வெள்ளி, 1 ஜூன், 2012

உங்களோடு சில வார்த்தைகள் ....


"பக்தி யுகத்தி"ற்கு வருகை தரும் அனைவரையும் அன்போடு வணங்குகிறேன் .

இன்றைய அறிவியலின் புரட்சியால் நாளும் புதிய கண்டுபிடிப்புகளும் , காலத்தைக் கடக்கும் வேகமும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்தின் அதி வேகத்தாலும், வளர்ச்சியாலும் தகவல் பரிமாற்றம் அபரிமிதமாகி உள்ளது.

இன்டர்நெட்டில் , நாம் பெற முடியாத தகவல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். கடுகு முதல் கடவுள் வரை நாம் எதை குறித்துத் தேடினாலும் , நமக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

குறிப்பாக ஆன்மிக தகவல் தளங்களும், ப்ளாக் - களும் நாளும் பெருகி வருகின்றன. இவை எல்லாமே உண்மையில் ஆன்மிகத்தினை வளர்ப்பதற்க்காகத்தான் செயல் படுகின்றனவா என்பது கேள்வி குறியே !

சில தளங்கள் சிறப்பாகவும் , நேர்மையான தகவல்களுடனும் ஆன்மிகக் கருத்துக்களை வெளியிடுகின்றன. ஆனால் , தங்களது தளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருகைத் தர வேண்டும் எனும் குறிக்கோளை மட்டுமேக் கொண்டு , சில தளங்கள் ஆன்மிகக் கவர்ச்சியினை மேற்கொண்டு வருகின்றன. அவை எவை என்பது நமக்கு இங்கே தேவை இல்லை.

புதிய புதிய மந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் வெளியிடுவதும் , இன்று இணையத்திலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படும் "சித்தர்கள்" எனும் சொல்லை மையப்படுத்தியும் , மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு  தீர்வு கூறுவது போல பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றன.

ஆனால் அவர்கள் வெளியிடும் , அனைத்து "மந்திர-தந்திர" முறைகளுக்கு , எது ஆதாரமாக விளங்குகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். அந்நாட்களில் மந்திரங்கள் மறைபொருளாக வைக்கப் பட்டதன் நோக்கம் , அது சரியான முறையிலே , சரியான நபரிடம் சென்று அடைய வேண்டும் என்பதற்காகவே.

ஒரு குரு , தன்னிடம் உள்ள எல்லா சீடர்களுக்கும் , ஒரே மாதிரியான மந்திரத்தை அளிப்பது இல்லை. மாறாக ஒவ்வொருவரின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏற்ற , மந்திரங்களையே உபதேசிப்பார். அதையும் கூட ரகசியமாக அந்த குருவும் சீடரும் மட்டுமே அறியும்படி செய்வார்.

மந்திர பிரயோகங்களில் , ஒரு அக்ஷரம் மாறினாலும்,அல்லது ஒலி அமைப்பு மாறினாலும் , அல்லது அதனை ஜபிக்கும் முறைகளில் சிறு பிசகு ஏற்ப்பட்டாலும் கூட அதன் விளைவுகள் விபரீதமாக மாறிவிடக்  கூடவாய்ப்பு உள்ளது.

இன்று பல்வேறு , தளங்கள் இதைக் கருத்தில் கொண்டு செயல் படுகின்றனவா என்பது தெரியவில்லை.  சில மந்திரங்கள் எளிமையாக , அனைவரும் இயல்பாக ஜெபிக்கும்படி அமைத்துள்ளன.

 உதாரணமாக " ஓம் சிவ சிவ ஓம் " என்பதனைச் சொல்லலாம்.  அதையுமே ஜபிக்கும் போது எந்த நியமங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்பதனை அவர்கள் தெளிவாகக் "ஆன்மிகக் கடல் " தளத்தில் கூறியுள்ளார்கள்.

நம்முடைய நோக்கம் , யாரையும் தாக்குவது இல்லை. பார்வையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதே. 

இன்று ஆன்மிகம் என்பது கடைச் சரக்காகி விட்டது.  புற்றீசல் ஜோதிடர்களும் , கார்பரேட் சாமியார்களும் எதோ புதியதாக தாங்கள்தான் ஆன்மிக ரகசியங்களை வெளியிடுவதாகவும் , உலக மொத்த துன்பங்களை எல்லாம் தங்களால் தீர்த்து விட முடியும் என்பதாகவும் , தங்களை பிரபல்யப் படுத்திக் கொள்கின்றனர். ஆனால் நாம் "நிறை குடம் தளும்பாது " என்பதனை என்றும் மறந்து விடக் கூடாது.

குருவே சரணம் !

நன்றி!

பணிவுடன்
"பக்தியுகம்" கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக