நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ பரமாச்சார்ய சுவாமிகளின் , அவதார நன்னாள் நாளை , வைகாசி மாதம் அனுஷ நட்ச்சத்திரத்தன்று வருகிறது. தமது நோக்காலும், வாக்காலும், வாழ்க்கை முறையாலும் அவர் உபதேசித்த விஷயங்கள் " தெய்வத்தின் குரலாக " வெளிவந்துள்ளது.
"ஊருக்குத்தான் உபதேசம்" என்று இல்லாமல் , தமது உபதேசத்திற்கேற்றவாறு தமது வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்கள் பெரியவா. "தெய்வத்தின் குரல் " முதலாம் பாகத்தில் "எளிய வாழ்வு" எனும் தலைப்பில், மகாஸ்வாமிகள் கூறிய அறிவுரயினையும் , அதனை எப்படி தமது வாழ்விலே கடைப்பிடித்துக் காட்டினார்கள் என்பதனை உணர்த்தும் புகைப் படத்தினையும் காணும் போது நமது மனம் நெகிழ்கிறது.
தெய்வத்தின் குரல் - எளிய வாழ்வு
"வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, என்ற வார்த்தை இப்போது ரொம்பவும் அடிபடுகிறது. சர்க்கார் திட்டங்கள் இதற்குத்தான் என்கிறார்கள். எல்லோருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான வஸ்திரம், வசிப்பதற்கு ஒரு சின்ன ஜாகை இருக்க வேண்டியதுதான். இதற்கே சர்க்கார் திட்டம் போட வேண்டும். இதற்கு அதிகமாகப் பொருளைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது.
உண்மையில் வாழ்க்கைத் தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். தேவைகளை அதிகமாக்கிக்கொண்டு அவற்றுக்காக ஆலாப் பறப்பதால் நிறைவு ஒருவருக்கும் கிடைக்காது. இதைப் பிரத்தியக்ஷத்தில் பார்க்கிறோம்.
நாம் மேலைநாட்டுக் காரர்கள் மாதிரி, போக போக்கியங்களுக்கு பறக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டுக்காரர்களோ அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கூட நாம் புத்தி பெறவில்லை என்றால், அதுதான் துரதிருஷ்டம்.
ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட நேரத்தில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதால, வீட்டை ஏர் கன்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்."
நன்றி : தெய்வத்தின் குரல் , http://mahaperiyavaa.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக