புதன், 29 பிப்ரவரி, 2012

சின்னஞ் சிறு கிளியே


 ( ஸ்ரீ அரவிந்த அன்னை குழந்தை வடிவினில் )
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! 

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே! 

ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! 

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ! 

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.
 
இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?
 
மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
செல்வம் பிறிது முண்டோ? 
- பாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக