புதன், 2 நவம்பர், 2011

விஷமக்காரக் கண்ணன் # 1

அன்றொரு நாள் .....
அன்னையின் அணைத்த கையை விலக்கி
ஓடி மறைகிறான் கண்ணன் 
 நம் உள்ளம் கவர் கள்வன் 

கண்ணனைத் தேடி  யசோதையின் 
விழி அலைந்தது .
கோகுலம் முழுவதையும் அளைந்தது.

வினவுகிறாள் அவள் 
அந்த வீதி வழி வந்த கோபியரிடம் 
"கண்டீர்களா எங்கேனும் 
என் செல்லக் கண்ணனை " என்று .

மோக்ஷம் அளிக்கும் புண்ணிய நாமம் தான் 
கண்ணனின் நாமம் - ஆயின் 
அன்று கோபியருக்கு அதன் மேல் 
தீரா கோபம் .


" போதுமே நின் பிள்ளையின் சமத்து "
 என்று ஒருத்தி முகம் நொடித்தாள் 
மற்றொருத்தி  புருவம் நெரித்தாள் .

முன்னவள் பகன்றாள் - இல்லை இல்லை 
 கோபத்தில் கனன்றாள் 
" கறந்த பாலை தயிராக்கி கலயத்திலே இட்டு 
என் தலை மேல் வைத்து கொணர்ந்தேன் யான் 
கல்லால்தான் அடித்தானோ இல்லை - தன்
கண்ணால்தான்   அடித்தானோ -தயிர் பானையை 
உன் பிள்ளை 

கட்டி தயிர் எல்லாம் கொட்டி - என் 
கெட்டி சேலை கெட்டுப்போச்சு - அம்மம்மா 
உன் பிள்ளையின் வேஷம் வெளுத்துப் போச்சு "
என  அவள் முடிக்கும் முன்னே 

"இதையும் கேள் "என இடை மறித்த 
மற்றொரு இடைப் பெண் 
 "
புடவைகளைக்  களைந்து 
கரையிலே வைத்திட்டு 
புனலாடச் சென்றோம் - நாங்கள்.
 புல்லாங்குழல் ஊதி 
எங்கள் மனம் மயக்கி 
எங்கள் ஆடைகளைத் 
திருடிச் சென்றான் - உன் பிள்ளை .
அவனைக்  கெஞ்சியும் , மிஞ்சியும் 
 பலன் இன்றி - மீண்டும் 
பெற்றோம் எங்கள் பட்டு - வேறு வழி இன்றி 
எங்கள் வெட்கம் விட்டு .
உன் சமத்து பிள்ளை வந்தால் 
நன்கு திட்டு .
முடிந்தால் நாலு தட்டு தட்டு " 
என கடுகடுத்தாள்.


(தொடரும் ....)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக