வியாழன், 23 பிப்ரவரி, 2012

பாபநாசம் அருள்மிகு கோடி லிங்க ஆலயம்


பாபநாசம்  சிவன்  கோவில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 52 k.m   தொலைவில் அமைந்துள்ளள்ளது. இது  நவ கயிலாயத்தில் முதல் ஸ்தலமான சூரிய ஸ்தலமாகும். அகத்தியர் பெருமானுக்கு சிவனார் திருமணக் காட்சி அருளிய அற்புத ஸ்தலம். பொதிகை மலையின் அடிவாரத்திலே அமைந்திருக்கும் ஆலயம். கோவிலை சுற்றிலும் நிறைய ஆன்மிக கேந்திரங்கள் உள்ளன. 


இந்த ஆலயத்தினைக்    கடந்து பொதிகை மலையின் மேலே போகும் பாதையில் பயணப் பட்டால், அகத்தியர் தீர்த்தம் என்னும் அருவியினை அடையலாம். அதிகாலை முதல் பின்மாலை 6 p.m  வரையிலும் சுற்றுலா பயணிகள் இந்த அருவியிலே குளித்து மகிழ்கின்றனர்.
இங்கு செல்ல பொதிகையடியில் இருந்து , வேன் செல்கிறது. மலை பாதை வழியாக நடந்தும் செல்லலாம்.                  ( மலை பாதை )


 
இந்த அருவியின் அருகிலேயே  கோடி லிங்க ஆலயத்திற்குச் செல்லும் படிகள் துவங்குகின்றன.படிகளின் எண்ணிக்கை குறைவு தான். கொஞ்சம் ஏறியவுடன் ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாவின் ஆசிரமம் வருகிறது. 
(தாமிரபரணி ஆறு)









இவர் பல ஆண்டுகாலமாக தனிமையில் இந்த வனத்திலே இருந்து தவம் புரிந்த , தற்கால பெண் துறவி ஆவார்.








சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்தான் அவர்  சமாதி அடைந்தார். தாமிரபரணி நதியிலே பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் கூட அந்த அம்மையார்  தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டது இல்லை . 




 (யோகினி  கிருஷ்ணவேணி அம்மா )


அந்த ஆசிரமத்தைக் வணங்கி மேலே சென்றால், அற்புதமான ஒரு சூழலிலே ஸ்ரீ கோடிலிங்க ஈஸ்வரரின் ஆலயத்தினை அடையலாம். 






ஆலயம் என்றால், உள்சுற்று , வெளிசுற்று எல்லாம் கிடையாது. ஒரு புறம் மலை, மறுபுறம் நதியின் மடு என இயற்க்கை சூழலில் அமைந்த ஆலயம். தொண்ணூறுகளில் நாங்கள் சென்றபோது ஆலயம் என்ற அமைப்புக் கூடக் கிடையாது.  ஆனால் தற்போது சிறு மண்டப அமைப்பிலே ஆலயமாக கட்டியுள்ளனர். 

ஸ்ரீ கோடிலிங்கம், ஸ்ரீ  லோகநாயகி அம்பாள், ஸ்ரீ அகஸ்தியர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. இவை தவிர , மலையிலே பாறைகளில் காணும் இடங்களில் எல்லாம் சிற்பங்கள் ,சிற்பங்கள்,சிற்பங்கள்...









 
                                                     ஸ்ரீ கோடி லிங்க ஈசர் ஆலயம்


 ஸ்ரீ அகஸ்திய மகரிஷி சிலை .முன்பு வெட்ட வெளியில் இருந்தது. தற்போது ஆலயத்தினுள் வைத்துள்ளனர்.









   சிவ பூஜை செய்யும் அகஸ்தியர் உருவம் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு கையில் கமண்டலமும் , மறு கையில் சிவலிங்கமும் கொண்டு அகத்தியர் காணப்படுகிறார்.











ஸ்ரீ முருகபெருமான் சிலை பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது.







 
   



 மலை பாறையில் சீதா ராமர் தம்பி லட்சுமணனுடன் , அருகில் அஞ்சலி ஹஸ்த ஆஞ்சநேயர் .






"ஹோ "என விழும் நீரின் சத்தம் , குரங்குகளின் க்றீச்சிடல்கள், மலை பொந்துகளில் வசிக்கும் பறவைகளின் கொஞ்சல்கள், மலை கோழி என ஒரு தனி உலகமாகவும்,    அதே சமயம் தெய்வீக அமைதியின் கம்பீரியத்துடனும்    அந்த இடம் அமைந்துள்ளது. 

நாம் போன சமயம் ஆலயம் பூட்டி இருந்தாலும், இரும்பு கிராதி வழியாக வழிபட முடிந்தது, த்யானம் என்பது என்ன என்று தெரியாதவர் கூட , இந்த அமைதியான இடத்திலே மிக சுலபமாக மன ஒருமைப்பாட்டினை அடையமுடியும்.

பௌர்ணமி அன்று இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு முழுவதும் இந்த வனத்திலே மக்கள் அச்சமின்றி கூடி வழிபடுகின்றனர். அன்னதானமும் நடைபெறுகின்றது. 

முடிந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்களேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக