புதன், 29 பிப்ரவரி, 2012

"தருணம் வந்தது"


1956 , பெப்ரவரி 29 ...  
இனிய மாலையில் ...

உடலை உருமாற்றும்
விளையாட்டுக் கூடத்திலே,
உலகையே உருமாற்றும்
உன்னத நிகழ்விற்க்காய்....

தன் சாதகர் குழுவோடு
சத்சங்கமமாய் அமர்ந்திருந்தார்  ஸ்ரீ  அன்னை.


" இன்னது நிகழும் " என
ஆங்கே யாரும் அறிந்திலர்
அவளைத்தவிர  ..

அன்னை
அனைவருக்கும்  மையமாக அமர்ந்தார் .
அனைவரும் இப்போது
'சூரிய காந்தியாய்' 
அவரை  நோக்கி .

ஸ்ரீ அன்னை ,
உயர் உண்மையின் வரவிற்காய்
எல்லோரையும்
ஒருமுறை உற்று நோக்கினார்.
 திறவாய் இருக்கச்  சொன்னார்.
 அனைவரின் அகத்திலும்  புகுந்தார்.

இப்போது
ஒவ்வொரு  சாதகரின் உள்ளேயும்
அவளே  "சாதனை" நாயகி !

அவர்
விழி மலர் மூடினார்.
மெய்யுணர்வை நாடினார்.
சிருஷ்டியின் வளர்ச்சிக்காய்
சிந்தையை கூராக்கினர்.

அவரின் அக   கண்கள்
மெல்லத் திறந்தன.
விழிகள் இரண்டும்
சூரிய-சந்திரராய்
விண்ணோக்கி உயர்ந்தன.
பின் 
மகிழ்விலே மலர்ந்தன.

அங்கே
பர  வெளியிலே
புதிய உலகிற்காய்   
பொற் கதவு ஒன்றைக்  கண்டார்.
அதை தகர்த்திட ..
உலகினை உயர்த்திட...
பொற் சுத்தியல் ஒன்றும் கண்டார்

"தருணம் வந்தது"
 என அன்னை

உவகை  கொண்டார்.

அக்கணத்திலே
ஸ்ரீ அரவிந்தரின் தியாகம்
மனதிலே ஒளிர்ந்தது.


அன்னை ,
வெற்றி திருமகளாய்
வீறு கொண்டு எழுந்தார்..
தங்க தாரகையாய்
சுத்தியலை  தாங்கினார்
பொற்கதவு தூள் தூளாக  அதை ஓங்கினார்


பட படவென
கதவினை உடைத்தார் .

கதவு  உடைந்தது,
பல நூறாய் சிதைந்தது.
சத்திய வாசல் திறந்தது.

அதிமன  சக்தி 
சட சடவென இப்பாரிடை
பொன்னொளி  வெள்ளமென பொழிந்தது.அற்புதம்! அற்புதம் !!
இங்கே ..
சத்திய ஜீவியம் பிறந்தது. 
புதிய பரிணாம விதை முளைத்தது.
மரணத்தை வெல்லும் யோகம் துளிர்த்தது.

ஸ்ரீ அன்னையின்  முகத்திலோ
வெற்றி புன்னகை பொலிந்தது.

இது
                 " இறைவனின் நாள் "
எனும் பிரகடனம்
அன்னையிடம் இருந்து பிறந்தது !

இனி ,
பாரெங்கும்
நாளும் ....
தவம் உயரும்  .
அறிவு வளரும் .
தீமை நலியும்,
வலிமை கூடும்.
சத்தியம் ஜெயிக்கும். 
 இதன் வீரியம் அறியா உலகம்
புதிய வீச்சினைக் கண்டு வியக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக