வியாழன், 1 மார்ச், 2012

சும்மா ஒரு கதை சொல்லறேன் !


ராமசந்திரன்  ஒரு படித்த இளைஞன். எப்போதும் ராம நாமத்தை உச்சரிக்கும் பழக்கமுடைய அவனுடய தாத்தா வைத்த பெயர் அது. பாவம் அவர் படிக்காதவர். இப்படி ஒரு கருநாடகமான பெயரை வைக்கலாமோ ? 

கல்லூரி நாட்களில் , யாராவது தன்னுடைய பெயரைக் கேட்டாலே சொல்லுவதற்கு அவனுக்கு அவ்வளவு வெட்கமாய் இருக்கும். அதனால் தன்னுடைய பெயரை "ராம்ஸ்" என மாற்றிக் கொண்டான்.

படிப்பில் அவன் ஒரு சிறந்தமாணவன் இல்லை என்றாலும் , சோடை இல்லை. ஆனால் வெளியே நிறைய படித்தான். புதிய சித்தாந்தங்கள் அவனுடைய அறிவை நவீனப்படுத்தின (?) . பழைய கருத்துக்கள் , சமய கோட்பாடுகள் எல்லாவற்றினையும் தன் மேம்பட்ட அறிவினால் உரசிப்பார்த்து எடைபோட்டு விமர்சிப்பதில் புலியாக விளங்கினான். அதனால் அவன் வயது நண்பர்கள் மத்தியிலே அவன் பெரிதும் மதிக்கப் பட்டான். 

படிப்பு முடிந்து பல காலமாகியும் வேலை கிடைக்காத காரணத்தால் , உள்ளூரிலேயே, அவனுடைய தாத்தாவிற்கு பழக்கமான மடம் ஒன்றில் , மேலாளர்  வேலையில் , அரை மனதாக  சேர்ந்தான். 

அந்த மடத்தின் தலைவரான சந்யாசியும்  , அவன் தாத்தாவைப் போலவே ஒரு "ராம நாம பைத்தியம்". அவர்பெயர் சூட்சுமானந்தா. அவன் துணிந்து தன்னை  "ராம்ஸ்" என்றுதான் அழைக்கவேண்டும் என அவரிடமே சொல்லிவிட்டான்.  (  நல்ல காலம்!  சுவாமிஜியின் பெயரையும்    சுருக்கி "சூச்சு" என ஆக்காமல் விட்டானே!  அந்த மட்டும் அவர் தப்பித்தார். )

அவரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அவர் கூறினார்-
 " அப்பா ! இவ்வளவு காலமும் நான் ராமா! ராமா ! என ஒருமையில்தான் இறைவனை அழைத்து வந்தேன். உன்னை "ராம்ஸ்" என அழைப்பதன் மூலம் ஒரே நேரத்திலே அவனை பன்மையில் அழைக்கும்படியான வைப்புக் கிடைத்தது. (RAMs) . ராமனுக்கு நன்றி." 

ஆனால் நம்ம  ராம்ஸோ அவரின் "அறியாமையை" எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். மற்றபடி வேலை என்று வந்து விட்டாலோ அவன் எதற்கும் அஞ்சமாட்டான். நேரம் போவதே தெரியாமல் முழுமையாக வேலை பார்ப்பான்.

மடத்தில் பூஜை,ஆராதனை என்றால் அவன் கடைசியில்தான் கலந்துக்கொள்ளுவான் , அதுவும் பொங்கல் ,புளியோதரைக்காக மட்டும்தான். (ஆயிரம்தான் சொல்லுங்க.   மடத்து பொங்கலுக்கும் , புளியோதரைக்கும் ருசி தனிதான் . அது என்னமோ தெரியல ! என்ன மாயமோ தெரியல! )

அவன் மடத்தில் செய்ய விரும்பிய பல நல்ல மாற்றங்களை சுவாமிஜி வரவேற்கவே செய்தார். அவன் தானாக சென்று , சுவாமிஜியிடம் எந்த வாதம் செய்யாவிட்டாலும் , அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் , வாதம் செய்ய தயங்குவதும் இல்லை. 
அன்றைக்கு  சில பக்தர்கள்  விருந்தினராக மடத்துக்கு வந்திருந்த சமயம் ,
" உலகிலே எல்லாமே இறைவன் முன்பாகவே தீர்மானித்தபடிதான் நடக்கிறது ! "

என இவன் அருகில் இருக்கும்போதே, சுவாமிஜி  உபதேசம் செய்துக் கொண்டு இருந்தார். ( சுவாமிஜிக்கு போறாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். )

விடுவானா நம்ம ஹீரோ !
 " அது எப்படி சுவாமி ?   நம் நடைமுறை வாழ்வு கூட  இறைவனால் தீர்மானிக்கப்படுகிறதா ? நாம் நடப்பதும் , போவதும் , வருவதும் கூட இறைவன்  தீர்மானித்தபடிதானா ? தாங்கள் கூறுவது ஏற்கும்படியாக இல்லையே ! " என்றான் . (மடக்கிட்டோம்முல்ல ! )

அவனை ஒருமுறை தீர்மானமாய் பார்த்த  சுவாமிஜி , எதோ சொல்ல வாய் எடுத்தார். அதற்குள் , மடப்பள்ளி சமையல்காரர் இவனை அவசரமாக அழைத்தார்.  

"தம்பி , அரிசி இருப்பில் இல்லை. நேற்றே வரவேண்டிய அரிசி இன்னமும் வரவில்லை. மடத்துக்கு விருந்தினர்கள்  வேறு திடீரென வந்துள்ளனர். உடனடியாக உலை வைக்க வேண்டும். என் உதவியாளர் வேறு இன்று விடுமுறை . தாங்கள் தவறாய் எண்ணாமல் , அருகில் உள்ள கடைக்குச் சென்று , இன்றைய தேவைக்கு  மட்டும் கொஞ்சம் அரிசி வாங்கி வாருங்கள் " என கேட்டுக் கொண்டார். 

ராம்ஸ்க்கு கோபமாக வந்தது. 'அரிசி இல்லை என்பது நேற்றே தெரியும் என்றால், அதை முன்பாகவே சொல்லுவதற்கு என்ன? எதிலும் முன்யோசனையே இல்லை. மடப்பள்ளி தேங்காய் துருவி போல சமையல்காரரின் மூளையும் மழுங்கி விட்டது போலும் . ஆகட்டும் ! விருந்தினர் போகட்டும் , இவரை சாணை பிடிக்கிறேன் ' என மனதிற்குள் கருவியபடி, அவர் தந்த பையினை வாங்கிக் கொண்டு வேகமாகச் சென்றான். 

ஆனால் விதியைப் பாருங்கள் , (ஆங் ! அதுலதான் எங்களுக்கு நம்பிக்கை இல்லையே ! ) அரிசி வாங்கிக் கொண்டு , வரும் வழியிலேயே , அந்த நைந்து போன பையின் ஒரு ஓரம் கிழிந்து , அரிசி ஒழுகத் துவங்கியது.

 "முட்டாள் சமையல் காரனே ! நல்ல பையாய் கொடுத்துவிட்டல் என்ன " என மனதினுள் மேலும் அவரை திட்டியபடி தன் கைக்குட்டையை அந்த ஓட்டையில் திணித்து சரி செய்த படி  அரிசியை கொண்டுவந்தான்.  ( ஆமா ! பையை சமையல்காரர் தரும்போதே , இவன் அதை செக் செஞ்சு வங்கியிருக்கலாமில்ல ! அட விடுங்க ! இவனை மாதிரி ஆளுங்க எப்போ தங்களோட குறைய கண்டுக்கிட்டங்க ! )
  
ஒருவழியாய் , அரிசியைக் கொடுத்துவிட்டு, சமையல்காரரையும் முறைத்து விட்டு , மீண்டும் சுவாமிஜி இருந்த இடம் வந்தான். வந்திருந்த விருந்தினர்கள் உள்ளே சாமி கும்பிட சென்றுவிட்டிருந்தனர்.

"சுவாமி !  எல்லாம் இறைவன் விருப்பபடிதான்  நடக்குதுன்னு சொன்னீங்களே ! அரிசி இல்லைங்கிறது முன்னாடியே தெரிவிக்க வேண்டிய சமையல்காரர் தன்னுடைய கடமையை சரியா செய்திருந்தால், நான் கடைக்குச் சென்ற  அலைச்சல் தேவை இல்லாதது தானே ! இதுல ஆண்டவன் சங்கல்ப்பம் எங்க இருந்து வந்தது  ? " அப்படின்னுக் கேட்டான் . ( எப்பூடி ! கேள்விய டயமிங்கா கேட்டுப்புட்டோமுல்ல ! )

 சுவாமிஜி ஒருமுறை அங்கிருந்த ஸ்ரீ ராமனின் திருவுருவ படத்தினைப் பார்த்தார். திரும்பி  ராம்ஸ்-ஐ பார்த்துப் புன்னகையித்தார். பின் நிதானமாக பேசினார்.
" தம்பி ! ஒவ்வொரு செயலும் இறைவனால் தீர்மானிக்கப் படுகிறது  என்பதுதான் உண்மை. நீ அரிசி வாங்க சென்றதற்கு சமையல்காரரின் கவனக் குறைவுதான்  காரணம் என எண்ணுகிறாய். ஆயின் அதன் மூலம் இறைவன் என்ன லீலைகளை நிகழ்த்தியுள்ளான் என்பதனை காணலாம் வா ! " என அவனை  அழைத்துக் கொண்டு மடத்தின் வாசல் தாண்டி வெளி கேட்டை நோக்கி  நடந்தார். 

அங்கே, நம்ம ராம்ஸ் அரிசி வாங்கி வரும்போது, ஓட்டை விழுந்த பையில் இருந்து அரிசி மணிகள் வழியெங்கும் சிதறி இருப்பதைக் கண்டார். மெல்ல குனிந்து தரையில் அமர்ந்த சுவாமிஜி , அவனையும் குனிந்து பார்க்கச் சொன்னார்.  

அங்கே, ராம்ஸ் சிந்திக்கொண்டே வந்த அரிசி மணிகளை சிற்றெறும்புகள்  பொறுக்கியபடி சாரை சாரையாய் சென்றுக் கொண்டு இருந்தன.


-----------
 

 ஜெய் ஸ்ரீ ராம் !

ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக