வியாழன், 5 ஜனவரி, 2012

கழுகு மலை கிரிவல அனுபவம்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

கடந்த மாதம் அம்மாவாசை அன்று கழுகு மலையில் நடைபெற்ற கிரிவலம் நிகழ்ச்சியிலே குடும்பத்தோடு கலந்து கொள்ளும் வாய்ப்பினை இறைவன் அருளினான். அய்யா திரு.சிவ.மாரியப்பன் அவர்களிடம் தொலைபேசியில்  தொடர்புக் கொண்டு கிரிவலம் நிகழ்வினை உறுதி செய்த பின்பு , நான் , எனது மனைவி , தாயார் மற்றும்  மகன் ஆகியோர் கழுகுமலைக்கு புறப்பட்டோம்.

அய்யா.திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் முன்பே எங்களுக்கு பழக்கமானதால் , அவரைக் குறித்தும் , கிரிவலம் குறித்தும் நானும் எனது மனைவியும் பேருந்தில் பயணம் செய்யும் போது பேசிக் கொண்டே வந்தோம்.

அப்போது என் மனைவி " அய்யா.திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் சித்தர்கள் குறித்து நிறைய கூறுகிறார்கள், அவர்களை எல்லாம் நேரிலேயே தரிசனம் (சூட்சுமமாக )அடைந்து வருவதாகக் கூறுகிறார்கள். ஆனால் நமக்கு ஒன்றும் தெரிவது இல்லை, நமக்கு புரியும் படியாக நமது கண்களுக்கு தெரியும்படியாக தரிசனம் கிடைப்பது இல்லை." என  ஆதங்கத்துடனும் சற்றே வேடிக்கையாகவும்கூறினார்.

பின்னர் நாங்கள் கழுகுமலையை அடைந்து , அய்யாவை சந்தித்த பின்னர் கிரிவலதினைத் தொடர்ந்தோம்.அம்மாவாசை இருளிலே இயற்க்கையாக அமைந்து கருமையின் பின்னணியோடு இறை சிந்தனையோடு நடைபெற்ற கிரிவலம் அருமையானது.

இருளின் மோனத்தில் , மனதிலே "ஓம் சிவ சிவ ஓம் " மந்திரத்தோடு மலையை கிரிவலம் வரும்போது நம்முள் உணரும் அதிர்வுகளை வார்த்தைகளில் கூறிவிட இயலாது.அந்த நாளின் முக்கியத்தினை அறிந்து சேலம் ,வேலூர் ,நெல்லை ,விருதுநகர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் அன்பர்கள் இந்த கிரிவலத்தில் கலந்துக்கொண்டனர்.

கிரிவலம் 90 % நிறைவுற்ற நிலையிலே , என் மனைவி " வெளியூரிலே இருந்து இத்தனை பேர் வந்து உள்ளனர், இரவு 8 .30  மணி வேறு ஆகிவிட்டதே , உணவுக்கு என ஏற்படும் யாரும் செய்ய வில்லையே , பாவம் எல்லோரும் பசியோடு அல்லவா கிளம்ப நேரிடும் " என எண்ணி உள்ளார்.


கிரிவலம் முடிந்து , திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் சிறிய உரை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் போதே , சிலர் கோவில் பிரகாரத்தில்  இலை போட்டு கேசரி,பொங்கல் , சட்னி , சாம்பார் என அருமையான உணவினை அனைவருக்கும் நிறைவாக வழங்கினார்கள் .


சாப்பிட்டு விட்டு கிளம்பும் அனைவருக்கும் , கேலண்டர் ஒன்றினையும் வழங்கினர். நாங்கள் சாப்பிட்டு விட்டு , உணவு வழங்கியவரிடம் எங்களது நன்றியினைத் தெரிவித்து விட்டு , " அடுத்த முறை நீங்கள் இங்கே அன்னதானம் வழங்கும் போது , எங்களது இந்த காணிக்கையையும் அதிலே சேர்த்துக் கொள்ளுங்கள் " எனக் கூறி ரூ.100  ( என்னால் இயன்றது ) வழங்கினேன், அவர்கள் அந்த ஊரிலேயே இருப்பவர்கள் என்றும் , வழக்கமாக  அன்னதானம் செய்பவர்கள் என்றும் நான் மனதிலே எண்ணி இருந்தேன்.


ஆனால் அவர்கள் அதை வாங்க மறுத்ததுடன் , தங்களுக்கு கோவை என்றும் , இன்று கிரிவலம் நடைபெறுவது முன்பே தெரியாமலேயே அங்கு வந்ததாகவும் , வந்த இடத்தில அன்னதானம் செய்ததாகவும் கூறிய பொழுது ,
பசித்த நமக்கு  படி அளந்த அந்த பரம குரு முருகப்பெருமானையும் , அகத்திய மகரிஷியையும் நன்றியோடு மனதிலே வணங்கினேன்.


"அப்படி என்றால் இத்தனை கேலண்டர்கள் எப்படி கொடுத்தீர்கள்  "என கேட்டேன்.


"நாங்கள் வருடந்தோறும் இந்த கேலண்டர் வழங்கும் பணியினை ஜனவரி ஒன்றாம் தேதி அன்று திருசெந்தூரிலே செய்து வருகிறோம். அதற்காக வைத்து இருந்த கேலண்டர்களைத் தான் இங்கே வழங்கினோம் " என்றனர்.


நாங்கள் மகிழ்வோடு அந்த கேலண்டர்களைப் பிரித்துப் பார்த்தல் , 18 சித்தப் பெருமக்களும் சூழ அகத்தியப் பெருமான் அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒன்றும் , சித்தர்கள் சூழ முருகப் பெருமான் தவத்தில் ஆழ்ந்திருக்கும் கோலத்தில் ஒன்றுமாக இரண்டு கேலண்டர்களும் அமைந்து இருந்தன.


எனக்கும் என் மனைவிக்கும் " நமக்கெல்லாம் புரியும்படியாக , கண்களிலே சித்தர்கள் காட்சி தருவார்களா ? " என என் மனைவி பேருந்தில் கேட்ட கேள்வி ஒரே நேரத்திலே மனதிலே எதிரொலித்தது


நன்றி இறைவா!

குருவே சரணம்
வாழ்க வளமுடன்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக