வியாழன், 9 பிப்ரவரி, 2012

கருணை காற்று வீசாதோ !
                                                  ஸ்ரீ அரவிந்த அன்னை


"அம்மா !  அம்மா ! " என்று - நாளும் 
உன்னையே வேண்டினேன்.
"தஞ்சம் நீ " என்றே - உன் 
மலரடியை   நாடினேன் .

உயர்ந்த நிலை பலவும் - "இதோ"
எனக் கூறுகிறாய்
அதை பெற்றிட நினைத்தால் - நீயோ
பாரா முகம் காட்டுகிறாய்

பச்சை கிளி போலே - உயரே
பறந்திட நினைக்கின்றேன்
அன்னை நின் புகழை - நாளும்
பாடிட நினைக்கின்றேன்இது மனதின்  உயர் நிலையில் ....


பின்னோ...

தெரு குப்பையைக் கிண்டிடும் -சிறு
கோழியாய் திரிகிறேன்
அதில் கொட்டிக் கிடப்பவையே - எனக்கு
போதும் என எண்ணுகிறேன்

வேதாந்த்த சித்தாந்த தத்துவமெல்லாம் -என்
 வாய் கிழிய பேசுகிறேன்
"உத்தமன் இவன் பார் ! " - என
 ஊருக்கெல்லாம் காட்டுகிறேன்

வைர மூக்குத்தி  மின்னிடும் - மூக்கினுள் 
சேர்ந்த அழுக்குப் போல 
பகல் வேஷமோ என் செயல் ? 
தாயே சொல்லிடுவாய் 

"வெளுப்பும் - அழுக்கும் "
 வென்றிட அருளாயோ!
"நல்லது - கெட்டது" 
விட்டு  விலக்காயோ  !
நின் அருள் காற்றிலே ஆடும்   
சிறு துரும்பென ஆக்காயோ  !

புலம்பலை அகற்றிவிடு !
 புது வாழ்வு தந்துவிடு !

விசுவாச நாயைப் போலே 
 நின் மலரடியிலே இருத்திவிடு !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக