வியாழன், 10 மே, 2012

எங்கே இருக்கிறாய் ?

எங்கே இருக்கிறாய் என்னவனே ?
நாளும் வேதனையிலே தவிக்கும்
என் நிலை அறியாயோ?

காலை முதல் மீண்டும் காலை வரை
காத்திருக்கிறேன் உனக்காக .

என்ன வேலை செய்தாலும்
கதுபினில் ஒதுக்கிய கருப்பட்டியாக
உன் நினைவு உள்ளுக்குள்
இருந்துக் கொண்டு தான் இருக்கிறது .


"எப்போதும் உன்னோடுதான் இருக்கிறேன் " என்றாயே ?
அது பொய்யா ?
என் வேண்டுதலை ஒத்தி வைக்க நீ செய்த தந்திரமா ?

புழுங்கும் அறையினில்
சாவி துவாரம் வழி வரும் காற்றாய்
உன் ஸ்பரிசத்தை எப்போதாவது
நான் உணராமல் இல்லை .

ஆனால் ...
அக்கினி நட்சத்திர பகல் நேர நெடும் பயணத்தில்
குவளை தண்ணீர் குடிக்க போதுமோ ?

நான் கடந்து வந்த பாதையின் கறைகள்
என் பாதங்களில் ஒட்டி இருப்பதை
நீ அறிந்து இருந்தும்  தானே
என்னை "வா" என அழைத்தாய் !

உன் அன்பின் நதியினில்
கால் கழுவி
முகம் துடைத்து
அங்கம் முழுதும்  நனைய
அன்பனே ! அன்பனே ! என
உன்னுள் மூழ்கி குளித்து
உன்னுள் கரைந்திட  துடிக்கிறேன் .

இறைவனே ! இறைவனே !
வா ! விரைவில் வா !
என் ஒவ்வொரு அணுவிலும்
உன்னை நிரப்பி
முற்றிலும் நீயாகிவிடு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக