வியாழன், 1 மார்ச், 2012

நெல்லை வள்ளியூரில் அருள் மழை பொழியும் ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி

திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர்  அருகே அமைந்துள்ளது சாமியார் பொத்தை எனும் இடம். 

 (வள்ளியூர்  பொத்தை மலையின் சிவலிங்க தோற்றம் # 1   )

இந்த இடத்திலே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து , மறைந்தவர் மகான் ஸ்ரீ ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி . இவரை ஸ்ரீ அகத்தியரின் அவதாரமாகக் கருதுகின்றனர். தாம் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு அற்புதங்களைச் செய்தவர்  ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி.

 
  (வள்ளியூர்  பொத்தை மலையின் சிவலிங்க தோற்றம்  # 2   )

தற்போது இந்த இடத்தில் , பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா எனும் ஆன்மிக பெருந்தகை , ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி மிஷன் எனும் அமைப்பினை நிர்வகித்து ஆன்மிக பணி ஆற்றி வருகிறார்கள். 

பொத்தை மலை அடிவாரத்திலே , அழகிய இயற்கை சூழ்நிலையிலே , ஆசிரமம் அமைந்துள்ளது. அலைபாயும் மனம் எல்லாம் அந்த மண்ணினை மிதித்தாலே அமைதி பெறுவதை உணர முடியும். 

ஆசிரம மையப் பகுதியிலே , அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரிக்கு , ஆலயம் அமைந்துள்ளது. மிகப் பெரிய மைய மண்டபத்திலே லலிதையாம் ஸ்ரீ அன்னை, சிலா உருவினிலும் , மஹா மேரு உருவினிலும் அருள் மழை பொழிகிறாள்.

ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி ஜீவியந்தராக இருந்த காலத்தே தம்மை புகைபடம்  எடுத்திட அனுமதித்ததில்லை என்பதாலும், அவர் ஸ்ரீ அகஸ்தியரின் அம்சமாக இருப்பதாலும் , ஸ்ரீ அகஸ்தியரின் சிலை உருவினிலேயே  ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி ஆராதிக்கப் படுகிறார்.

பதினாறு வகையான ரூபங்களில்  கணபதியும் அருள் புரிகிறார். அன்ன கூடத்திலே அன்னபூரணி அருள்புரிகிறார்.

ஒவ்வொரு மாதமும் விளக்கு பூஜை நடைபெறுகிறது. ஆண், பெண் , சுமங்கலி , கன்னிப்பெண்கள் மட்டும் அல்லாது , கைம்பெண்கள் கூட இந்த பூஜையினிலே நேரிடையாக கலந்துக் கொள்ளலாம். "அனைவருள்ளும் அருள்வது அந்த அன்னையே"  என்ற உயர்ந்த  கோட்பாடு இங்கு கடைப் பிடிக்கப் படுகிறது. 

பௌர்ணமி தோறும் , பொத்தை மலையை சுற்றி , கிரி வலம் நடைபெறுகிறது.அருகில் உள்ள கிராமத்தினர் மட்டும் அல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கிரி வலத்திலே மக்கள் கலந்துக் கொள்கின்றனர். 

வசந்த நவராத்திரியும் , சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. பல்வேறு பூஜைகளும் , சங்கீத , நாட்டிய வைபோகங்களும் அந்நாட்களில் தினமும் அரங்கேறும்.

 அச்சமயங்களில் , அன்னை கொலுவிருந்து  காட்சி தரும் இந்த மண்டபம், உண்மையில் அந்த ஸ்ரீ புரமாகவே காட்சி அளிக்கும். இது பொத்தை மண்டபமா அல்லது அந்த ராஜராஜேஸ்வரியின் நிஜமான தர்பாரா என்ற வியப்பினை நமக்கு ஏற்படுத்தும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உன்னதமான கலைஞர்கள் வந்து,  தங்களது கலையினை இந்த தேவியின் திருவடியிலே சமர்ப்பிப்பதை தங்களது பாக்கியமாகக் கருதுகின்றனர். அச்சமயங்களில் அந்த  கலைஞர்களை  சாட்சாத்  கலாதேவியின் அம்சமாகவே கருதி  கௌரவிக்கப்படும் காட்சி கண் கொள்ளாதது.  

இங்கு சேவை புரியும் அன்பர்களின் பணிவும், தங்களது குரு "மாதாஜி" மீது கொண்டுள்ள  பக்தியும் , அர்ப்பணிப்பு உணர்வும் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

ஆன்ம பசி போக்கும் இந்த உயர்ந்த பணிகளோடு , வயிற்றுப்  பசி போக்கிடும் அன்னதான கூடம், அறிவு பசி போக்கிடும் நுண்கலை பயிற்சிகள் , உடற்பிணி போக்கிடும் மருத்துவ உதவிகள் என இவர்களது பணி நீண்டுக்கொண்டே போகிறது. அருகில் உள்ள எளிய கிராம மக்கள் இதனால் பெரும் பயன் அடைகின்றனர். 

வலிமையான உடல் நலத்தோடு ,  
திடமான உள்ள நலத்தோடு , 
அறிவின் உயர்வினோடு,
நுண் கலை திறத்தோடு, 
ஆன்ம விழிப்போடு
மேம்பட்ட 
ஒரு புதிய பாரதம் 
இவர்களால் உருவாக்கப் படுகிறது.  

அவர்களது இனைய தளம் :  

ஓம் நமோ பகவதே ஸ்ரீ முத்துகிருஷ்ணாயா !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக