ஞாயிறு, 18 மார்ச், 2012

சத்ரு சங்கார வேல் பதிகம்

உ 
ஸ்ரீ கணேசாய நம :
ஸ்ரீ குமார குருதாஸ சுவாமிநே  நம:

காப்பு

சண்முகக் கடவுள் போற்றி ! சரவணத்(து) உதித்தோய் போற்றி!
கண்மணி முருகா போற்றி ! கார்த்திகை பாலா போற்றி!
தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி ! போற்றி !!

நூல்

அப்பமுடன் அதிரசம் பொரிகடலை துவரை வடை
அமுது செய் இபமுகவனும்
ஆதிகேசவன் இலட்சுமி திங்கள் தினகரன்
அயிராவதம் வாழ்கவே !
முப்பத்து முக்கோடி வானவர்கள் இடர்தீர
முழுது பொன்னுலகம் வாழ்க!
மூவரொடு கருட கந்தருவர் கிம்புருடரும்
முதுமறைக் கிழவர் வாழ்க !
செப்பரிய இந்திரன் தேவி அயிராணிதன் 
திருமங்கலம் வாழ்கவே !
சித்த வித்யாதரர் கின்னரர்கள் கனமான
தேவதைகள் முழுதும் வாழ்க !
சப்தகலை விந்துக்கும் ஆதியாம் அதிரூப
சரஹணனை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (1)

சித்தி சுந்தரி கெளரி அம்பிகை க்ருபாநிதி
சிதம்பரி சுதந்தரி பர
சிற்பரி சுமங்கலி நிதம்பரி விடம்பரி
சிலாசுதை விலாச விமலி
குத்து திரிசூலி திரிகோணத்தி ஷட்கோண
குமரி கங்காளி ருத்ரி
குலிச ஓங்காரி ஹ்ரீங்காரி ஹாங்காரி ஹூங்
காரி ஈம்காரி அம்மா!
முத்தி காந்தாமணி முக்குண துரந்தரி
மூவர்க்கும் முதல்வி ஞான
முதுமறைக் கலைவாணி அற்புத புராதனி
மூவுலகுமான ஜோதி
சக்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (2)

மூரியுள முப்பத்து முக்கோடி தேவரும்
முனிவரொடும் அசுரர் கூடி
முழுமந்த்ர கிரிதன்னை மத்தாகவே செய்து
முற்கணத்(து) அமுது பெறவே
கோரமுள வாசுகியின் ஆயிரம் பகுவாயில்
கொப்பளிதிடு விடங்கள்
கோளகையும் அண்டங்கள் யாவையும் எரித்திடும்
கொடிய அரவினைப் பிடித்து
வீரமுடன் வாயினால் குத்தி உதிரம் பரவ
இரு தாளிலே மிதித்து
விரித்துக் கொழுஞ்சிற(கு) அடித்தே எடுத்(து)  உதறும்
விதமான தோகைமயிலில்
சாரியாய்த் தினம் ஏறி விளையாடி வரு முருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (3)

உக்ரமுள தாருகன் சிங்கமுக சூரனும்
உன்னுதற்(கு) அரிய சூரன்
உத்திகொளும் அக்னிமுகன்  பானுகோபன் முதல்
உத்தண்ட அசுரர் முடிகள்
நெக்குவிடக் கரி புரவி தேர்கள் வெள்ளம் கோடி
நெடிய பாதங்கள் கோடி
நிறையிலா அஸ்திரம் வெகு கோடிகள் குருதி
நீரில் சுழன்று உழலவே
தொக்கு தொகு தித்தி திமி டுண்டு டுடு டகுகு டிகு
துந்து திமி டங்கு குகு டிங்கு குகு சங்கு கென
தொந்தக் கவந்தம் ஆட
சக்ரமொடு சக்திவிடு தணிகை சென்னியில் வாழும்
சரஹணனை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (4)
   
 
அந்தியிற் பேய் உச்சியுறு  முனி காட்டேரி
அடங்காத பகல் இருசியும்
அகோர கண்டங் கோர கண்ட சூனியம் பில்லி
அஷ்டமோகினி பூதமும்
சந்தியா நவ குட்டிசாத்தி வேதாளமும்
சாகிநி டாகிநிகளும்
சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி முதல்
சஞ்சரித்திடு முனிகளும்
சிந்தை நொந்(து) அலறி திருவெண்ணீறு காணவே
தீயிலிடு மெழுகு போலத்
தேகம் எல்லாம் கருகி நீறாகவே நின்று
சென்னி இரு தணிகை மலையில்
சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும்
சரஹணனை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடி வரும்
சத்ரு சங்கார வேலே. (5)   

கண்டவிட பித்தமும் வெப்பு தலைவலி இருமல்
காமாலை சூலை குஷ்டம்
கண்டமாலை தொடைவாழை வாய்ப் புற்றினொடு
கடினமாம் பெருவியாதி
அண்ட ஒணாத ஜுரம் சீதள வாத ஜுரம்
ஆறாத பிளவை குன்மம்
அடங்காத இருபக்து  மேகமுடன் நாலு லக்
கத்தில் எண்ணாயிரம் பேர்
கொண்ட பல நோய்களும் வேல் என்(று)  உரைத்திடக்
கோ என்ன ஓலமிட்டுக்
குலவு தினகரன் முனம் மஞ்சு போல் நீங்கிடும்
குருபரன் நீறணிந்து
சண்டமாருத கால உத்தண்ட கெம்பீர
சரஹணனை நம்பினவர் மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (6)

மகமேரு உதயகிரி அஸ்தகிரியும் சக்ர
வாளகிரி நிடதவிந்தம்
மா உக்ரதர நரசிம்மகிரி அத்திகிரி
மலைகளொடு மதனம் சுமவா
ஜெகமெடுத்திடு புட்ப தந்தம் ஐராவதம்
சீர்புண்டரீக குமுதம்
செப்பு சாருவபௌமம் அஞ்சனம் சுப்பிர
தீப வாமனாதி வா
சுகி மகாபதுமன் அனந்தன் கார்க்கோடகன்
சொற்சங்கபால குளிகன்
தூய தக்கன் பதும சேடனோடு அரவெலாம்
துடித்துப் பதைத்(து) அதிரவே
தக தகென நடனமிடும் மயிலேறி விளையாடு
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரை குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (7)

திங்கள் பிரமாதியரும் இந்த்ராதி தேவரும்
தினகரரும் முனிவரோடு
சித்ரபுத்திரர் மௌலி அகலாமல் இருபதம்
சேவித்து நின்று தொழவும்
மங்கை திருவாணியும் அயிராணியொடு சப்த
மாதர் இரு தாள் பணியவும்
மகாதேவர் செவி உறப் ப்ரணவம் உரைத்திட
மலர்ந்த  செவ்வாய்கள் ஆறும்
கொங்கை களபம் புனுகு ஜவ்வாது மண வள்ளி
குமரி தெய்வானையுடனே
கோதண்டபாணியும் நான்முகனுமே புகழ்
குலவு திருத்தணிகை மலைவாழ்
 பங்கயக்கர குமர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (8) 

மண்டலம் பதினாலு லோகமும் அசைந்திட
வாரிதி ஓர் எழும் வறள
வலிய  அசுரர் முடிகள் பொடிபடக் கிரவுஞ்சம்
மாரி  எழத் தூளியாக
கொண்டல் நிறம்  கொளும் அசுரர் அண்டங்கள்  எங்குமே
கூட்டமிட்(டு)  ஏக அன்னார்
குடல் கை கால் உடல் மூளை தலைகள் வெவ்வேறாகக்
குத்திப் பிளந்தெறிந்து
அண்டர் பணி கதிகாமம் பழநி சுப்பிரமணியம்
ஆவினன்குடி ஏரகம்
அருணாசலங் கயிலை தணிகைமலை மீதில் உறை
அறுமுகப் பரமகுருவாம்
சண்டமாருத கால சம்ஹார அதிதீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (9)

மச்சம் குதித்து நவமணி தழுவ வந்தநதி
வையாபுரிப் பொய்கையும்
மதியை முத்தஞ்செயும் பொற்கோபுரத்(து)  ஒளியும்
வான்மேவு கோயிலழகும்
உச்சிதமான திருவாவினன் குடியில் வாழ்
உம்பர் இடர் முடி நாயகன்
உக்ரமயில்  ஏறிவரு முருக சரஹணபவன்
ஓங்கார சிற்சொருப வேள்
அச்சுத க்ருபாகரன் ஆனை   முறை செய்யவே
ஆழியை விடுத்(து) ஆனையை
அன்புடன் இரட்சித்த திருமால் முகுந்தன் எனும்
ஹரி கிருஷ்ண ராமன் மருகன்
சச்சிதானந்த பரரான ஈசுரர்தந்த
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும்
சத்ரு சங்கார வேலே. (10)




    


வியாழன், 15 மார்ச், 2012

குருமலை தவசி தம்பிரான் குகை வீடியோ காட்சிகள்

தம்பிரான் சமாதி அமைந்துள்ள குகை
xhttp://www.youtube.com/watch?v=-TDYF7TuHIE&feature=player_detailpage


மயில் வந்த காட்சி
 mayil varugai

பச்சை உடை சாது குகையினுள் அமர்ந்துள்ள காட்சி
http://www.youtube.com/watch?v=A2ES3CzbOoo&feature=player_detailpage

குரு மலையில் அருளும் தவசி தம்பிரான் சுவாமிகளின் சமாதி

தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி நகரின் அருகிலே சுமார் 12  km தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் குருமலை.(GURUMALAI). ஆனால் நடைமுறை வழக்கில் மக்கள் இதை Kurumalai என உச்சரிக்கின்றனர்.கோவில்பட்டியில் இருந்து நகர பேருந்துகள் இந்த கிராமத்திற்க்குச் செல்கின்றன.

 திரு."சித்தர்". மணி , சித்த-மார்க்க ஆராய்ச்சியாளர் திரு."வசியன்" ஜோதி கிருஷ்ணா, மற்றும் அவரது இரு நண்பர்கள் ஆகியோரோடு என்னையும் சேர்த்து நாங்கள் ஐந்து நபர்கள்  கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டோம்.



வறண்ட பாதைகளின் வழியாக சுமார் 1 /2  மணி நேரம் பேருந்தில் பிரயாணப் பட்டால் இந்த கிராமத்தினை அடையலாம். ஒன்றிரண்டு டீ கடைகள் உள்ளன. பேருந்து இறக்கிவிடும் இடத்தில் இருந்து நடக்கத் துவங்கினால் , கிட்டத்தட்ட 4 km தூரம் நடக்க வேண்டும்.நாங்கள் சென்றது  நல்ல வெயில் கால முற்பகல் நேரம்.  எங்கள் ஐவர் குழு , பேசியபடி மெதுவாக   நடக்கத்துவங்கியது. வழி முழுவதும் நல்ல செம்மண் சரள் பாதை  , இருபுறமும் குறுங்காடு.

சுமார் 2 km சென்றதும் நாம் ஒரு அய்யனார் கோவிலை அடையலாம். அதன்  அருகிலேயே ஒரு ஊற்று உள்ளது. தெள்ளிய நீர் வருடம் முழுவதும் அதில் ஊறி வந்துக் கொண்டே இருக்கிறது. குடிப்பதற்கு அருமையாக உள்ளது. அந்த இடத்தில் இருந்து , நாம் "குரு மலை" மீது ஏறத் துவங்கினோம்.
    ( வற்றாத நீர் ஊற்று )
 
சரள் பாறைகள் நிறைந்த பாதை. கிட்டத்தட்ட உச்சி வெயிலில் வியர்வை சொட்ட , மேலே ஏறத் துவங்கினோம்.இது ஒரு சிறு குன்று  போல அமைந்துள்ள , சிறு காடு. ஒரு காலத்தில் இங்கே  மிகப் பெரிய காடுகளும், கொடிய விலங்குகளும், இருந்ததாகவும் , தற்போது அவை அழிக்கப் பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர்.



காற்றின் ஒலி ஒரு விதமான  லயத்தோடு கேட்கிறது. அது அந்த சூழலின் அமானுஷ்ய தன்மையினை அதிகமாக்குகிறது.பாறைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் , யாரோ எடுத்து பொருத்தி வைத்தது போல இருப்பது, காண வியப்பான ஒன்றாகும். அவை காற்றினால்  அரிக்கப்பட்டு, காணப்படுகின்றன. 


 
( நந்தி போன்ற தோற்றம் உடைய பாறை )  


(பாறைகளின் வழியாக மலை அடிவாரத்தின் தோற்றம் )




மலையின் உச்சியினை அடைந்த பின் அங்கே , ஒரு சிறு குகை ஒன்றினை காண்கிறோம். நிசப்தமான இடம். நிறைய அபூர்வமான மூலிகைகள் இருக்கின்றன. ஆனால் பசுமையான காடு இல்லை.







குகையின் முகப்பிலே ஒரு சிறு லிங்க வடிவம் காணப் படுகிறது. அதன் முன்னால்  காணப்படும்    சிறு பள்ளம் "யாக குண்டமாக" விசேஷ நாட்களில் பயன்படுத்தப் படுகிறது.
( இதன் வீடியோ காட்சி அடுத்து வரும்)







 குகை வாசலில் ஒரு மரம் வளைந்து நிழல் கொடுத்தபடி உள்ளது. அதை "கன எருமை மரம் " எனவும் , லிங்கத்திற்குப் பின்னால் அமைந்துள்ள குகையினுள் ஒரு நீண்ட பாதை உள்ளதாகவும் , ஆனால் அதனுள் செல்ல இயலாது எனவும் நண்பர் "வசியன்" ஜோதி கிருஷ்ணா  கூறினார்.               (யாக குண்டம் )--->                                                                              
ஆங்காங்கே நிறைய அகல் விளக்குகள் காணப்படுகின்றன.உச்சி பாறை ஒன்றினில் திருகார்த்திகை சமயத்தில் பயன்படுத்திய மிகப் பெரிய மண் விளக்கு காணப்படுகிறது. மாத பௌர்ணமி நாட்களில் இந்த மலையில் மக்கள் கூடுவதாகக் கூறுகிறார்கள்.

தவசி தம்பிரான் சுவாமிகள் முருக பெருமானின் பூரண அருள் பெற்றவராகவும் , ரசவாததிலே தேர்ச்சிபெற்றவராகவும் திகழ்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அவரது ஜீவ சமாதி  எட்டயபுரம் அருகே வேறு ஊரிலும் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அந்நாட்களில் இந்த காடு எட்டயபுரம் சமஸ்தானதிற்குச் சொந்தமானதாக இருந்ததாகவும், எட்டயபுர அரசர்களுக்கு தம்பிரான் சுவாமிகள் தனது ரசவாதத்தின் மூலம் தங்கம் செய்துக் கொடுத்ததாகவும் ஒரு செய்தி நிலவுகிறதாம்.


  


 திரு." சித்தர் " மணி (இடது) மற்றும் திரு. "வசியன்" ஜோதி கிருஷ்ணா (வலது)







குகையின் முன்னால் ஒரு கற்றாழை மரத்தின் நிழலிலே நாங்கள் அமர்ந்து , சித்தர்கள் பாடல்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். "சித்தர்கள் கோவை " எனும் புத்தகத்திலே இந்த "குருமலை" குறித்து, சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதாக ஜோதி கிருஷ்ணா கூறினார்.இந்த மலை முருகபெருமான் தவம் செய்து, சூரனை அழிக்க இங்கிருந்து புறப்பட்டு திருசெந்தூர் சென்றதாகவும் தகவல் உள்ளதாகவும்  அவர் கூறினார்.

நாங்கள் சித்தர்கள் குறித்தும் முருகப் பெருமானைக் குறித்தும் பேசிக்கொண்டு இருந்த நேரத்திலே ஒரு  மயில்   அவ்விடம்  வந்து , குகை வாசல் வரை சென்று பின் மலை சரிவிலே சென்று விட்டது. மீண்டும்  ஒரு முறை வந்து இதேமாதிரியாக செய்தது. முருகனை குறித்து பேசிக்கொண்டு இருந்த நேரத்திலே மயில் வந்தது எங்களுக்கு  ஆச்சரியமாக   இருந்ததது.( இதன் வீடியோ காட்சி அடுத்து வரும் )
எங்கள் ஆச்சரியம் தீரும் முன்னே , மேலும் ஒரு ஆச்சரியம். நாங்கள் பேசிக்கொண்டு இருந்த நேரம் கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும் , அந்த உச்சி வெயிலிலே அங்கே ஒரு சாது வந்தார். குருந்தாடியோடும் , பச்சை உடையிலும் அவர் காணப்பட்டார். அவர் எங்கே இருந்து வருகிறார் எனக் கேட்டதற்கு "கைலாயம்" எனக் கூறி விட்டு , குகைக்குள் சில அடிகள் இறங்கி வழிபடத் துவங்கிவிட்டார்.  (இந்த காட்சியும் அடுத்து வழங்கப்படும்).

நாங்களும் அவரோடு சேர்ந்து , சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு, மெல்ல இறங்கினோம். நேரம் இன்மையால் ,  1 k.m  தூரத்தில் உள்ள முருகனின் ஆலயத்திற்க்குச் செல்ல இயலவில்லை.

மொத்தத்தில் ஒரு அருமையான சத்சங்கம் குரு மலையிலே நடைபெற்றது. 

செவ்வாய், 13 மார்ச், 2012

திண்ணை சித்தர்

சுவாமி மலை ஸ்ரீ திண்ணை  சித்தரின் மற்றும் ஒரு வீடியோ காட்சி http://youtu.be/y-K0mSt6qK8

ஸ்ரீ சூட்டுக்கோல் மாண்டி சுவாமிகள்

மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி  வீடியோ காட்சியினைக் காண இங்கே கிளிக்குங்கள் .
http://youtu.be/fR8DLUaPFZ0

உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் .....

இன்று மாசி மாதமும் பங்குனி மாதமும் சந்திக்கும் புண்ணிய வேளையிலே ,கடைப் பிடிக்கப் படும் விரதம் தான் " காரடையான் நோன்பு " என்று அறியப்படும் சாவித்ரி விரதம் .


(சாவித்திரி தேவி )


சத்தியவான் சாவித்திரி கதை , மகாபாரதத்தின் கிளை கதைகளில் ஒன்றாக வருகிறது.தெய்வீக காதலால் இணைந்த காதலர்களான "சத்யவான் - சாவித்திரி " இருவரின் அன்பை மையமாகக் கொண்டு  , அந்த அன்பால் , தனது கணவனின் விதியையே சாவித்திரி எவ்வாறு மாற்றினாள் என்பதனை சாவித்ரியினுடைய காவியம் கூறுகிறது.


கார் காலத்திலே விளைந்து வரக்கூடிய புதிய நெல்லினை குத்தி அதனில் இருந்து அடை தயாரித்து , அதனை தேவிக்கு அர்ப்பணித்து , சுமங்கலிகள் தங்கள் கணவருக்காக வழிபடும் விரத நாள். இந்த விரதம் நமது புண்ணிய பரத தேசம் எங்கும் பல்வேறு பெயர்களால் , சிற்சில மாற்றங்களுடன் கொண்டாடப் படுகிறது. 
 
"உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நான் செய்தேன்
ஒருகாலும் என் கணவர் என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும்."
என சுமங்கலிகள் ஸ்ரீ தேவியிடம் இன்றைய தினத்திலே பிரார்த்தனை செய்கிறார்கள்.







 
 

ஸ்ரீ சுப்பு ஞானியார் ஜீவ சமாதி வீடியோ காட்சிகள்

அருப்புக்கோட்டை , பலையம்பட்டியில் ஜீவ சமாதி கொண்டு அருளும் ஸ்ரீ.சுப்பு ஞானியார் சந்நிதியில் நடை பெற்ற பூஜை காட்சிகள் .

http://www.youtube.com/watch?v=kG1ABdItViA

புதன், 7 மார்ச், 2012

கணபதி ஸ்துதி





 விநாயகனே வல்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும்,மண்ணிற்கும் நாதனுமாந்  தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

                                             - கபிலதேவர்  
                                                பதினோராம் சைவத்திருமுறை

ஸனாதன தர்மத்தின் பிரிவுகள்


ஸனாதன   தர்மம் பல்வேறு பிரிவுகளாக இருந்ததை ஆறு பிரிவுகளாக தொகுத்து அனைத்து பிரிவுகளும் ஏக ப்ரம்ஹனையே அடைய வழி காட்டுகின்றன என்ற  உண்மையை உணர்த்திய பெருமை ஸ்ரீ ஆதிசங்கரர் பகவத்பாதரைச் சாரும்.
அந்த ஆறு பிரிவுகள்

கணபதியை வழிபடும் கணாபத்யம்   
சிவனை வழிபடும் சைவம்
சக்தியை வழிபடும் சாக்தம்
விஷ்ணுவை  வழிபடும் வைஷ்ணவம் 
முருகனை வழிபடும் கௌமாரம்
சூரியனை வழிபடும்  சௌரம் 
  
இந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் , உட்பிரிவுகளும் உண்டு. உதாரணமாக சைவ பிரிவிலே வீரசைவம் , சன்மார்க்க சைவம் என பல பிரிவுகள் உண்டு.


 

வெள்ளி, 2 மார்ச், 2012

ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருவின் தமிழக விஜயம்



பிப் 26 ஆம் தேதி அன்று, கர்நாடக மாநிலம்  சிருங்கேரியில்   இருந்து , தக்ஷிணாம்னாய பீடாதிபதி - சிருங்கேரி ஜகத்குரு- ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் தனது விஜய யாத்திரையை துவங்கி உள்ளார்கள். பெங்களூரு சென்று பின் அங்கிருந்து , தமிழகத்திற்கு வருகை புரிகிறார்கள். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு , தமிழகத்தில் ஜகத்குரு அவர்கள் அதிக காலங்கள் தங்கும்படியாக வருகிறார்கள்.

 அவர்களது விஜய யாத்திரை வீடியோ காட்சியிக் காண இங்கே கிளிக்குங்கள்
http://www.youtube.com/watch?v=m8sX3lvgW4I&feature=player_embedded
( நன்றி : http://www.sringeri.net/)

அவர்களது தமிழக விஜயத்தின் நிகழ்சிகள் :
 Sri Sri Jagadguru Shankaracharya Maha Samsthanam,
Dakshinamnaya Sri Sharada Peetham, SRINGERI - 577 139
Chikmagalore Dist. Ph: 08265 - 250123 / 250192
TOUR PROGRAMME OF HIS HOLINESS JAGADGURU
SHANKARACHARYA
SRI SRI BHARATI TIRTHA MAHASWAMIJI
In the states of Karnataka and Tamilnadu
from 26-02-2012 to 01-04-2012
Date Place of Departure Place of Arrival
26.02.2012 - (Morning) - Sringeri - Belur
27.02.2012 - (Morning) - Belur - Haradanahalli
(Evening) - Haradanahalli - Mandya
28.02.2012 Mandya - Bangalore
29.02.2012 Halt at – Sri Sringeri Shankara Math,
to Shankara Puram,
05.03.2012 Bangalore - 560 004.
06.03.2012 Bangalore - Krishnagiri
07.03.2012 Krishnagiri - Salem
08.03.2012 Halt at – Sri Sringeri Shankara Math,
& 2nd Agraharam, Salem
09.03.2012
10.03.2012 Salem - Namakkal
11.03.2012 Namakkal - Bhavani
12.03.2012 Bhavani - Gopichettypalayam
13.03.2012
& Halt at – Sri Sringeri Shankara Math,
14.03.2012 Gopichettypalayam
15.03.2012 Gopichettypalayam - Satyamangalam
16.03.2012 Satyamangalam - Erode
17.03.2012 Erode - Tirupur
18.03.2012
& Halt at – Sri Sringeri Shankara Math,
19.03.2012 Tirupur
20.03.2012 Tirupur - Coimbatore
21.03.2012 Halt at – Sri Sringeri Shankara Math,
to Racecourse Road, Coimbatore –
01.04.2012 for 62nd Vardhanti Celebrations of His Holiness.
Sringeri Private Secretary
25.01.2012 to His Holiness Jagadguru Shankaracharya
of Dakshinamnaya Sri Sharada Peetham, Sringeri

வியாழன், 1 மார்ச், 2012

சும்மா ஒரு கதை சொல்லறேன் !






ராமசந்திரன்  ஒரு படித்த இளைஞன். எப்போதும் ராம நாமத்தை உச்சரிக்கும் பழக்கமுடைய அவனுடய தாத்தா வைத்த பெயர் அது. பாவம் அவர் படிக்காதவர். இப்படி ஒரு கருநாடகமான பெயரை வைக்கலாமோ ? 

கல்லூரி நாட்களில் , யாராவது தன்னுடைய பெயரைக் கேட்டாலே சொல்லுவதற்கு அவனுக்கு அவ்வளவு வெட்கமாய் இருக்கும். அதனால் தன்னுடைய பெயரை "ராம்ஸ்" என மாற்றிக் கொண்டான்.

படிப்பில் அவன் ஒரு சிறந்தமாணவன் இல்லை என்றாலும் , சோடை இல்லை. ஆனால் வெளியே நிறைய படித்தான். புதிய சித்தாந்தங்கள் அவனுடைய அறிவை நவீனப்படுத்தின (?) . பழைய கருத்துக்கள் , சமய கோட்பாடுகள் எல்லாவற்றினையும் தன் மேம்பட்ட அறிவினால் உரசிப்பார்த்து எடைபோட்டு விமர்சிப்பதில் புலியாக விளங்கினான். அதனால் அவன் வயது நண்பர்கள் மத்தியிலே அவன் பெரிதும் மதிக்கப் பட்டான். 

படிப்பு முடிந்து பல காலமாகியும் வேலை கிடைக்காத காரணத்தால் , உள்ளூரிலேயே, அவனுடைய தாத்தாவிற்கு பழக்கமான மடம் ஒன்றில் , மேலாளர்  வேலையில் , அரை மனதாக  சேர்ந்தான். 

அந்த மடத்தின் தலைவரான சந்யாசியும்  , அவன் தாத்தாவைப் போலவே ஒரு "ராம நாம பைத்தியம்". அவர்பெயர் சூட்சுமானந்தா. அவன் துணிந்து தன்னை  "ராம்ஸ்" என்றுதான் அழைக்கவேண்டும் என அவரிடமே சொல்லிவிட்டான்.  (  நல்ல காலம்!  சுவாமிஜியின் பெயரையும்    சுருக்கி "சூச்சு" என ஆக்காமல் விட்டானே!  அந்த மட்டும் அவர் தப்பித்தார். )

அவரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அவர் கூறினார்-
 " அப்பா ! இவ்வளவு காலமும் நான் ராமா! ராமா ! என ஒருமையில்தான் இறைவனை அழைத்து வந்தேன். உன்னை "ராம்ஸ்" என அழைப்பதன் மூலம் ஒரே நேரத்திலே அவனை பன்மையில் அழைக்கும்படியான வைப்புக் கிடைத்தது. (RAMs) . ராமனுக்கு நன்றி." 

ஆனால் நம்ம  ராம்ஸோ அவரின் "அறியாமையை" எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். மற்றபடி வேலை என்று வந்து விட்டாலோ அவன் எதற்கும் அஞ்சமாட்டான். நேரம் போவதே தெரியாமல் முழுமையாக வேலை பார்ப்பான்.

மடத்தில் பூஜை,ஆராதனை என்றால் அவன் கடைசியில்தான் கலந்துக்கொள்ளுவான் , அதுவும் பொங்கல் ,புளியோதரைக்காக மட்டும்தான். (ஆயிரம்தான் சொல்லுங்க.   மடத்து பொங்கலுக்கும் , புளியோதரைக்கும் ருசி தனிதான் . அது என்னமோ தெரியல ! என்ன மாயமோ தெரியல! )

அவன் மடத்தில் செய்ய விரும்பிய பல நல்ல மாற்றங்களை சுவாமிஜி வரவேற்கவே செய்தார். அவன் தானாக சென்று , சுவாமிஜியிடம் எந்த வாதம் செய்யாவிட்டாலும் , அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் , வாதம் செய்ய தயங்குவதும் இல்லை. 
அன்றைக்கு  சில பக்தர்கள்  விருந்தினராக மடத்துக்கு வந்திருந்த சமயம் ,
" உலகிலே எல்லாமே இறைவன் முன்பாகவே தீர்மானித்தபடிதான் நடக்கிறது ! "

என இவன் அருகில் இருக்கும்போதே, சுவாமிஜி  உபதேசம் செய்துக் கொண்டு இருந்தார். ( சுவாமிஜிக்கு போறாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். )

விடுவானா நம்ம ஹீரோ !
 " அது எப்படி சுவாமி ?   நம் நடைமுறை வாழ்வு கூட  இறைவனால் தீர்மானிக்கப்படுகிறதா ? நாம் நடப்பதும் , போவதும் , வருவதும் கூட இறைவன்  தீர்மானித்தபடிதானா ? தாங்கள் கூறுவது ஏற்கும்படியாக இல்லையே ! " என்றான் . (மடக்கிட்டோம்முல்ல ! )

அவனை ஒருமுறை தீர்மானமாய் பார்த்த  சுவாமிஜி , எதோ சொல்ல வாய் எடுத்தார். அதற்குள் , மடப்பள்ளி சமையல்காரர் இவனை அவசரமாக அழைத்தார்.  

"தம்பி , அரிசி இருப்பில் இல்லை. நேற்றே வரவேண்டிய அரிசி இன்னமும் வரவில்லை. மடத்துக்கு விருந்தினர்கள்  வேறு திடீரென வந்துள்ளனர். உடனடியாக உலை வைக்க வேண்டும். என் உதவியாளர் வேறு இன்று விடுமுறை . தாங்கள் தவறாய் எண்ணாமல் , அருகில் உள்ள கடைக்குச் சென்று , இன்றைய தேவைக்கு  மட்டும் கொஞ்சம் அரிசி வாங்கி வாருங்கள் " என கேட்டுக் கொண்டார். 

ராம்ஸ்க்கு கோபமாக வந்தது. 'அரிசி இல்லை என்பது நேற்றே தெரியும் என்றால், அதை முன்பாகவே சொல்லுவதற்கு என்ன? எதிலும் முன்யோசனையே இல்லை. மடப்பள்ளி தேங்காய் துருவி போல சமையல்காரரின் மூளையும் மழுங்கி விட்டது போலும் . ஆகட்டும் ! விருந்தினர் போகட்டும் , இவரை சாணை பிடிக்கிறேன் ' என மனதிற்குள் கருவியபடி, அவர் தந்த பையினை வாங்கிக் கொண்டு வேகமாகச் சென்றான். 

ஆனால் விதியைப் பாருங்கள் , (ஆங் ! அதுலதான் எங்களுக்கு நம்பிக்கை இல்லையே ! ) அரிசி வாங்கிக் கொண்டு , வரும் வழியிலேயே , அந்த நைந்து போன பையின் ஒரு ஓரம் கிழிந்து , அரிசி ஒழுகத் துவங்கியது.

 "முட்டாள் சமையல் காரனே ! நல்ல பையாய் கொடுத்துவிட்டல் என்ன " என மனதினுள் மேலும் அவரை திட்டியபடி தன் கைக்குட்டையை அந்த ஓட்டையில் திணித்து சரி செய்த படி  அரிசியை கொண்டுவந்தான்.  ( ஆமா ! பையை சமையல்காரர் தரும்போதே , இவன் அதை செக் செஞ்சு வங்கியிருக்கலாமில்ல ! அட விடுங்க ! இவனை மாதிரி ஆளுங்க எப்போ தங்களோட குறைய கண்டுக்கிட்டங்க ! )
  
ஒருவழியாய் , அரிசியைக் கொடுத்துவிட்டு, சமையல்காரரையும் முறைத்து விட்டு , மீண்டும் சுவாமிஜி இருந்த இடம் வந்தான். வந்திருந்த விருந்தினர்கள் உள்ளே சாமி கும்பிட சென்றுவிட்டிருந்தனர்.

"சுவாமி !  எல்லாம் இறைவன் விருப்பபடிதான்  நடக்குதுன்னு சொன்னீங்களே ! அரிசி இல்லைங்கிறது முன்னாடியே தெரிவிக்க வேண்டிய சமையல்காரர் தன்னுடைய கடமையை சரியா செய்திருந்தால், நான் கடைக்குச் சென்ற  அலைச்சல் தேவை இல்லாதது தானே ! இதுல ஆண்டவன் சங்கல்ப்பம் எங்க இருந்து வந்தது  ? " அப்படின்னுக் கேட்டான் . ( எப்பூடி ! கேள்விய டயமிங்கா கேட்டுப்புட்டோமுல்ல ! )

 சுவாமிஜி ஒருமுறை அங்கிருந்த ஸ்ரீ ராமனின் திருவுருவ படத்தினைப் பார்த்தார். திரும்பி  ராம்ஸ்-ஐ பார்த்துப் புன்னகையித்தார். பின் நிதானமாக பேசினார்.
" தம்பி ! ஒவ்வொரு செயலும் இறைவனால் தீர்மானிக்கப் படுகிறது  என்பதுதான் உண்மை. நீ அரிசி வாங்க சென்றதற்கு சமையல்காரரின் கவனக் குறைவுதான்  காரணம் என எண்ணுகிறாய். ஆயின் அதன் மூலம் இறைவன் என்ன லீலைகளை நிகழ்த்தியுள்ளான் என்பதனை காணலாம் வா ! " என அவனை  அழைத்துக் கொண்டு மடத்தின் வாசல் தாண்டி வெளி கேட்டை நோக்கி  நடந்தார். 

அங்கே, நம்ம ராம்ஸ் அரிசி வாங்கி வரும்போது, ஓட்டை விழுந்த பையில் இருந்து அரிசி மணிகள் வழியெங்கும் சிதறி இருப்பதைக் கண்டார். மெல்ல குனிந்து தரையில் அமர்ந்த சுவாமிஜி , அவனையும் குனிந்து பார்க்கச் சொன்னார்.  

அங்கே, ராம்ஸ் சிந்திக்கொண்டே வந்த அரிசி மணிகளை சிற்றெறும்புகள்  பொறுக்கியபடி சாரை சாரையாய் சென்றுக் கொண்டு இருந்தன.


-----------
 

 ஜெய் ஸ்ரீ ராம் !

ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !  

நெல்லை வள்ளியூரில் அருள் மழை பொழியும் ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி

திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர்  அருகே அமைந்துள்ளது சாமியார் பொத்தை எனும் இடம். 

 (வள்ளியூர்  பொத்தை மலையின் சிவலிங்க தோற்றம் # 1   )

இந்த இடத்திலே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து , மறைந்தவர் மகான் ஸ்ரீ ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி . இவரை ஸ்ரீ அகத்தியரின் அவதாரமாகக் கருதுகின்றனர். தாம் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு அற்புதங்களைச் செய்தவர்  ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி.

 
  (வள்ளியூர்  பொத்தை மலையின் சிவலிங்க தோற்றம்  # 2   )

தற்போது இந்த இடத்தில் , பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா எனும் ஆன்மிக பெருந்தகை , ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி மிஷன் எனும் அமைப்பினை நிர்வகித்து ஆன்மிக பணி ஆற்றி வருகிறார்கள். 

பொத்தை மலை அடிவாரத்திலே , அழகிய இயற்கை சூழ்நிலையிலே , ஆசிரமம் அமைந்துள்ளது. அலைபாயும் மனம் எல்லாம் அந்த மண்ணினை மிதித்தாலே அமைதி பெறுவதை உணர முடியும். 

ஆசிரம மையப் பகுதியிலே , அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரிக்கு , ஆலயம் அமைந்துள்ளது. மிகப் பெரிய மைய மண்டபத்திலே லலிதையாம் ஸ்ரீ அன்னை, சிலா உருவினிலும் , மஹா மேரு உருவினிலும் அருள் மழை பொழிகிறாள்.

ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி ஜீவியந்தராக இருந்த காலத்தே தம்மை புகைபடம்  எடுத்திட அனுமதித்ததில்லை என்பதாலும், அவர் ஸ்ரீ அகஸ்தியரின் அம்சமாக இருப்பதாலும் , ஸ்ரீ அகஸ்தியரின் சிலை உருவினிலேயே  ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி ஆராதிக்கப் படுகிறார்.

பதினாறு வகையான ரூபங்களில்  கணபதியும் அருள் புரிகிறார். அன்ன கூடத்திலே அன்னபூரணி அருள்புரிகிறார்.

ஒவ்வொரு மாதமும் விளக்கு பூஜை நடைபெறுகிறது. ஆண், பெண் , சுமங்கலி , கன்னிப்பெண்கள் மட்டும் அல்லாது , கைம்பெண்கள் கூட இந்த பூஜையினிலே நேரிடையாக கலந்துக் கொள்ளலாம். "அனைவருள்ளும் அருள்வது அந்த அன்னையே"  என்ற உயர்ந்த  கோட்பாடு இங்கு கடைப் பிடிக்கப் படுகிறது. 

பௌர்ணமி தோறும் , பொத்தை மலையை சுற்றி , கிரி வலம் நடைபெறுகிறது.அருகில் உள்ள கிராமத்தினர் மட்டும் அல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கிரி வலத்திலே மக்கள் கலந்துக் கொள்கின்றனர். 

வசந்த நவராத்திரியும் , சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. பல்வேறு பூஜைகளும் , சங்கீத , நாட்டிய வைபோகங்களும் அந்நாட்களில் தினமும் அரங்கேறும்.

 அச்சமயங்களில் , அன்னை கொலுவிருந்து  காட்சி தரும் இந்த மண்டபம், உண்மையில் அந்த ஸ்ரீ புரமாகவே காட்சி அளிக்கும். இது பொத்தை மண்டபமா அல்லது அந்த ராஜராஜேஸ்வரியின் நிஜமான தர்பாரா என்ற வியப்பினை நமக்கு ஏற்படுத்தும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உன்னதமான கலைஞர்கள் வந்து,  தங்களது கலையினை இந்த தேவியின் திருவடியிலே சமர்ப்பிப்பதை தங்களது பாக்கியமாகக் கருதுகின்றனர். அச்சமயங்களில் அந்த  கலைஞர்களை  சாட்சாத்  கலாதேவியின் அம்சமாகவே கருதி  கௌரவிக்கப்படும் காட்சி கண் கொள்ளாதது.  

இங்கு சேவை புரியும் அன்பர்களின் பணிவும், தங்களது குரு "மாதாஜி" மீது கொண்டுள்ள  பக்தியும் , அர்ப்பணிப்பு உணர்வும் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

ஆன்ம பசி போக்கும் இந்த உயர்ந்த பணிகளோடு , வயிற்றுப்  பசி போக்கிடும் அன்னதான கூடம், அறிவு பசி போக்கிடும் நுண்கலை பயிற்சிகள் , உடற்பிணி போக்கிடும் மருத்துவ உதவிகள் என இவர்களது பணி நீண்டுக்கொண்டே போகிறது. அருகில் உள்ள எளிய கிராம மக்கள் இதனால் பெரும் பயன் அடைகின்றனர். 

வலிமையான உடல் நலத்தோடு ,  
திடமான உள்ள நலத்தோடு , 
அறிவின் உயர்வினோடு,
நுண் கலை திறத்தோடு, 
ஆன்ம விழிப்போடு
மேம்பட்ட 
ஒரு புதிய பாரதம் 
இவர்களால் உருவாக்கப் படுகிறது.  

அவர்களது இனைய தளம் :  

ஓம் நமோ பகவதே ஸ்ரீ முத்துகிருஷ்ணாயா !