செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பொன் மாலை பொழுது
 இன்று பிப் 29 . நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் தினம் என்று தான் உலகியல் நோக்கிலே நாம் கருதுகிறோம். ஆயின் இந்த தினத்திலேதான் பிரபஞ்சத்தில்  ஆன்மிக அத்தியாயத்தில் முக்கியமான ஒரு பக்கம் எழுதப்பட்டது. 

ஸ்ரீ அரவிந்தர் கல்கொத்தாவில்  , சுதந்திரப்  போராட்டக் காலத்தில் , பொய்யான  ஒரு வழக்கிலே கைது செய்யப்பட்டு , அலிபூர் சிறையிலே அடைக்கப் பட்டார். அந்த சிறை  வாசம் , அவருக்கு ஆன்மிக கர்ப்ப வாசமாக அமைந்தது. 

அங்கே தினம் தினம் புதிய ஆன்மிக அனுபவங்கள் அவருள்  மலரத் துவங்கின. ஸ்ரீ கிருஷ்ணரின் நிதரிசனமான தரிசனம் அங்கே அவருக்கு ஏற்ப்பட்டது. ஸ்ரீ அரவிந்தரின் யோக சாதனை தீவிரமடையத் தொடங்கியது. அச்சமயம் சுவாமி விவேகானந்தர்   , ஸ்ரீ அரவிந்தருக்கு சூட்சுமமாய் வழி காட்டினார். ஆன்மிக இலக்கில் ஸ்ரீ அரவிந்தர் அடையவேண்டிய இலக்கினை சுட்டிக் காட்டினார். 

உலக வரலாற்றிலே , உலக நன்மையின் பொருட்டு தனது சுய மோட்சத்தை துறந்தவர்களில் சுவாமி விவேகானந்தர் முக்கியமானவர். தனது  சாதனையின் ஆரம்ப காலங்களில் சுவாமி விவேகானந்தர், தனுக்கு உயர்ந்த சமாதி நிலையினை  அருளுமாறு , தனது  குருவான ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அடிக்கடி கேட்பது உண்டு. 

ஆயின் ஸ்ரீ இராமகிருஷ்ணரோ " உனது அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் , உனது உயர் அனுபவம் பெறுவதற்கான கதவு பூட்டப் பட்டு, அதன் சாவி என்னிடமே இருக்கும் " என ஒவ்வொரு முறையும் மறுத்தே வந்துள்ளார். 

பிற்காலத்தில்  சுவாமி விவேகானந்தரே   "இவ்வுலகின் ஒவ்வொரு ஜீவனும் மோக்ஷம் அடையும் வரை தனக்கும் மோக்ஷம் தேவை இல்லை" என தன்னுடைய  சுய மோக்ஷத்தையே மறுத்துவிட்டு, அனைவருக்குமான மோக்ஷத்திற்கு வழி என்ன  என அறிய தனது சாதனையைத் தொடர்ந்தார்.  

தனது சரீரத்தை துறந்த பின்னரும், தனது சாதனயை தொடர்ந்த சுவாமி விவேகானந்தர், அனைத்து ஜீவர்களும் உய்வு பெரும் , உயர்ந்த சாதனை மார்கத்தை  மேற்கொள்ளும்படியாக ஸ்ரீ அரவிந்தரை சூட்சுமமாக வழிநடத்தினார். ஸ்ரீ அரவிந்தருக்கு, இந்த வையகமே வாசுதேவ ஸ்வரூபமாக இருக்கும் அனுபவம் கிட்டியது. ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பப்படி ஸ்ரீ அரவிந்தர் மீது சுமத்தப்பட்ட வழக்கு , பொய் வழக்கு என தீர்ப்பானது. ஸ்ரீ அரவிந்தர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உத்தரவின்படி பாண்டிச்சேரி வந்த ஸ்ரீ அரவிந்தர் தனது சாதனையை மேலும் தொடர்ந்தார். ஸ்ரீ அன்னை, பாண்டிக்கு  வந்து ஸ்ரீ அரவிந்தரை சந்தித்த பின்பு, இருவரது யோக சாதனையும் மானுடம் முழுவதற்குமாய் மலரத் துவங்கியது. 

தனது சாதனையின் முக்கிய இலக்கான அதி மானச சக்தியை புவிக்கு கொண்டுவந்து நிலை நிறுத்திட விரும்பினார் ஸ்ரீ அரவிந்தர். தம்மால் அதிமான உலகில் இருந்து உயர் சக்தியினை உலகிற்கு அனுப்பிட இயலும் என உணர்ந்த ஸ்ரீ அரவிந்தர் , அதற்காக தனது சரீரத்தை தியாகம் செய்யவும் துணிந்தார். 

ஸ்ரீ அன்னை ஒருவரால் மட்டுமே அந்த சக்தியினை உலகிலே நிலை பெற செய்ய இயலும் என உணர்ந்த ஸ்ரீ அரவிந்தர் , ஸ்ரீ அன்னையிடம் அந்த பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு, 1950 டிசெம்பர்  5 ஆம் தேதி  அன்று தனது சரீரத்தினைத் துறந்தார்.

 டிசெம்பர்  9 ஆம் தேதி வரையிலும் ஸ்ரீ  அரவிந்தரின் உடல் பொன் ஒளியால் சூழப்பட்டு விளங்கியது. டிசம்பர்  9  அன்று ஸ்ரீ அரவிந்தரின் உடலை சமாதியில் வைத்தனர். அதன்பின்  ஆசிரமத்தில் அதிமன இறக்கம் எப்போது நிகழும் என சாதகர்களால் எதிர்பார்க்கப் பட்டு வந்தது.

(  ஆசிரமத்தின் விளையாட்டு திடல் )

1956 பிப் மாதம் 29  தேதி அன்று மாலை ஆசிரமத்தின் விளையாட்டு  மைதானத்தில் ஸ்ரீ அன்னை சாதகர்களுடன்  தியானத்தில் ஈடுபட்டு இருந்தார். அந்த இனிய மாலை பொழுதினிலே , அமைதியான தியான சூழலிலே , ஸ்ரீ அன்னை ஒரு காட்சியினைக் கண்டார். 

அக்காட்சியிலே,  தம் முன்னால் மிகப் பெரிய பொன்னாலான கதவும் , பொன்னாலான சுத்தியலும்  இருப்பதைக் கண்டார். அந்த கதவு அதிமன  இறக்கதிற்கான கதவு என்பதனை உள்ளுணர்வால் உணர்ந்த ஸ்ரீ அன்னை , அந்த சுத்தியலைக் கொண்டு அந்த  பொற்கதவினை சுக்கல் சுக்கலாக உடைத்தார். 

அடுத்தக் கணத்திலே அதிமன சக்தியான பொன் ஒளி வெள்ளமென இப்புவி மீது பாயக் கண்டார். உலக ஆன்மிக வராற்றிலே முக்கியமான மைல் கல்லாக இந்த நிகழ்வு அமைந்தது. இந்த நிகழ்விற்குப் பிறகு , உலகெங்கும் உள்ள எல்லாவித சாதகர்களின் சாதனையிலும் விரைவான முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.

அன்னை அந்த நாளினை இறைவனுக்கான நாளாக அறிவித்து , பிப் 29  என்பதனை "கோல்டன் டே " என பெயரிட்டார்கள். 

அன்று முதல் ஒவ்வொரு  பிப் 29 ம் , ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் முக்கியமான தரிசன நாளாக கருதப் படுகிறது. 

ஸ்ரீ அரவிந்த அன்னையே சரணம் !   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக