புதன், 7 டிசம்பர், 2011

சித்தர்கள் தரிசனம் # 1



 அருப்புக்கோட்டை ஸ்ரீ அய்யா சுவாமி (எ)  ஸ்ரீ வீரபத்திர சுவாமி சித்தர் 



 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் , அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவில் .

 ஸ்ரீ அய்யா சுவாமி என்று மக்களால் அழைக்கப்பட்ட ஸ்ரீ வீரபத்திர சுவாமி , திருச்சுழி     அருகே உள்ள பள்ளிமடம் என்ற ஊரினில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக அவதரித்து உள்ளார்கள். அவரின் இளமைக் காலம் குறித்து அதிகம் தெரியவில்லை. சில காலங்கழிந்த  பின் , அங்கிருந்து புறப்பட்டு அருப்புக்கோட்டை நகருக்கு வந்த சுவாமிகள் பின்பு நிரந்தரமாக இங்கேயே தங்கி விட்டார்கள். ஆலயம் அமைந்துள்ள பகுதி சாலியர் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.

அந்நாளில் இப்பகுதி மக்கள் அதிகம் படிப்பு அறிவு இன்றி விளங்கியதால் , சுவாமிகள் இப்பகுதி மக்களுக்கு படிப்பறிவினை வழங்கி உள்ளார்கள். தன்னிடம் இருந்த திருவோட்டில் தினமும் இரவில் பிக்ஷை ஏற்கும் சுவாமிகள் , அவ்வுணவினை அன்று இரவிற்கும் மறுநாள் பகலுக்கும் என வைத்துக் கொள்வார்கள்.

 லீலைகள் :

தனது காலத்தில் சுவாமிகள் புரிந்த பல லீலைகள் தற்போது அறியப்படாமல் மறைந்து விட்டது. சில சம்பவங்கள் மட்டுமே தெரிகிறது.

ஒருமுறை சுவாமிகள் பிக்ஷை கேட்டுச் சென்ற வீட்டில் உள்ள குழந்தைக்கு உடல்நலம் இன்றி அழுதுக் கொண்டே இருந்துள்ளது. சுவாமிகள் ஆசிர்வதித்து விபூதி அளித்த பின் அக்குழந்தை குணமாகி உள்ளது.

" இவ்விடத்திலே ஒரு ஆலயம் வரும், இவ்வீதியிலே தேரோட்டம் நிகழும் " என சுவாமிகள் முன்பே கூரியதின்படியே , அருகிலேயே ஆயிரங்கண் மாரியம்மன் ஆலயம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி உள்ளது. அம்மனின் திருத்தேர் வலமும் நடைபெறுகிறது.

ஒருமுறை சுவாமிகள் பழனி மலை சென்று இருந்தபோது , அங்கு குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டு இருந்துள்ளது. சுவாமிகள் தம்மிடம் இருக்கும் திருவடு நிறைய பழைய சாத நீரைக் கொடுத்து அதனையும் அபிஷேகம் செய்யும்படிக் கூறி உள்ளார்கள். அங்குள்ள பூசாரிகள் அதனை மறுத்து அத் திருவோட்டினை தூக்கி எரிந்து விட்டனர். ஆயின் அத்திருவோடு கீழே விழாமல் , அந்தரத்திலேயே நின்று உள்ளது. அதனைக் கண்டு அஞ்சி அதிசயித்த பூசாரிகள் , சுவாமிகளின் மகிமையை உணர்ந்து , அவரிடம் மன்னிப்பும் கேட்டு , அந்த நீரை அபிஷேகம் செய்து உள்ளனர் எனும் செய்தியும் அறியப்படுகிறது.

சமாதி :

சுவாமிகள்  மாசி மாதம் புனர்பூச நக்ஷத்திரம் அன்று, உயிருடன் சமாதியில் அடங்கி உள்ளார்கள்.வருடம் சரியாகத் தெரியவில்லை. சுவாமிகள் சமாதியான தினத்திலே , திருசெந்துரிலே மாசி விழாவில் ஷண்முக விலாசம் திருநாள் நடைபெற்றுக் கொண்டு இருந்ததாம். சுவாமிகள் அதே நாளில் அங்கேயும் தரிசனம் கொடுத்து உள்ளார்கள்.


ஆலய அமைப்பு :

அருப்புகோட்டை - விருதுநகர் பிரதான சாலையிலேயே இக்கோவில் அமைந்து உள்ளது.முன்மண்டபம் , கருவறை  என்ற  அமைப்பில் உள்ளது. கருவறையின் இருபுறமும் விநாயகர் , முருகன் சிலைகள் உள்ளன. பேச்சி அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. சாலிய சமுதாய மக்கள் வழிபடும் வகையிலே சாலிய மகரிஷியின் சிலையும் அமைந்து உள்ளது.
கருவறையிலே லிங்க உருவினிலே சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்து உள்ளது.நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர்தாம் இவ்வாலயத்தை அமைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

சுவாமிகள் பயன்படுத்திய ருத்ராக்ஷம் லிங்கத்தின் மீது அணிவிக்கப்பட்டு உள்ளது.சுவாமிகள் பயன்படுத்திய திருவோடும் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளது.

சுவாமிகள் நிறைய ஓலை சுவடிகள் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. அவை பழைய வட்டெழுத்து வடிவில் உள்ளதாகவும் , தற்போது அவை ஒரு தனி நபரிடம் இருப்பதாயும் ஆலயத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

 சுவாமிகளின் சமகாலத்தே பொன்னம்பல சுவாமிகள் என்பவரும் வாழ்ந்து உள்ளதையும் , அவரது சமாதி அருகில் உள்ள மாரியம்மன் கோவில் அருகிலேயே உள்ளதையும் தெரிவித்தனர்.

வழிபாடுகள் :

நித்திய பூஜைகள் நடைப்பெறுகின்றன. சுவாமிகளின் சமாதி நட்சத்திரமான புனர்பூசம் அன்று , மாதம் தோறும் சைவ திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது.
அன்று ஒன்பது வகையான அபிஷேகமும்  ,  பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் மாலையில் திருவாசகம் ஓதுதல் நடைபெறுகிறது.அம்மாவாசை அன்றும் ஒன்பது வகையான அபிஷேகமும் , அன்னதானமும் நடைபெறுகிறது.
சுவாமிகளின் சமாதி நாள் அன்று வருடந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அனுபவம் :

"முழுமையான நம்பிக்கையோடும் , சரணகதியோடும் வழிபாட்டால் சுவாமிகளின் அருள் வழிநடத்துவதை உணரமுடியும் " என்றுக் கூறுகிறார் திரு.தமிழரசன் என்பவர். இவர் கோவிலின் அருகிலேயே சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
"எனது மகளுக்கு பிரசவ வலி எடுத்து ஒன்றரை நாள் வரையிலும் குழந்தை பிறக்க வில்லை. இனி ஆபரேஷன்தான் செய்ய வேண்டும் எனும் சூழலில் , சுவாமிகளை மனதார வேண்டிக்கொண்டேன். அடுத்த இருபது நிமிடங்களில் என் மகளுக்கு சுக பிரசவமே நடந்து விட்டது." என பரவசமாகக் கூறுகிறார் அவர்.

நாமும் சுவாமிகளின் அடி பணிந்து அருள் பெறுவோம்.

குருவே சரணம்.
 

 


ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஸ்ரீ அரவிந்த அஞ்சலி

இன்று ஸ்ரீ அரவிந்தர் குரு சமாதி தினம் 

பூரண யோகம் தந்த பூரணனே !
பொன்னடி பணிகின்றேன் -
 புதுயுக காரணனே !

அஞ்சலிகள் ஆயிரம் செய்தாலும் தகுமோ
 தம்  அவதார காரணத்திற்கு.     
ஒவ்வொரு கணத்தினில் நன்றிகள்
நவின்றாலும் போதுமோ .

யுகத்தின் மாற்றத்திற்காய்
உவந்தளித்தாய் தேகத்தை !
விளம்பிடவும் அரிதாமோ
 தாம் செய்த தியாகத்தை !

 நன்றி ! எனும் வார்த்தையைத் தவிர
 வேறு ஏதும் அறியா எளியவனின்
 அஞ்சலியை
 தம் அவதார நிறைவு நாளில்
தம் தாளிலே அர்ப்பணிக்கின்றேன் .


 சரணம் ஸ்ரீ அரவிந்த குருநாதா!



செவ்வாய், 15 நவம்பர், 2011

ஆலயங்கள் ஆயிரம் # 3


இந்த பதிவிலே விஷ்ணுபதி புண்ய காலத்திலே சிறப்பாக அபிஷேகம் நடைபெறும்  வல்லம் ஸ்ரீ மாதவ பெருமாள் ஆலயம் குறித்துக் காண்போம்.

தஞ்சையை அடுத்த வல்லத்தில்  அமைந்துள்ளது  ஸ்ரீ மாதவ பெருமாள் மற்றும் ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலயம். தொன்மை மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் இது. 

தல புராணம் :

இப்பகுதியிலே முற்காலத்திலே வல்லாசுரன்   என்பவன் மிகுந்த தொல்லைக் கொடுத்து வந்துள்ளதாகவும் , அவனை அழித்திட எம்பெருமான் ஸ்ரீ நரசிம்ஹர் இவ்விடம் வெளிப்பட்டு அவனை  அழித்ததாகவும்  கூறப் படுகிறது. 

 மேலும், ஒருமுறை கௌதம மகரிஷியால் சாபம் பெறப்பட்ட இந்திரன் இத்தலத்திற்கு வந்து இங்கு அமைந்துள்ள வஜ்ர தீர்த்தத்தில் நீராடி இங்குள்ள பெருமாளை சேவித்து சாப விமோசனம் அடைந்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனாலேயே இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு"தேவேந்திரன் " என்றப் பெயரும் உண்டு. 

 சரித்திரக் காலம் :

 இப்பகுதி பண்டைக் காலத்தில்  விக்கிரம சோழனுடைய ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. 12  வது நூற்றாண்டைச் சார்ந்தக் கோவில் இது. கிட்டத்தட்ட 900  ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த ஆலயம். இது முற்காலத்தில் "விக்கிரம சோழ விண்ணகரம்  " எனப் போற்றப்பட்டு உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு சோழர்கள் நிறைய மானியங்களை எல்லாம் கொடுத்து உள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து வந்த   பாண்டியர்கள்,ஹோசலர்கள், நாயக்கர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு நிவந்தங்களை அளித்து உள்ளனர்.

சுல்தானிய படை எடுப்பின் பொது இந்த ஆலயத்தின் கோபுரம் இடித்து தள்ளப் பட்டு உள்ளன. அதனாலே இது "மொட்டை கோபுரம் " என அழைக்கப் படுகிறது.

இந்த ஆலயத்தின் உற்சவர் விக்ரகங்கள் தற்போது தஞ்சை அரண்மனையில் பாதுகாப்பாக உள்ளன. அநேகமாக இது அந்நிய படை எடுப்பின்போது அங்கு கொண்டு செல்லப் பட்டு  இருக்கலாம்.அவை விரைவில் இக்கோவிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட இருக்கின்றன. 

 கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் கவனிப்பாரின்றி புல்,புதர் மண்டி கிடந்த இந்த ஆலயம் கடந்த 1996 ஆண்டினில்தான் மீண்டும் சீர் செய்யப்பட்டு  தற்போது நித்ய பூஜைகள் நடைப் பெற்றுக் கொண்டு உள்ளன.

மூர்த்தம் :

ஸ்ரீ மாதவ பெருமாள் : இவர் சுயம்பு மூர்த்தி ஆவர். இவர் கிழக்கு நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.இடது  காலை மடக்கி அமர்ந்தக் கோலத்தில் பெருமாள் அமைந்து உள்ளார். 



ஸ்ரீ யோக நரசிம்ஹர்:  இவரும்  சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்து சேவை சாதிக்கிறார். இவர் தான் வல்லாசுரனை வதம் செய்தவர். 
 இந்த இரு மூர்திகலுமே சுதை அமைப்பில் உள்ளதால் இந்த மூர்த்திகளுக்கு நித்ய அபிஷேகம் கிடையாது. 
பல்வேறு யோகங்களையும், நலன்களையும் இந்த நரசிம்ஹர் வழங்குகிறார். இருதய கோளறு உள்ளவர்கள் வணங்க வேண்டிய தலம்  இது. கார்த்திகை மாதம் முழுவதும் இந்த நரசிம்ஹர் தமது தவத்தில் இருந்து வெளிப்பட்டு கண் திறந்து  இருப்பதாக ஐதீகம்.

தாயார் :  கோமலவல்லி தாயார்.
  
பிற சன்னதிகள் :
 ஸ்ரீ ராமர், ஆழ்வார்கள், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர்  ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.


தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம் 


உற்சவங்கள் :
ஒவொரு பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நரசிம்ஹாருக்கு நடைப்பெறுகின்றன.
ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் திருக்கல்யாணம் , வைகுண்ட ஏகாதசி , ஸ்ரீ ராம நவமி , ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைப் பெறுகின்றன. 

 தற்போது சில ஆண்டுகளாக ஒரு பெண்மணியின் ஏற்பட்டால் விஷ்ணுபதி புண்ய காலத்தில்  இந்த ஆலயத்தில் சிறப்பாக அபிஷேகம்  நடைப் பெறுகின்றன.
கோவில் திறந்து இருக்கும் நேரம் :

காலை 6  மணி முதல்  10  மணிவரை 
மாலை 5  மணி முதல் 8  மணி வரை 


தொடர்புக்கு :
திரு. குப்புசாமி பட்டர் 
9943732491 
04362 266553 

விஷ்ணுபதி புண்ய கால தர்ப்பணம்

முன்னோர்களுக்கு செய்யப்படும் நீர்த்தார் கடனில் ஒன்றுதான் தர்ப்பணம். இதை பொதுவாக அம்மாவாசை அன்று பெரும்பாலானோர் செய்வது உண்டு.  முந்நாட்களில் நித்ய தர்ப்பண முறைகள் இருந்துள்ளன. காலத்தின் வேகத்தில் அவை எல்லாம் தற்போது மறைந்து விட்டன.

 'அம்மாவாசை' போன்றே விஷு புண்ய காலங்களான உத்தராயணம், தட்சிணாயணம் , மாத பிறப்பு , கிரகண காலங்கள் , மகாளய பட்சம்  போன்ற விசேஷ காலங்களில் தர்ப்பணம் செய்வது உண்டு. இதில் ஆடி அம்மாவசை மற்றும் மகாளய அம்மாவசை காலங்களில் தர்ப்பணம் செய்பவர்கள் அதிகம். 

அதே போன்று இந்த விஷ்ணுபத்தி புண்ய காலத்திலும் தர்ப்பணம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது. எனவே தர்ப்பணம் செய்யும் அன்பர்கள் இந்த விஷ்ணுபதி புண்ய காலத்திலே தர்ப்பணம் செய்து, ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருளாசியப் பெறுவதோடு , முன்னோர்களின் ஆசியினையும் பெற்றுக் கொள்ளவும்.

வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்யகாலம்


புண்யகாலம் என்பதை 
1 . விஷு புண்ய காலம் 
2 . உத்தராயண புண்ய காலம்
3 . தக்ஷிணாயன புண்ய காலம் 
என பலவராகக் கூறுவோம்.  இதைப் போலவே விஷ்ணுபதி புண்ய காலம் என்பதுவும் மிகவும் சிறப்பானது. 

பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் , அனுஷ்டிக்கும் விரத முறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர்.

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது. 

ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவது உண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி , ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. 

கர வருடத்தில் ஏற்கனவே இரண்டு விஷ்ணுபதி புண்ய காலங்கள் முடிவடைந்து விட்டன. மூன்றாவது காலம் வரும் நவம்பர் 17 அன்று வருகிறது.அன்றுதான் கார்த்திகை மாத பிறப்பு. அன்று சூரியன் துலா ராசியில் இருந்து விருசிக ராசிக்கு பயணிக்கிறார். அன்றைய தினத்தில் அதிகாலை  1 :30  மணி முதல் காலை 10 :30  மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9  மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது. 

இந்த புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லா தேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம். ஸ்ரீ விஷ்ணு  மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவற செய்யலாம். முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம் . அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். துளசி பூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப் ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம்.

அதே போன்று அன்றைய தினத்திலே, செய்யக் கூடாத செயல்களைத் தவிர்ப்பதுவும் நன்று. 

இந்த புண்ய காலத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு  இதனைத் தெரியப் படுத்தி அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்வதுவும் மிகச் சிறந்த வழிபாடு ஆகும். 

ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது , பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60  ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும்  வரக்கூடிய நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். எனவே இந்தமுறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்ய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ய காலம் வருவதற்கு மீண்டும் 60  ஆண்டுகள் ஆகும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாதீர்கள். இந்த  விஷ்ணுபதி புண்ய காலம் "சௌபாக்ய ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம் " என அழைக்கப் படுகிறது.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம்  உலகாதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும்  பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் . ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லது இந்த புண்ய காலம் ஆகும்.

 எல்லோரும் இந்த புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக. 



திங்கள், 14 நவம்பர், 2011

எனது சதுரகிரி அனுபவம் (தொடர்ச்சி....)

 சதுரகிரி பயணம் என்பது எவ்வளவு  கடினமானது என்பது அதில் பயணம் செய்தவர்களுக்கே தெரியும். அதிலும் ஒரு மாட்டினையும் அதன் கன்றினையும் மலை மேல் அழைத்துச் செல்வது என்பது மிகவும் கடினம் என்பது சொல்லாமலேயே புரியும்.


முதல் நாள் காலையில்    விரைவாகப் புறப்பட்ட நண்பரின் குழு,  மாட்டினையும் கன்றினையும் மிகவும் ஜாக்கிரதையாக அழைத்துச்சென்று உள்ளனர். கன்றினை முன்னாலே அழைத்துச் செல்ல , பின்னே மாட்டினை அழைத்துச்  சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட தூரம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. வழுக்குப்பாறை எனும் இடம் வந்தவுடன், மிகவும் சிரமப்பட்டு மாட்டை அதில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.அதில் பாதி வழியைக் கடந்த மாடு அதற்க்கு மேல் நகராமல் அங்கேயே படுத்து விட்டது.
எவ்வளவோ முயற்சி செய்துப் பார்த்தும் மாடு எழுந்திருக்கவே இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து எமது நண்பர் குழுவினர் நின்றிருந்த வேளையில் , மலை மேலிருந்து கீழே இறங்கி ஒருவர் வந்துள்ளார்.

இவர்கள் நிலையைக் கண்டு  , அதன் காரணத்தையும் கேட்டு அறிந்த அவர், தமது பையில் வைத்து இருந்த விபூதியை எடுத்து "சுந்தர மகாலிங்கம் , சந்தன மகாலிங்கம் " எனப் பிரார்த்தித்து மாட்டின் மீது போட்டதுதான் தாமதம் , அதுவரை எழாத மாடு உடனேயே எழுந்து நடக்கத் துவங்கி விட்டது. 

 என்னே மகாலிங்கத்தின் மகிமை ! .

தன்னை நாடி வரும் அடியார்கள் பயணத்தை மட்டும் அல்ல , ஐந்தறிவுடைய ஜீவன்களிடமும் கருணைக் கொண்டு அதனுடைய பயணத்தையும் காத்தருளும் அய்யனின் மகிமையை என்னென்பது. 

நாங்கள் குடும்பத்துடன் மறுநாள்  அங்குச் சென்று , (அது ஒரு ஐப்பசி அம்மாவாசை நாள்) மாட்டினை இறைவனுக்கு காணிக்கையாக்கிவிட்டு , மனமார வழிபட்டுத் திரும்பினோம். 

சந்தன மகாலிங்கம் போற்றி !
சுந்தர மகாலிங்கம் போற்றி  !

சனி, 12 நவம்பர், 2011

எனது சதுரகிரி அனுபவம்


ஒரு பரிகாரத்தின் பொருட்டு ஒரு பசுவையும், கன்றையும் எதாவது ஒரு சிவாலயத்திற்கு அர்பணிக்க வேண்டும் என ஜோதிடர் ஒருவர் கூறியதன் பேரில், சதுரகிரி மலைக்கு பசுவைக் காணிக்கையாக அர்பணிக்க ஏற்பாடு ஆயிற்று.

நாங்கள் அதற்க்கு முன்பு சதுரகிரி சென்றது இல்லை என்பதால், எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியை நாடினோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலேயே வசிப்பவர், மற்றும் அவருக்கு சதுரகிரி மலையை அடுத்து கொஞ்சம் விவசாய நிலங்களும் உண்டு.

 அவர் எங்களது வேண்டுதலைக் கேட்டு , " சாதாரண பசு மாடுகள் மலையில் வசிக்காது, எனவே மலை மாடுகள் என ஒரு வகை உண்டு , அதனைத்தான் மலை மேல் காணிக்கையாக்க இயலும் " எனக் கூறியதன் பேரில், மலை மாடு வாங்கும் பொறுப்பையும் அதனை மலை மேல் கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டு , நாங்கள் அனைவரும் மறுநாள்  சதுரகிரி செல்வதாய் முடிவு செய்யப்பட்டது.

அந்த நண்பரும் , எனது தந்தை மற்றும் எனது மாமனார் ஆகியோர் ஒரு நல்ல மலை மாடாகப் பார்த்து அதன் கன்றோடு சேர்த்து விலை பேசி முடித்தனர்.

மலை மாடு என்பது பசு மாட்டிலேயே பெரிய உருவமாக இருக்கும். மலை அடிவாரங்களில் அதிகம் வளர்க்கப்படும். அதற்க்கு பெரும்பாலும் மூக்கணாம் கயிறு கூட போட மாட்டார்கள். அதனால் அது முரட்டுத்தனமாக     இருக்கும்.
 அம்மாட்டினையும் , அதன் கன்றையும் மலை மேலே அழைத்துச் செல்ல , மலை வாழ் பணிகர்  ( சதுரகிரி மலை மேலேயே வாழ்பவர் ) ஒருவரையும் வேறு இரு கூலி ஆட்களையும் துணையாக அமைத்துக் கொண்டு , எங்கள் குடும்ப நண்பர் முதல் நாள் சதுரகிரிக்கு கிளம்பினார்.

 ( தொடரும் )

புதன், 9 நவம்பர், 2011

கந்தன் கருணை # 3


இதுதான் போட்டி என 
இறைவனும் முடித்தக்  கணமே 

தண்டைகள் சிலம்போடு ஆட 
மேல் ஆடையும்   பின்னே ஓட 
ஒரு காலினை கயிலையில் மிதித்து 
மறு காலினை மயிலினில் பதித்து 
யாவரும்    காணும் போதே
கணத்தில் பறந்தான் குமரன்.(9)
 
கண்ணினில் பிறந்த கந்தன்
காற்றிலே கடுகி மறைய,
உமையவள் உடலினில் உதித்த 
உயரிய கணபதியோ 
தன் பேருடல் அசைய வந்தான் (10).

"அண்டம் அவனி எல்லாம் 
அன்னை தந்தையுள்  தானே ? "
என
விநாயகனும் வினயமாய்க் கேட்க

"வெல்பவன் இவன் தான் " என்றே
மனதினுள் மகிழ்ந்த நாரதர் 
" உண்மை அதுவே "
என்று உரத்தே உரைத்தார் அங்கே (11) .

உண்மை இதுவே என
தானே அறிந்த போதும்
ஆன்றோர் உரைத்ததே
உலகிற்கு 
சான்றாய்க் கொண்டு  (12)

அந்த வேழ முகத்தானும்
தன் திருவடியை  சிறு அடியாய் 
அடி மேல் அடி வைத்து
மெல்ல நடந்தான் - ஆம்
பழம்
வெல்ல நடந்தான்.
அம்மை அப்பனை 
வலம் வந்தான் ,
"ஞாலம் வலம் வந்தேன் " என்றான்.
பழமும் வென்றான். (13)

(தொடரும் .. )    

வெள்ளி, 4 நவம்பர், 2011

கந்தன் கருணை # 2


காணுதற்கு நல்ல கயிலையில் 
ஈசனோடு உலக அன்னை
நல்ல பல யோசனைகள்
செய்யும் ஒரு காலை-
யாண்டும் மூவுலகமும் 
வேண்டும் படி செல்லும் 
மாமுனி நாரதர் - ஒரு
மாம்பழத்தோடு வந்தார்.(4 )

'இது காணுதற்கு அரிய கனி
  ஈசன் உண்ணுதற்குரிய  கனி  '
என அந்த கலக முனி
பழத்தை பரமனிடம்
பணிந்துத் தந்தார்.(5 )

ஒரு மாங்கனியைக்   கண்ட
இரு பிள்ளை கனிகள்
திரு முகங்கள் மலர 
அதை பங்கிட்டு தரும்படி கேட்டனர்.(6 )

இதுவே  தருணம் என  பிரம்ம முனியும்
கனியை  விள்ளாமல் கொள்ளுதலே முறை
என மெல்ல கலகம் தொடர்ந்தார். (7)

வெள்ளை பனி மலை வாழும் - அந்த
விடை ஏறும் வேந்தனும் மனதினில்
 விளையாடும் எண்ணம் கொண்டு
 "விநாயகா ! வேலவா !
 வேண்டும் இந்த கனி உமக்கு எனில்
 விரைவில்  இந்த உலகம் முழுதும்
 சுற்றி வருவீர் !
முதலில் வந்தவர் இதை
உங்களின் விருதாய்
உண்ண  விருந்தாய்  பெறுவீர்!"  என்றார். (8)

ஒரு தெய்வீக நாடகம்
 மெல்லத் துவங்கியது .
(தொடரும்.... ) 

வியாழன், 3 நவம்பர், 2011

ஆலயங்கள் ஆயிரம் # 2

அழியாபதி ஈஸ்வரர் திருக்கோவில் 

கடந்த பதிவில் இரட்டை சிவதலங்களில் ஒன்றான அக்னி ஈஸ்வரர் கோவில் குறித்துப்  பார்த்தோம்.இந்த பதிவில் மற்றொரு ஸ்தலமானஅழியாபதி ஈஸ்வரர் திருக்கோவிலைப் பார்போம்

ஸ்தல புராணம் :
 தக்கன் மீதான கோபத்தில் அமர்ந்த அக்னி ஈஸ்வரரின் கோபத்தை சமன் செய்யும் விதத்தில் , மக்களின் வேண்டுகோளை ஏற்று கோரக்கர்  சித்தர் இந்த ஸ்தலத்திலே இறைவனை பிரதிஷ்டை செய்துள்ளதகக் கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு :
 அக்னி ஈஸ்வரரின் கோவிலுக்கு நேர் எதிராக , தாமிரபரணி ஆற்றின் மறு கரையிலே கிழக்கு நோக்கியவாறு , அழகிய வயல் பரப்பிற்கு மத்தியிலே ஆலயம் அமைந்துள்ளது.
சுற்றிலும் மதில் சுவர்களுடன் கோவில் கம்பீரமாக உள்ளது. சுற்றுப் பிரகாரத்தில்  கணபதி, தக்ஷிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் , பைரவர் ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ளன.
உள்ள மண்டபத்திலே கணபதி , சுப்ரமணியர்  உள்ளனர். சாஸ்தா இங்கே பீடம் உருவில் அருள்புரிகிறார். நெல்லையைச்  சார்ந்த சில வைதிக குடும்பங்களுக்கு இந்த சாஸ்தா குல தெய்வமாக அருள் புரிகிறார்.



                                         

                            

                                          

                                               

உள்ளே ஈசன் கம்பீரமாக சற்றே பெரிய உருவிலே அருள் புரிகிறார். நாககுடை மேலும் அழகினைக்க் கூட்டுகிறது.அருகில் தெற்கு நோக்கியவாறு அம்பாள் அருள் புரிகிறாள். நம்முடைய குறைகளை இறைவனிடம் எடுத்துக் கூறும் விதமாக அன்னையின் முகம் ஈசனின் சன்னதியை நோக்கியவாறு உள்ளது சிறப்பம்சமாகும்.

                                               

ஸ்தலத்தின் சிறப்பு :
கர்ம வினைகளையும் , முன் ஜென்ம கர்மங்களையும் தீர்த்து வழி கட்டும் ஸ்தலமாக அமைந்துள்ளது. 
பூஜைகள் :
நித்திய பூஜை நடைபெறுகிறது. மேலும் பௌர்ணமி மற்றும் பிரதோஷம் ஆகிய தினங்களில் மக்கள் கூடி பூஜைகள் செய்கின்றனர். 

அமைவிடம் :
நெல்லை டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.



புதன், 2 நவம்பர், 2011

விஷமக்காரக் கண்ணன் # 1

அன்றொரு நாள் .....
அன்னையின் அணைத்த கையை விலக்கி
ஓடி மறைகிறான் கண்ணன் 
 நம் உள்ளம் கவர் கள்வன் 

கண்ணனைத் தேடி  யசோதையின் 
விழி அலைந்தது .
கோகுலம் முழுவதையும் அளைந்தது.

வினவுகிறாள் அவள் 
அந்த வீதி வழி வந்த கோபியரிடம் 
"கண்டீர்களா எங்கேனும் 
என் செல்லக் கண்ணனை " என்று .

மோக்ஷம் அளிக்கும் புண்ணிய நாமம் தான் 
கண்ணனின் நாமம் - ஆயின் 
அன்று கோபியருக்கு அதன் மேல் 
தீரா கோபம் .


" போதுமே நின் பிள்ளையின் சமத்து "
 என்று ஒருத்தி முகம் நொடித்தாள் 
மற்றொருத்தி  புருவம் நெரித்தாள் .

முன்னவள் பகன்றாள் - இல்லை இல்லை 
 கோபத்தில் கனன்றாள் 
" கறந்த பாலை தயிராக்கி கலயத்திலே இட்டு 
என் தலை மேல் வைத்து கொணர்ந்தேன் யான் 
கல்லால்தான் அடித்தானோ இல்லை - தன்
கண்ணால்தான்   அடித்தானோ -தயிர் பானையை 
உன் பிள்ளை 

கட்டி தயிர் எல்லாம் கொட்டி - என் 
கெட்டி சேலை கெட்டுப்போச்சு - அம்மம்மா 
உன் பிள்ளையின் வேஷம் வெளுத்துப் போச்சு "
என  அவள் முடிக்கும் முன்னே 

"இதையும் கேள் "என இடை மறித்த 
மற்றொரு இடைப் பெண் 
 "
புடவைகளைக்  களைந்து 
கரையிலே வைத்திட்டு 
புனலாடச் சென்றோம் - நாங்கள்.
 புல்லாங்குழல் ஊதி 
எங்கள் மனம் மயக்கி 
எங்கள் ஆடைகளைத் 
திருடிச் சென்றான் - உன் பிள்ளை .
அவனைக்  கெஞ்சியும் , மிஞ்சியும் 
 பலன் இன்றி - மீண்டும் 
பெற்றோம் எங்கள் பட்டு - வேறு வழி இன்றி 
எங்கள் வெட்கம் விட்டு .
உன் சமத்து பிள்ளை வந்தால் 
நன்கு திட்டு .
முடிந்தால் நாலு தட்டு தட்டு " 
என கடுகடுத்தாள்.


(தொடரும் ....)

.

கந்தன் கருணை # 1


பரமனின் கண் பொறி  
வழியாய்ப்  பிறந்தான் கந்தன். 
கார்த்திகை பெண்கள் மகிழ்ந்து நீராட்ட 
உருவினில் அறுவராய் வளர்ந்தான் .
உலக அன்னை உவந்து பாலூட்ட
அறுவரையும் மலெரென எடுத்தாள்
ஓர் உருவாய்த் தொடுத்தாள் -
உணவளிதாள். (1)

பேரறிவு  மூலத்தினின்று பிறந்தவன்
 வேதத்தையே மழலையாய் மொழிந்தான் 
 ஞானமே உருவாய்  வளர்ந்தான் (2)

பூரணனே  அண்ணனாய் விளங்கிட 
தோளோடு தோள் சேர  நடந்தான் - உமை மகிழ
விளையாடி மகிழ்ந்தான்  (3)


(தொடரும்...)

ஆலயங்கள் ஆயிரம் # 1

அக்னி ஈஸ்வரர் திருக்கோவில் + அழியாபதி ஈஸ்வரர்  திருக்கோவில் இரட்டை ஆலயங்கள்


நெல்லை மாவட்டத்தில் , மேலப்பாளையம் அருகே நத்தம் என்னும் ஊரின் அருகே  அமைந்துள்ளது கோமதி அம்பாள் உடனுறை  அக்னி ஈஸ்வரர் ஆலயம். மேற்கு நோக்கிய ஆலயம்.தாமிரபரணி நதியின் கரையிலே அமைந்துள்ளது.

ஸ்தல புராணம் :
தக்கன் யாகத்தால் மனம் வெகுண்ட ஈசன் இவ்விடம் வந்து மேற்கு நோக்கி அமர்ந்தார். ஈசனின் கோபத்தால் , அவரின் பார்வை பட்ட இடங்கள் எல்லாம் எரிந்து அடிக்கடி  கருகின. உதாரணம் : கருங்காடு , கருப்பந்துரை போன்ற ஊர்கள் . 

இதனால் மனம் வருந்திய மக்கள் , அவ்விடம் வந்த கோரக்கர் சித்தரிடம் முறையிட்டனர். அவரும் மக்களுக்கு நல் வழி காட்டிட எண்ணி , தாமிரபரணி ஆற்றின் மறு கரையிலே ,  இவ்வாலயத்திற்கு நேர் எதிராக மற்றொரு லிங்கத்தை கிழக்கு நோக்கியவாறு பிரதிஷ்டை செய்தார்.

 இதனால் மக்கள் காப்பாற்றப்பட்டனர். அந்த லிங்கத்திற்கு "அழியாபதி ஈஸ்வரர் " என்ற திருநாமம் வழங்கலாயிற்று. 

அக்னி ஈஸ்வரர் திருக்கோவில் : 





இங்கு  அமைந்துள்ள நந்தி மேஷ நந்தி என அழைக்கப்படுகிறது. மேஷ ராசி அன்பர்களுக்கு சிறந்த வழ்பாடுத் தலமாகும். குறிப்பாக பரணி நட்சத்திர அன்பர்ரகளுக்கு உரிய தலமாகும். இந்த நந்தி ஆட்டின் முகத்தோடும் , காளை உடலோடும் அமைந்துள்ளது. இது  செவ்வாய் ப்ரீத்தி ஸ்தலமாகவும் உள்ளது.  


லிங்கம் ஸ்வயம்பு மூர்த்தி ஆகும்.மேற்க்கே நோக்கிய வண்ணம் அமைந்த அற்புதமான கோலம். ருத்ராக்ஷத்தில் உள்ள வரிகளைப் போலவே பட்டைகள் அமைந்த லிங்க உருவம்.ஒரு பெரிய அளவு ருத்ராக்ஷமே லிங்கமாக அமைந்தது போன்ற உணர்வு.


                                        (அம்பாள் ஆலயத்தின் அழகிய தோற்றம் )








 அம்பாள் சிலை இமய மலையில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஆகம விதிப்படி  பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதாக நம்பப்படுகிறது . அம்பாள் உடல் முழுவதும் உத்ராக்ஷம் போன்ற உருண்டைகள் காணப்ப்படுகின்றன. நின்ற கோலத்தில் உயரமான தோற்றத்திலே , வலகரத்திலே மொட்டவிழ் மலரைத் தாங்கியபடி , அருள் கோலம் பூண்ட  தோற்றம்.






ஆலய அமைப்பு :



நந்தி மண்டபம் தாண்டி உள்ளே சென்றால் , உள் பிரகாரம் அமைந்துள்ளது . 
மூன்று கணபதிகள் , சூரிய - சந்திரர் , சுப்பிரமணியர் , பைரவர் , நவகரகாம் , தக்ஷினாமூர்த்தி என பரிவார தெய்வங்கள் உள்ளன.










வெளி மண்டபம் தாண்டி  அர்த்த மண்டபம் தாண்டி கர்பக்ரஹத்தில்
ஈசன் சுயம்புவாய் அனுகிரகம் செய்கிறார்.அம்பாள் தனி சன்னதி கொண்டு அருள் புரிகிறாள். உயரமான உருவம். வெளி மண்டபம் , அர்த்த மண்டபம் , கர்பகிரகம் என சன்னதி அமைந்துள்ளது. 
வெளியே பெரிய மதில் சுற்று இரு சன்னதிகளுக்கும் அமைந்துள்ளது. 

தொடர்புடைய சித்தர் :  
கோரக்கர் 
பூஜை :
ஸ்ருங்கேரி மடத்தின் மூலம் கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. 

தொடர்பு : திரு. கோபி பட்டர். செல் :9698858027  



அழியாபதி ஈஸ்வரர் ஆலயம் அடுத்த இடுகையில் ......




.

பிள்ளையார்


 அனைவருக்கும் மூத்தவன் 
ஆனால் என்றைக்கும் - பிள்ளைஅவன் 

பொல்லா வினைகள் எளிதல் 
அகற்றுவான் - ஆயினும் 
எல்லா பிள்ளைகளுக்கும் 
 விளையாட்டுத் தோழனவன் 

பொற்பதம் போற்றுவோம் 
கணபதி வாழ்கவே 


வணக்கம்


இறைவனை நாடும் இதயங்களுக்கு 
வணக்கம் 

பக்தி யுகம் இடுகைக்கு 
அன்போடு வரவேற்கிறேன்

உலகிலே பல சமயங்கள் இருந்தாலும் 
நம் சனாதன தர்மத்திற்கு 
என்றுமே தாய்க்கு உண்டான தனி இடம் உண்டு.

காலம் காலமாய் 
மாற்றங்களை தாங்கி 
 கருமேகக் கூடங்கள் 
மறைத்ததையும் மீறி 
 காலத்திற்கு ஏற்ற 
கோலம்  பூண்டு 
பழமை மாறாமல் 
யாண்டும் நிலைக்கும் 
நம் தர்மத்திற்கு 

மீண்டும் மீண்டும் 
வணக்கங்கள்



 


 
 

Welcome

Welcome to Bakthi Yugam