புதன், 25 ஜூலை, 2012

கவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாதி






வெட்டவெளியினை தியானித்து சித்தி பெற்றவர் ஸ்ரீ கடுவெளி சித்தர்.அவரது ஜீவ சமாதி காஞ்சிபுரத்தின் மையப் பகுதியிலே , ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருகோவிலில் இருந்து சிறிது தொலைவிலே , இஸ்லாமிய மக்கள் மிகுந்து வாழக் கூடிய பகுதியிலே கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
முற்காலத்திலே இந்த இடத்திலே பெரிய சிவாலயமும், இந்த ஜீவ சமாதியைச் சுற்றி , மேலும் பல சமாதிகளும் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்த ஆலயம் முற்றிலும் அழிக்கப் பட்டு, பிற சமாதிகளும் அழிக்கப் பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்த கடுவெளி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள சிவ லிங்கத்தினை மட்டும்,யானையைக் கொண்டு இழுத்தும் அசைக்க முடியவில்லை எனவும் கூறுகின்றனர். நீண்ட  கால போராட்டங்களுக்குப் பிறகு, இன்று இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றி சிறிய அளவிலே இடத்தை மீண்டும் கையகப்படுத்தி, முள் வேலி அமைத்துள்ளனர் உள்ளூர் அன்பர்கள்.


வெட்டவெளியினை தியானித்து சித்தியானதால்தான்  இன்று   கடுவெளி சித்தரின் ஜீவ சமாதி கூட இன்று வெட்ட வெளியிலேயே  இருக்கிறதோ ?  அந்த ஈசனே அறிவார். 



ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி








சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில்  உள்ள ஸ்ரீ வைதீஸ்வரன் கோவில் அருகே  ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இரு தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒரு காம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர் ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள். 

வல்லப சக்தியோடு கூடியதான விநாயகர் திருக்கோலம் முதலில் அமைந்துள்ளது.அதனை அடுத்து அமைந்துள்ள அறையில் ஸ்ரீ பைரவ சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. மிகவும் சக்திபடைத்ததாக அமைந்துள்ளது. பைரவ உபாசனை செய்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய இடம் ஆகும். 

செவ்வாய், 24 ஜூலை, 2012

தலையெழுத்தை மாற்றி அமைத்த திருப்பட்டூர் பிரம்மா ஆலயம்


( திருப்பட்டூர் பிரம்மா )


பக்தி யுகத்தின் அன்பிற்கினிய நெஞ்சங்களுக்கு  பணிவான வணக்கங்கள். வேலை பளுவின் காரணமாக , நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த பதிவினை சமர்ப்பிகின்றேன். நன்றி. 

திருச்சியை அடுத்து உள்ள திருப்பட்டூரில்  அமைந்துள்ள சிவாலயத்தில் ஸ்ரீ பிரம்மா தனி சந்நிதிக்  கொண்டு அருள் புரிகிறார். அந்த ஆலயத்திற்குச் சென்று , தமது ஜாதகத்தினை பிரம்மாவின் பாதத்திலே வைத்து வணங்குவோருக்கு , அந்த ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் , தீய அமைப்புகளும் மாறி நற்பலன் ஏற்படுகிறது என்பது பலரது அனுபவம். நம் தலையெழுத்தையே அங்கு உள்ள பிரம்மா மாற்றி அமைத்து விடுகிறார் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. 

அந்த ஆலயத்திற்குச் சென்று பயன் அடைந்த திருச்சியைச் சார்ந்த திரு.சிவகுமார் என்பவரது அனுபவத்தினை இங்கே காணலாம்.