புதன், 29 பிப்ரவரி, 2012

கனக மழை


ஆதி சங்கரர்
பிறப்பிலேயே 
ஒரு பரம ஞானி .

தினம்
பிக்ஷை கேட்டு செல்கிறார்
தம் தர்மத்தை பேணி .

அன்று
அவர் பிக்ஷை கேட்டுச் சென்ற வீடு ,
நல்லவர்களின் கூடு .

அங்கு
 நாதமும்
வேதமும்
 நாளும் ஒலித்தன.   

 "பவதி பிக்ஷாம் தேஹி ! "
என அகம் நோக்கி
குரல் கொடுத்தார் சங்கரர்.

பிக்ஷை குரல் கேட்டு
அந்த இல்லாளின்
உள்ளம் குளிர்ந்து
"இன்றைய அதிதி வந்தார்"  என்று.

அதுவரை இறை உணர்வினில்
உறைந்துக் கிடந்தவள்
விரைந்து எழுந்தாள்.

அவள் கைகள் பரபரத்தது.
அவள் கை பட்டு
தானிய பானை சரசரத்தது .

வந்த அதிதிக்கு 
ஒட்டிய வயிறு நிறைய
சட்டியில் இருப்பதை
அளித்திட
ஒவ்வொரு சட்டியிலும்
கையினை விட்டு  அளைந்தாள்.
திடுக்கிட்டு மனம் உளைந்தாள்.

ஆம் .
அக்கினியை போற்றும்
அந்த இல்லத்தின்  பானைகளில்
நிறைந்து இருந்தது
வாயு மட்டுமே.

அந்த மாது
திகைத்தாள் .
உள்ளுக்குள் அழுதாள் ,
அதிதிக்கு  ஈய இயலா பாவி ஆனேனே என்று !

திக்கற்றவருக்கு தெய்வமே துணை
என
விண் நோக்கி தொழுதாள்.

அப்போது
அங்கொரு பானையிலே
ஒரு நெல்லிக் கனியினைக் கண்டாள்.
தன் 'கலி தீர்ந்ததென'` பேருவகைக் கொண்டாள்.

ஆயின் இதை எப்படி ஈவது
என மயங்கினாள்
பிக்ஷை இட தயங்கினாள்

ஆயின்
வேறு வழியின்றி
வாசல் விரைந்தாள் .
அதிதியைத் தொழுதாள்.

கனியினை ஈயும்போது நாணினாள்,
தன் இல்லாமை நிலை எண்ணி.

தலை தாழ்த்தி ,
உடல் கோணினாள்
தன் விதியினை  எண்ணி .

சங்கரர்
அம்மாதினைப் பார்த்தார்.
அவள் ஈகை குணத்தால் 
உள்ளம் பூத்தார்.

அவள் நிலைக் கண்டு
உள்ளம் கனிந்தார்.
செல்வ திருமகளை
மனதினால் பணிந்தார்.

தன் திருவாயினால்
ஸ்ரீ தேவியியை
கவியினால் புகழ்ந்தார். 

அன்னை ஸ்ரீ தேவி
சங்கரரின் பாட்டினால்
உள்ளம் குளிர்ந்தாள்.

மெல்ல முறுவலித்தாள்.
விண்ணின்று ஒரு கனக மணி
துளியாய் விழுந்தது.

அடுத்த அடுத்த துதிகளால்
தேவி   கனிந்தாள்.
அகம் குளிர்ந்தாள் .

கனக மணி சாரலாய் விரிந்தது.

தொடர்ந்த போற்றுதலால்
அன்னை முகம் மலர சிரித்தாள்.
 அவள் சிரிப்பினால்
விண்ணின்று
கனக மழை பொழிந்தது.

அந்த வீடெங்கும்
பொன்னொளி படர்ந்தது.
அங்கே இல்லாமை தொலைந்தது.
நாளும் தருமம் புரிந்திட
நல்ல செல்வம் நிறைந்தது.  

மங்களம் !
மங்களம் !
மங்களம் !

இந்த சரிதம்
நாளும் 
படிக்க, படிக்க
நம் 
வாழ்விலே வளம் சேரும்.
நல்ல நலம் சேரும்.
தெய்வ திரு சேரும். 

வாருங்கள்,  நாமும்
அந்த நாரணனின் தேவியினைப்
போற்றுவோம் !

1 கருத்து: