வியாழன், 19 ஜனவரி, 2012

ஆலயங்கள் ஆயிரம் # 4

 ஈசனுக்கே சாபம் தந்த கரூர் சித்தர் !


தெய்வங்கள் மனிதர்களுக்கும் , தேவர்களுக்கும் சாபம் தந்து பின் விமோசனம் அளித்த கதைகள் அநேகம் உண்டு. ஆயின் தெய்வத்திற்கே  சாபம் அளித்த கதைகள் மிகக் குறைவு. தேவாதி தேவன் அந்த பரமனுக்கே சாபம் அள்ளிக்கபட்டு , பின் சாப நிவர்த்தி ஆனா தலம் திருநெல்வேலி நகரிலே அமைந்து உள்ளது.

ஆம் ! அப்படி சாபம் கொடுத்தவர் சாதாரணமானவர் அல்லர். சித்தம் வென்ற சித்த பரம்பரையிலே வந்த கரூர் சித்தர்தாம் அவர். அந்த அதிசயமான நிகழ்வினைக் காண்போம்.

ஒருமுறை கரூர் சித்தர் நெல்லையப்பரை தரிசிக்க , திருநெல்வேலி வந்துள்ளார். அவர் வந்த சமயத்தில் இறைவனுக்கு பூஜைகள் நடந்துக் கொண்டு இருந்ததனால் , " நெல்லையப்பா ! " என பலமுறை  கரூர் சித்தர் அழைத்தும் , இறைவனால் பதில் அளிக்க இயலவில்லை. 

இதனால் கோபம் கொண்ட கரூர் சித்தர் , " ஈசன் இங்கு இல்லை போலும் , அதனால் தான் நான் அழைத்தும் பதில் அளிக்க வில்லை, அதனால் ஈசன் இல்லாத  இவிடத்தில் குறுக்கும்  , எருக்கும் எழுக  " என சாபம் அளித்துவிட்டு வடக்கு நோக்கி சென்றுவிட்டார்.

இதைக் கண்ட இறைவன், பூஜை முடிந்ததும்  தானே கரூர் சித்தரைத் தேடிச் சென்றான். அதேநேரத்தில்   வடக்கு நோக்கிச் சென்ற கரூர் சித்தர் மானூர் எனும் இடத்திலே , இறைவனை நடராஜ ரூபத்திலே    எண்ணி  வழிபட்டுவரும் அம்பலவாண முனிவர் என்பவரைக் காணும் பொருட்டு அங்குச் சென்றார்.


அங்கே சென்ற இறைவன் , கரூர் சித்தருக்குக் காட்சி அளித்து , அவர் சினம் தணித்து ,அங்கே நடராஜராக அம்பலவாண முனிவருக்கும் காட்சி அளித்து  தடுத்தாட்கொண்டார்.  தமது நடராஜர்  கோலத்திற்கு "அம்பலவாணர்"  என்று  அந்த முனிவரின் பெயரை  சூட்டிக்கொண்டார்.

பின்னர் தன்னோடு கரூர் சித்தரையும் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று , சாபத்தினை நிவர்த்தி செய்கிறார். சித்தரும் " இறைவன் இங்கு உள்ளான் எருக்கும் குறுக்கும் அறுக " என சாப  நிவர்த்தி அளிக்கிறார்.

இந்த நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மதம் மூல நட்சத்திரத்தன்று விழாவாகக் கொண்டாடுகின்றனர். பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இத்திருவிழா , திருநெல்வலி நெல்லையப்பர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பின்னர் ஆவணி மூலத்தன்று இறைவன் நெல்லையப்பர் ரூபத்திலே குதிரை வாகனத்திலே யானை முன்னே செல்ல  , வாத்தியங்கள்  அதன் பின்னே செல்ல திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு  மனூரை நோக்கிச் செல்கிறார். அவரோடு  பவானி அம்மன் . அகஸ்தியர், பாண்டிய ராஜா, குங்கிலிய நாயனார் , தாமிரபரணி அம்மன் ஆகியோரும் பல்லக்குகளில் உடன் செல்கின்றனர்.

வழியிலே ராமையன்பட்டி என்னும் இடத்திலே அமைந்துள்ள பெரிய இரு கல்மண்டபங்களை அடைந்து அங்கே நடைப் பெரும் பூசையினை ஏற்றுக் கொள்கிறார். இந்த மண்டபங்களுக்கு  "அம்பலம்" என்றுப் பெயர்.  அங்கே இறைவன் "நெல்லையப்பர்" எனும் ரூபத்தில் இருந்து "சந்திரசேகரர்" எனும் ரூபமாக மாறுவதாக ஐதீகம் . கால ஓட்டத்திலே  இந்த மண்டபங்கள் தற்போது முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன.  இந்த மண்டபமும் , அதனைச் சார்ந்த இடங்களும் சிலரது ஆக்கிரமப்பிலே தற்போது உள்ளதாகக் கூறுகிறார்கள்.

பின்னர் அங்கிருந்துப்  புறப்பட்டு மானூரைச் சென்றடையும் இறைவன் , கரூர் சித்தருக்கும் , அம்பலவாண முனிவருக்கும் காட்சி அளிக்கிறார். அதன் பின் மீண்டும் ராமையன்பட்டி வந்து நெல்லையப்பராக உருமாறி திருநெல்வேலி நகர் சென்று அடைகிறார். அவரோடு கரூர் சித்தரும் திருநெல்வேலி வந்து தனது சாபத்தினை நிவர்த்தி செய்கிறார்.

இந்த விழாவின் போது சுமார் பத்தாயிரம் பேருக்கும் மேலாக மக்கள் இந்த ஆலயத்திலே கூடுகின்றனர். மிகப் பெரிய விழாவாக கோலாகலமாக இத்திருவிழ நடைப் பெறுகிறது. அருகில் அமைத்துள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் மக்கள் இவ்விழாவிலே திரளாக கூடுகின்றனர்.

இத்தகு பெருமைமிகு ஆலயம் திருநெல்வேலி மாவட்டம் , மானூரில்  அமைந்துள்ளது.திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் சுமார் 18 k .m  தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இறைவன் பெயர்                 :  அருள்மிகு நெல்லையப்பர்  மற்றும் அம்பலவாணர்.
இறைவியின் பெயர்           :  அருள்தரும் காந்திமதி 
தொடர்புடைய சித்தர்கள் :  கரூர் சித்தர் மற்றும் அம்பலவாண    மாமுனிகள்.

ஆலய அமைப்பு :
மானூர் பிரதான சாலையில் இருந்து , மிக அருகிலேயே ஆலயம் அமைத்து உள்ளது. பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் நடுத்தரமான அளவிலே ஆலயம் அமைந்துள்ளது.

மதில் தாண்டி உள்ளே சென்றால் தெற்கு வாசல் நம்மை வரவேற்கிறது. இங்கு நெல்லையப்பரை விட , அம்பலவாணரான நடராஜருக்கே முக்யத்துவம் என்பதால் , தெற்கு வாசலே பிரதானமான வாசலாகக் கருதப்படுகிறது.



நீண்ட அகன்ற படிகளில் ஏறி மேலேச் சென்றால் மதில் சுற்று வருகிறது . அதனைக் கடந்து உள்ளேச் சென்றால் நேராக தெற்கு நோக்கி நடராஜர் அம்பலவாணராகக்  காட்சி அளிக்கிறார்.அருகிலேயே அம்பலவாண முனிவர் லிங்க உருவிலே காட்சி அளிக்கிறார்.
























அம்பலவாணர் சன்னதி                                    அம்பலவாண முனிவர் லிங்கம்





                                                
                                        அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் சன்னதி


                                   
                                                    அருள்தரும்  காந்திமதி அம்மன்

கிழக்கு நோக்கியவாறு வலப்புறம் காந்திமதி அம்மன் சன்னதியோடு இறைவன் நெல்லையப்பராகக் காட்சியளிக்கிறார். அம்மையும் அப்பனும் காண கொள்ளை அழகு.உள்சுற்றிலே கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் , தக்ஷிணாமூர்த்தி   ஆகியோர்களது சன்னதிகள் அமைந்து உள்ளன. 

                                                                   கரூர் சித்தர் 

உள்சுற்றினில் வாயு மூலையிலே கரூர் சித்தருக்கு சிலை உள்ளது. கம்பீர்யமான அழகோடு கையினிலே தண்டோடு , இடையிலே சிறு ஆடையோடு கைகள் வணங்கிய நிலையிலே கரூர் சித்தர் காட்சி அளிக்கிறார். ஈசனுக்கே சாப விமோசனம் அருளிய , அந்த சித்தர்பிரானை மனதாரத் தொழுது நமது வினைகள் நீங்கவும் வேண்டிகொள்கிறோம்.

அவரைக் கடந்தவுடன் , சனீஸ்வர பகவான் காக வாகனத்துடன் , கைகளிலும் காகத்தோடு அபூர்வமான நிலையிலேக் காட்சித் தருகிறார். அடுத்து சண்டிகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.  அடுத்து நடராஜரைக் கடந்து  வந்தால் பைரவர் சன்னதி அமைந்து உள்ளது.





நடராஜரின் சன்னதியின் வெளியில் அமைந்துள்ள தூண்களில் மரத்தினாலான  அழகிய சிற்பங்கள் மர சட்டங்களில் பொருத்தப் பட்டு அமைக்கப்பட்டுள்ளன.அவற்றில் பல்வேறு புராண கதைகளின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.





ஆலய பூஜை அபிஷேகங்களுக்கு பயன்படும் பழங்கால செப்பு பானைகள் காண்பதற்கு வியப்பை அளிக்கின்றன.






 







 ஆலயத்தில் வெளி பிரகாரம்  சீராக அமைக்கப்பட்டு உள்ளது.நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் கூடியதாக அமைந்து உள்ளது.







                                                              ( வெளி பிரகாரம் )











கிழக்கு வாசல் மூடப்பட்டு உள்ளது. அதன் வெளியே கொடிமரமும் , அதற்கும் வெளியே ஆலய தெப்பக் குளமும் அமைந்துள்ளன.








                                                                                                                         ( கொடி மரம்  )











ஆலய தெப்ப குளம்







கொடிமரத்தினை அடுத்து வெளி வாசலை  நோக்கிய மண்டபத்தின் தூண்களில் இந்த ஆலயத்திற்கு தொண்டாற்றிய மன்னர்களின் சிலைகள் காணப்படுகின்றன. ஆலயத்தில் பல்வேறு கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.






















 இத்தனை சிறப்புகள் இருந்தும் , இந்த ஆலயம் நித்திய பூஜைகள் இன்றி இருப்பதுதான் மிகப் பெரிய குறை. மாத பிரதோஷ காலங்களில் மட்டும் பூஜைகள் நடைபெறுகின்றன. பல அன்பர்களின் முயற்சியால் தற்போது தினமும் விளக்கு மட்டும் ஏற்றப்பட்டு வருகின்றது என்பது ஆறுதல் .

அந்த கரூர் சித்தர்பிரான்தான் இந்த ஆலயத்திற்கு மீண்டும் எழுச்சியைத் தர வேண்டும் !


ஆலயத்திற்கு வர விரும்புவோர் ஆலய காவலாளியைத் தொடர்புக் கொண்டு பின் வரவும் . அவரது தொடர்பு எண் : 9791149236




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக