செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

ஸ்ரீ அன்னையின் வாழ்க்கை சுருக்கம்

ஸ்ரீ அன்னை என உலக மக்களால் அழைக்கப்படும் இந்த தெய்வ தாய் ,பிறந்தது பிரான்ஸ் நாட்டில். உயர்ந்த குடி ஒன்றில். 21 பிப் 1878 அன்று பிறந்த அந்த குழந்தைக்கு "மிரா" என பெயர் சூட்டப்பட்டு மிகவும் சிறப்போடு வளர்க்கப் பட்டார்.

தனது குழந்தை பருவத்திலேயே உயர் ஆன்மிக உணர்வோடுதான் அந்த குழந்தை திகழ்ந்தது. உலக மாந்தர் துயர் துடைக்கும் பணிக்காகவே தான்  இப்புவியிலே  அவதரித்துள்ளதாக அக்குழந்தை  தெளிவாக உணர்ந்திருந்தது. மேலான ஆன்மிக அனுபவங்கள் எல்லாம் அவருக்கு எளிதாகவும் இயல்பாகவும் நிகழ்ந்தன.

மிரா இளம் வயது முதலே ஒழுக்கமும் ,கட்டுப்படும் உள்ள சூழலிலே வளர்ந்தார். கல்வியும் கலையும் தெளிவாக கற்றுணர்ந்தார். நல்ல உடல் வலிவுடன் திகழ்ந்த அவர் , எப்போதும் தனது தோழர்களால் மதிக்கப்பட்டார்.

 வயதின் வளர்ச்சியோடு அவருக்கு ஆன்மிக உணர்வும் வளர்ந்தது. நடைமுறை சமய ஆசாரங்களைக் கடந்த உயர் ஆன்மிக பேருண்மை ஒன்றினையே  அடைய அவர் விழைந்தார். அதற்க்கான வழிகாட்டியாக ஒருவரை தனது உள்ளுணர்விலே உணர்ந்தார்.

ஆயின் அவர் யார் எனத் தெரியாததால் அவருக்காக காத்திருக்கத் துவங்கினார். அவருக்கு "கிருஷ்ணா" என பெயரிட்டார். தொடர்ந்து அந்த "கிருஷ்ணா" வின் வழிநடத்துதல் அவருக்குக் கிடைத்தபடியே இருந்தது.

அல்ஜீரியாவில் திரு.தியோன் என்பவர் மறையியல் துறையில் ஆழ்ந்த அனுபவம் உடையவராய் திகழ்ந்தார். அவரிடம் சென்று அபூர்வமான பயிற்சிகளை  கற்றுகொண்டார் மிரா. ஆயினும் தான் தேடும் "கிருஷ்ணா" இவர் அல்லர் என்பதனை உணர்ந்துக் கொண்டார். அவரது தேடல் தொடர்ந்தது.

1914  ஆம் ஆண்டு , புதுவையில் ஸ்ரீ அரவிந்தரைக் கண்ட மிரா , அந்த முதல் சந்திப்பிலேயே "இவரே தான் தேடிக்கொண்டிருக்கும் "கிருஷ்ணா " என்பதனயும் இவரோடுதான் தனது பணி பிணைக்கப்பட்டு இருக்கிறது என்பதனையும் உணர்ந்தார்.

இந்த காலங்களில் மிரா எழுதிய ஆன்மிக நாட்குறிப்புகள் , அவரது உள்ளார்ந்த நிலையினை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்து இருந்தன. இதன் தொகுப்புகள் இன்று ஆசிரமத்தில் "ஸ்ரீ அன்னையின் தியானமும் பிரார்த்தனையும் " என்ற புத்தகமாக் கிடைக்கிறது. இன்றும்  சாதகர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது.

சில காலங்கள் ஸ்ரீ அரவிந்தரோடு இருந்து ஆன்மிக முன்னேற்றம் கண்ட அவர் , அங்கிருந்து ஜப்பான் சென்றார். சுறுசுறுப்பும் , அழகுணர்வும் நிறைந்த ஜப்பானியர்கள் அவரைக் கவர்ந்தது இயல்பே. மலர்களைப் பற்றிய பல்வேறு நுணுக்கங்களையும் , அதன் ஆன்மிக ரகசியங்களையும் இந்த வேளையிலே அவர் அறிந்துக் கொண்டார்.

அதன்பின் 1920 ஏப்ரல் 24 அன்று நிலையாக பாண்டியில் வந்து தங்கினார். அவரது வரவால் ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக முன்னேற்றம் விரைவானது. மிராவிற்கு  ஸ்ரீ அரவிந்தர் அளிக்கும் முக்கியத்துவம் ஸ்ரீ அரவிந்தரின் பிற சீடர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியது. மிராவையும் தங்களைப் போன்ற ஒரு சாதாரண சீடராகவே மற்றவர்கள் முதலில் கருதினார்கள்.

இந்நிலையில் தான் ஸ்ரீ அரவிந்தர் "மிரா" வை "ஸ்ரீ அன்னை " ( "தி மதர் ") என விழித்து , தனது சத்சங்க கூட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்து  , மற்றவர்களையும் மிராவை   "ஸ்ரீ அன்னை " என்றே அழைக்கச் சொன்னார்.

ஸ்ரீ அன்னை என்பார் யார் ? என்ற சந்தேகத்திற்கு  விடையாய் "ஸ்ரீ அன்னை பிரபஞ்ச அன்னையின் வெளிபாடு " என்பதனை விளக்கும் விதமாய் "தி மதர் " எனும் புத்தகத்தினை ஆங்கிலத்தில்  எழுதினார்  ஸ்ரீ அரவிந்தர் . இன்றளவும் ஸ்ரீ அன்னையினை வழிபடுவோருக்கு அது ஒரு பாராயண புத்தகமாகத் திகழ்கிறது.

 " மஹேஷ்வரியாக , மஹாகாளியாக  , மஹாலட்சுமியாக  , மஹாசரஸ்வதியாக   "  இப்பிரபஞ்சத்தில்  ஸ்ரீ அன்னை எப்படியெல்லாம் வெளிப்பட்டு செயல்படுகிறார் என்பதனை "தி மதர்" புத்தகத்தில் விளக்குகிறார் ஸ்ரீ அரவிந்தர். இன்று ஆசிரமத்தில் அப்புத்தகம் ஆங்கிலத்தில் மட்டும் அல்லாது அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.

அன்று முதல் ஸ்ரீ அரவிந்தரோடு இருந்த  சத்சங்கக் கூட்டம் "ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்" என உருக் கொண்டது. ஸ்ரீ அன்னை அதன் முழு பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டு  சிறப்பாக ஆசிரமத்தினை  நிர்வகிக்கத் துவங்கினார்.

இந்நாட்களில் ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக அனுபவங்கள் ஒரே மாதிரியாகவும் , ஒன்றிற்கு ஒன்று உயர்வு அளிப்பதாகவும் அமைந்து இருந்தன. 

ஸ்ரீ அரவிந்தரின் காவியங்களில் முதன்மையானதான "சாவித்ரி" இல் ஸ்ரீ அன்னையின் அனுபவங்களே  வெளிப்பட்டு இருப்பதாக ஸ்ரீ அன்னையும் , ஸ்ரீ அரவிந்தருமே கூறி உள்ளார்கள். 

ஆசிரமத்தில் நிகழும் சிறு விஷயங்களில் இருந்து , சாதகர்களின் உயர் ஆன்மிக முன்னேற்றம் வரையிலும் எல்லோரும் ஸ்ரீ அன்னையையே சார்ந்து இருக்கத் துவங்கினர். 

 

 பிரபஞ்ச வளர்ச்சியில் "மனிதன்" என்பவன் முடிவு அல்ல , அடுத்த பரிணாமம் ஒன்று உண்டு எனக் கண்ட ஸ்ரீ அரவிந்தர் , அதனை அடைய முயலும் தனது யோக முறைக்கு "பூரண யோகம்" என பெயரிட்டார்.1950 ஆம் ஆண்டு Dec 5  அன்று தனது "பூரண யோகத்திற்கு " ஆகுதியாக தனது தேகத்தினையே துறந்து மஹா சமாதி அடைந்தார்.  டிசம்பர் 9 அன்று   ஆசிரம வளாகத்திலேயே ஸ்ரீ அரவிந்தரின் உடல் சமாதியில் வைக்கப்பட்டது.

அதன் பின் ஆசிரமத்தின் நிர்வாகம் மற்றும் ஆசிரமவாசிகளின் ஆன்மிக முன்னேற்றம் ஆகியவற்றின்   முழு பொறுப்பினையும் ஏற்று வழிநடத்தினார் ஸ்ரீ அன்னை. ஆசிரம வாசிகள் மட்டும் அல்லாது உலகின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாகிட ஸ்ரீ அன்னையினை நேரிடையாகவும் , கடிதம் மூலமும் தொடர்ந்து தொடர்புக் கொண்டபடியே இருந்தார்கள். 

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகக் கனவின் செயல்வடிவமாக ,   "ஆரோவில்" எனும் நகரினை புதுவையில் நிர்மாணித்திட எண்ணிய ஸ்ரீ அன்னை, 1968 ஆம் ஆண்டு அதற்கு அடிக்கல் நாட்டினார்.சமய , சமுதாய , கலாசார, தேச பிரிவுகளைக் கடந்த ஒரு புதிய மானுட சமுதாயத்திற்கான திறவுகோலாக இன்றும் ஆரோவில் திகழ்கிறது.

தனது மானுட வாழ்வின் பணியினை முடித்துக் கொண்ட ஸ்ரீ அன்னை 1973   ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று தன் உடலை நீத்தார்கள்.அவரது சமாதி ஸ்ரீ அரவிந்தரின் சமாதியோடு இணைத்து அமைக்கப்பட்டது. 

ஸ்ரீ அன்னையின் பக்தர்களுக்கு அன்பின் புகலிடமாக ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் சமாதிகள் இன்றும் திகழ்கின்றன. எண்ணிய கணத்திலே வந்து தனது அடியவரின் துயரினை தீர்க்கும் அற்புத அருள் வெள்ளம் ஸ்ரீ அன்னை அவர்கள். 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக