவில் " என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே , இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இவரை " கும்பகோணம் சுவாமிகள் " எனவும் அழைப்பார்களாம். வெட்ட வெளியிலே , சாலை ஓரத்திலே , நித்ய பூஜைகள் ஏதும் இன்றி , இந்த சமாதி அமைந்துள்ளது. இது சமாதியா அல்லது ஜீவ சமாதியா என்பது தெரியவில்லை.  குறிப்பிட்ட சமுதாயத்தினைச் சார்ந்தவர்கள்  பௌர்ணமி அன்று மட்டும் வந்து வழிபாடு செய்வதாகக் கூறுகிறார்கள். அருகில் உள்ளவர்கள் அவ்வபோது விளக்கு போடுவதாகவும் கூறுகிறார்கள். சமாதியினை சுற்றி உள்ள பகுதிகளையாவது தூய்மை படுத்தி வைக்கலாம்.  

திருகழுகுன்றம் கழுகுகள் வீடியோ

திருகழுகுன்றம் மலையிலே சிவ பூஜை முடிந்தவுடன் , இரு கழுகுகள் பிரசாதம் ஏற்க தினமும் குறிப்பிட்ட நேரத்திலே வரும்  எனவும், தற்போது அவை வருவதில்லை எனவும் கேள்விபட்டுள்ளேன்.
நமது குறையை நீக்கும் வகையிலே "வேலன்" எனும் வலைபதிவிலே, அந்தக் கழுகுகள் தோன்றும் அபூர்வமான வீடியோ  காட்சி வெளியிடப்பட்டு உள்ளது. 

அவர்களுக்கு நன்றி. கீழ் காணும் லிங்க் - ஐ சொடுக்கி கழுகுகளை தரிசியுங்கள்.
http://velang.blogspot.in/2012/02/blog-post.html

மெட்டுகுண்டுவில்   ஜீவ சமாதி கொண்டு அருளும் " அழகர்சாமி சித்தர் "

 ( ஜீவ சமாதி )
 (விபூதி கொப்பரை)
 ( சித்தர் அருள் பொங்கும் என கொட்டு முரசே ! )
 (அன்னதான கூடம் )
(சரியாக தெரியாத கல்வெட்டுக்கள் )


அமைவிடம் :

விருதுநகர் to அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் இறங்கவும். அங்கிருந்து புகழ்பெற்ற "இருகங்குடி மாரியம்மன்" கோவில் செல்லும் வழியிலே 4  km தொலைவில் மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு சென்று "கடப்பாரை சாமி" சமாதி ஆலயம் எனக் கேட்டால்  யாரும் காட்டிவிடுவார்கள்.  

எளிமையான சூழலிலே , யாரும் அணுகும் வண்ணம் அமைந்துள்ளது இந்த ஆலயம். அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர். 

வியாழன், 16 பிப்ரவரி, 2012

கந்தன் கருணை # 4


விழி மூடி திறக்கும் முன்னே
வியனுலகம் முழுதும் 
சுற்றி விரைந்து வந்த
 வடிவேலன் ,
வென்றது தானே என
வெற்றி கனியதைக்  கேட்டான் .

கனியது தனக்கு இல்லை
எனக் கண்டதும்
தணல் என ஆனான்
கனலினில் பிறந்த கந்தன்

காரணம் என்ன என்று
முக்கண்ணனார் சொன்ன போதும்
"போதும் போதும் " என
முகத்தினை திருப்பிக் கொண்டான்

அக்கினி கொழுந்தின்
ஆவேசம் கண்ட அன்னை
அன்புடன் அணைக்க வந்தாள்  
அவனோ அடி பல நகர்ந்து நின்றான்

கணபதி " பழம் நீ கொள் " என்றான்
நாரதர் வேதத்தை நாதத்தில் சொன்னார்
சுரர்களும்  துதி பல செய்தார்
கணங்களும் சரணம் சொன்னனர்

அத்துணை சமரசமும்
அவன் கோபத்தை அதிகமூட்ட

அவன் திரு விழிகள் சிவந்தன
அதில் சிறு துளிகள் துளிர்த்தன
மூச்சுக் காற்றும் வேகமாய் சுழன்றது
அதனால் அவன் அக்கினி மேனி மேலும் சிவந்தது
இரு இதழ்களும் பல வார்த்தைக் கூற துடித்தன
ஆயின் அப்போதும் அவன் வாயினின்று
மோன போதமே வெடித்தது

ஞானத்தின்  வடிவு அவன்
அருட்பெரும் ஜோதியில் தொடக்கம் அவன் 
வேதத்தின் முடிவு அவன்
ஞான  பழமோ அவனுக்கு பெரிது ?
இந்த ஞாலத்தின்  வளமே அன்றோ பெரிது


பின் இந்த கோபம் தான் ஏனோ ?
 (தொடரும் ..)